கலைக்களஞ்சியம்/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

விக்கிமூலம் இலிருந்து

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரால் நிறுவப்பட்ட மீனாட்சி கல்லூரியையும் அதற்கேற்பட்ட ரூபாய் 40 இலட்சம். பெறுமான சொத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்டு அவர் நன்கொடையாக அளித்த 20 இலட்சமும், சென்னை அரசியலார் அளித்த 27 இலட்சமுமாகிய உதவிகளை ஏற்று இப்பல்கலைக் கழகம் 1929-ல் நிறுவப்பெற்றது. இங்கு மற்றக் கலைகளுடன் பொறியியல், தொழில் நுட்பவியல், விவசாயம் முதலிய கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. தமிழ் மொழியையும் தமிழிசையையும் வளர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும். சென்னைக்கு 150 மைல் தூரத்தில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்தின் அருகில் இஃது அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 550 ஏக்கர் விளையாட்டு நிலம் 120 ஏக்கர். தபால் தந்தி நிலையங்களும், விருந்தினர் விடுதிகளும், மருத்துவச்சாலையும் இக்கழக எல்லையில் உள்ளன.

பொறியியற் கல்லூரி நிறுவுவதற்காக டாக்டர் அழகப்ப செட்டியார் 5 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். திருவாங்கூர் மகாராஜா மாணவர் விடுதிக்காக 1 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தனர். திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு நிலமும் தொகையுமாக 3 இலட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.

சென்னைக் கவர்னர் இதன் சான்சலராகவும் ராஜா அண்ணாமலை செட்டியாரின் வாரிசார் புரோ சான்சலராகவுமிருப்பர். பல்கலைக் கழக நிருவாகம் செனட்டு, சிண்டிகேட்டு என்ற பேரவைகளைக்கொண்டு நடைபெறுகிறது.