கலைக்களஞ்சியம்/அனுநாதம்

விக்கிமூலம் இலிருந்து

அனுநாதம் (Resonance) : இருமுனைகளும் திறந்திருக்கும் குழல் ஒன்றை ஒரு முனை நீரில் அமிழ்ந்திருக்குமாறு பொருத்திவைத்து, அதன் மறு முனையில் ஓர்

அனுநாதம்

இசைக்கவையைப் பிடித்துக் கொண்டு அதை ஒலிக்குமாறு செய்தால் குழாய்க்குள்ளிருக்கும் காற்று இசைக்கவையின் அதிர்வெண்ணுடன் அதிர்ந்து ஒலி தரும். இப்போது காற்று இயற்கையாக அதிரும் அதிர்வெண் வேறாக இருந்தால் ஒலியின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதிர வைக்கும் பொருளின் இயற்கை அதிர்வெண்ணுடன் காற்று அதிர்வதால் இது பலவந்த அதிர்வு எனப்படும். குழலைச் சரிப்படுத்தி, அதற்குள் இருக்கும் காற்றின் நீளத்தை மாற்றினால், அது குறிப்பிட்டதோர் அளவு இருக்கும்போது காற்றின் இயற்கை அதிர்வெண் இசைக்கவையின் அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும். இப்போது காற்றின் அதிர்வின் வீச்சு உச்ச நிலையை அடையும். இதனால் ஒலியின் அழுத்தமும் உச்சமாக இருக்கும். இவ்விளைவு அனுநாதம் அல்லது பரிவதிர்வு எனப்படும். ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளில் ஒன்றை அதிரச் செய்து, அதனருகே மற்றதை வைத்தால் அது தானாகவே அதிர்வதைக் காணலாம். இது இயற்கையில் மிகப் பொதுவாக நிகழும் விளைவு. இசைக் கருவிகளின் அனுநாதக் கலங்களில் (Resonators) அனுநாத விளைவு நிகழ்வதால் இசையின் அழுத்தம் அதிகமாகிறது.

மின்சார அனுநாதம் : தடை, தூண்டுமின் தடை, ஏற்புத்திறன் இம்மூன்றும் கொண்டமாறு மின்னோட்டச் சுற்றின் இயற்கை அதிர்வெண் குறிப்பிட்ட ஓர் அளவு இருக்கையில், சுற்றில் நிகழும் மின்னோட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்போது அச்சுற்றில் அனுநாதம் நிகழ்வதாகவும், இந்த அதிர்வெண் சுற்றின் அனுநாத அதிர்வெண் எனவும் கூறப்படும். தொடராக உள்ள தடை R எனவும், தூண்டுதடை L எனவும், ஏற்புத்திறன் C எனவும் கொண்டால், சுற்றின் மாறுமின் தடை

இதில், அடைப்புக்குள்ளிருக்கும் உறுப்பு, குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணுக்குச் சுன்னமாகலாம். இப்போது

சுற்றின் மாறுமின் தடை R என்ற மின்தடைக்குச் சமமாகும். இப்போது மாறு மின்தடையின் அளவு நீசமாக இருந்து மின்னோட்டம் உச்ச அளவை அடையும். அதிர்வெண்ணின் இந்த அளவே சுற்றின் அனுநாத அதிர்வெண்ணாகும். ஒரு தூண்டுமின் தடையையும், ஏற்புத் திறனையும் இணையாக இணைத்து அதிர்வெண்ணை மாற்றினால், குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணில் இவ்விரண்டின் விளைவுகள் ஈடாய்விடலாம். இப்போது இணை அனுநாதம் நிகழ்வதாகக் கூறப்படும். இணை அனுநாதச் சுற்றின் மாறுமின்தடை மிக அதிகமாக இருக்கும். தொடர் அனுநாதத்தில் சுற்றின் அதிர்வெண்ணுக்கும் மின்னோட்டத்தின் அளவுக்கும் உள்ள தொடர்பை வரைப்படம் காட்டும்.