கலைக்களஞ்சியம்/அடோனிஸ்
Appearance
அடோனிஸ் : கிரேக்க புராணக் கதையில் வரும் ஓர் அழகிய இளைஞன். ஆப்ரொடைட்டி என்னும் அன்புத் தேவதை அவன்மீது காதல் கொள்ளுகிறாள். அவனுக்கு வேட்டையில் விருப்பம் மிகுதி. வேட்டையில் உள்ள விபத்துக்களைச் சொல்லி வேட்டைக்குப் போக வேண்டாமென்று அவள் அவனை எச்சரிக்கிறாள். ஆயினும் அவன் போய் ஒரு காட்டுப் பன்றியால் உயிரிழக்கிறான். துன்பத்தைத் தாங்கமுடியாமல் அவள் அவனுடைய இரத்தத்தை ஒரு அனெமொனி அல்லது காற்றுப்பூ என்னும் செந்நிறப் பூவாக மாற்றுகிறாள். புரோசெர்ப்பினா என்னும் பாதாள உலகத்துப் பெண் அவனை உயிர்ப்பிக்கிறாள். அதற்காக அவன் இருண்ட பாதாள உலகத்திலே அவளோடு ஆறுமாதம் இருக்கவேண்டியவனாகின்றான். மற்ற ஆறு மாதம் ஆப்ரொடைட்டியுடன் இருக்கலாம். இந்தக் கதை பருவங்களின் மாறுதலைக் காட்டுவது என்பார்கள்.