கலைக்களஞ்சியம்/அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர்,

விக்கிமூலம் இலிருந்து

அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர், (1881-1948): சிதம்பரத்தருகிலுள்ள அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர். இத்தகைய வள்ளன்மைக்காகச் செட்டிநாட்டு ராஜா என்னும் பரம்பரைப் பட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பெற்றவர். முத்தைய செட்டியாரின் மைந்தராகக் கானாடுகாத்தானில் 30-9-1881-ல் பிறந்தார். இவர் தமது தந்தையாரிடமிருந்து தொழில் முறை பழகி வியாபாரத்துறையில் மிகுந்த சிறப்பெய்தினார். 1910-ல் காரைக்குடி நகரசபைத் தலைவராகவும்,

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்

1916 -9-ல் சென்னைச் சட்டசபை உறுப்பினராகவுமிருந்து பணியாற்றினார். 1921-1935-ல் இராச்சியக் கவுன்சில் (Council of States) உறுப்பினராகவும், 1934-44-ல் மத்திய சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார். கானாடுகாத்தானில் லேடி பென்ட்லண்டு மருத்துவச்சாலையையும், சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியையும் நிறுவினார். அரசாங்கம் இவருக்கு 1922-ல் திவான்பகதூர்ப் பட்டமும், 1922-ல் சர் என்னும் பட்டமும் அளித்தது. 1927-ல் சிதம்பரத்தில் தமிழ்க் கல்லூரியையும், வடமொழிக் கல்லூரியையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும், 1928-ல் இசைக் கல்லூரியையும் அமைத்தார். 1928-ல் மேற்கொண்டு இருபது இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து மேற்கூறிய கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக நிறுவினார். 1932-ல் சென்னைப் பல்கலைக் கழகம் இவர்க்கு எல். எல்.டீ. பட்டமும், 1942-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டீ, லிட். பட்டமும் வழங்கின. பன்முறை மேனாடுசென்று பல விஷயங்களை அறிந்து வந்தார். சிதம்பரம், திருவண்ணாமலை, கரூர் போன்ற பல தலங்களிலுள்ள கோயில் திருப்பணிகளுக்குப் பொருள் உதவி செய்துள்ளார். இவர் செய்த தில்லை கோவிந்தராஜர் கோயில் திருப்பணி போற்றத்தக்கது. சிதம்பர நகர மன்றமும், பூங்காவும் இவருடைய கொடைகளாகும். இவர் மிகுந்த தமிழ் மொழிப் பற்றும் தமிழிசைப் பற்றும் உடையவர். புலவர்களை ஆதரித்தார். தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவரைத் தலைவராகவும், டாக்டர் சர். ஆர். கே. சண்முகம் செட்டியாரைத் துணைத்தலைவராகவும் கொண்ட தமிழிசைச் சங்கத்தை நிறுவினார். மறைவு: 15-6-48.