கலைக்களஞ்சியம்/அயான்
அயான் (Ion) :மின்னேற்றங்கொண்ட அணுவோ, அணுத்தொகுதியோ அயான் என்று அழைக்கப்படுகிறது. அணுக்கள் எதிரான ஏற்றங்கொண்ட இரு பகுதிகளால் ஆனவை. இவ்விரு ஏற்றங்களும் சமமாக இருப்பதால் அணுவில் நிகர மின்னேற்றம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் ஓர் அணுவானது எலெக்ட்ரான்களை ஏற்றுலோ, இழந்தாலோ, மின்னேற்றங்கொண்டதாகிறது. இவ்வாறு அது அயானாகிறது. சாதாரணமாக எல்லா உலோகங்களும், ஹைடிரஜனும் எலெக்ட்ரான்களை இழந்து நேரயான்கள் ஆகும். அலோகங்களும், படிமூலங்கள் என்ற அணுத் தொகுதிகளும் பொதுவாக எலெக்ட்ரான்களை ஏற்று எதிரயான்கன் ஆகும்.
சில திரவங்களிலும், கரைவுகளிலும், நேரயான்களும், எதிரயான்களும் வெவ்வேறாகப் பிரிகின்றன. இவ்விளைவு அயானாதல் எனப்படும். இத்தகைய திரவங்கள் மின்சாரத்தைக் கடத்தி, மின்பகுப்பு (த.க.) என்ற விளைவைத் தோற்றுவிக்கும்.
வாயு மூலக்கூறுகளிலுள்ள சில எலெக்ட்ரான்களை விடுவித்தல், வாயுக்களை அயானாக்கல் எனப்படும். சுடரிலுள்ள வாயுக்களில் இவ்விளைவு நேரலாம். அல்லது புறவூதாக்கதிர்கள், எக்ஸ்-எலெக்ட்ரான்களாலோ, கதிர்களைப்போன்ற சக்தி வாய்ந்த கதிர்ப்புக்களாலோ மூலக்கூறுகளைத் தாக்கி இவ்விளைவை நிகழ்த்தலாம். சாதாரணமாக மின்சாரத்தைக் கடத்தாத வாயுவும் அயானானபின் அதைக் கடத்தும்.