உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அன்னெலிடா

விக்கிமூலம் இலிருந்து

அன்னெலிடா (Annelida) வளையப் புழுக்கள் என்னும் பிராணித் தொகுதி. இப் புழுக்களின் உடல் அறையறையாகப் பல வளையங்கள் ஒன்றன் பின் ஒன்று சேர்ந்து தொடர்போலக் காண்கிறது. வெளியேயும் இந்த அறைகளைக் குறிப்பதற்கு மோதிரம் போன்ற வளைவுகளும் அவற்றிற்கிடையே குறுகிய பள்ளங்களும் இருக்கின்றன. கடற்புழுவும், மண் புழுவும், அட்டையும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை.உடலினுள்ளே இருக்கும் உறுப்புக்களிலும் ஒரேவிதமான அமைப்புள்ள பல பாகங்கள் கண்டங்கண்டமாக ஒன்று சேர்ந்திருப்பதைக் (Metameric segmentation) காணலாம். உடம்பினுள்ளிருக்கும் அறையாகிய சீலோம் (Coelom), இரத்த மண்டலம், கழிவுச் சுரப்பிகள் (Nephridia), நரம்பு மண்டலம் ஆகிய இவற்றிலெல்லாம் இந்தக் கண்ட அமைப்பைக் காணலாம். தட்டைப்புழு (Flat worm). குடலிலுள்ள ஒட்டுண்ணியாகிய நாக்குப்பூச்சி (Round worm) ஆகிய இவற்றை விட அன்னெலிடாவின் அமைப்புச் சிக்கலானது. இந்தக் கண்ட அமைப்பு ஆர்த்ரொபோடா என்னும் பூச்சி முதலியவற்றைக் கொண்டுள்ள பெருந் தொகுதியிலும், தண்டுப் பிராணிகளிலும் (Chordata) பலவித உறுப்பமைப்பில் காணலாம். பார்க்க : புழு, வளையப் புழு.