கலைக்களஞ்சியம்/அரங்கு, கொட்டகை அமைப்பு

விக்கிமூலம் இலிருந்து

அரங்கு, கொட்டகை அமைப்பு (Stage and Theatre design): அரங்கு என்பது நாடகமோ, நடனமோ நடைபெறும் மேடை. மக்கள் உட்கார வசதியையும், அரங்கையும் கொண்ட கட்டடம் கொட்டகை எனப்படும். திறந்த வெளியில் ஒரு சிறு மேடையை அமைத்துத் தெருக்கூத்து நடத்தும் இடத்திலிருந்து நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களிலுள்ள மிகப் பெரிய கொட்டகைகள் வரை பலவேறு வகையான அரங்குகளும், கொட்டகைகளும் உண்டு. சினிமா என்னும் பொழுதுபோக்கு வகை தோன்றியபின் இதற்காகவும் பல கொட்டகைகள் தோன்றியுள்ளன.

பழங்கால இந்தியா : பழங்காலத்தில் கிராமங்களில் திறந்த வெளியில் நாடகங்கள் நடத்தப்பட்டன. கோயில்களில் அபிநயத்திற்குரிய அரங்கு கூத்தம்பலம் என அழைக்கப்பட்டது. நாடகசாலை என வழங்கிய பழங்கால நாடகக் கொட்டகையின் அமைப்பு, அக் காலத்தவரது கருத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தது. என்பதற்குச் சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களும், பரதருடைய நாட்டிய சாஸ்திரம் போன்ற வட மொழி நூல்களும் சான்றாகும். இந்நூல்களில் அரங்கிற்கும், நாடகசாலைக்கும் மிக விரிவான இலக்கணம் கூறப்பட்டுள்ளது. (பரதர் விவரிக்கும் மூன்றுவகை நாடகசாலைகளைப்பற்றி, நாடகம்-சமஸ்கிருத நாடகம் என்ற தலைப்பில் பார்க்க.)

நகரத்தின் மையமாகவும், பலர் வந்து கூட ஏற்றதாகவும், தேரோடும் வீதிகளுக்கு எதிராகவும் உள்ள இடத்தில் நாடகசாலை அமைக்கப்படவேண்டும். அது தக்க காவல் உள்ளதாக இருக்கவேண்டும். நாடக சாலையை அமைக்கும் நிலத்தின் தன்மையையும் பழங்கால நூல்கள் திட்டமாக வரையறுத்தன. நுண்ணியதும், உறுதியுடையதுமான மண்ணின் மேலேயே நாடகக் கொட்டகையை அமைக்கலாம். அம்மண் நறுமணமும், இன்சுவையும் உடையதாக இருக்கவேண்டும். நாடகசாலையின் தரை சமதளமாகச் சீராக இருக்க வேண்டும். நாடகசாலை தெய்வங்கள் கூடுமிடம், முனிவரது உறைவிடம், பறவைகளின் இருக்கை, பாம்புப்புற்று, யானைகளையும் குதிரைகளையும் கட்டும் கூடங்கள், போர்வீரர் யுத்தப் பயிற்சி செய்யும் இடங்கள் முதலியவற்றிற்கு அருகில் இருந்தால், அவை நாடகத்திற்கு இடையூறாகவும், நாடகம் அவற்றிற்கு இடையூறாகவும் அமையும்.

இவ்வளவையும் மனத்திற்கொண்டு அமைக்கப்பட்ட நாடகசாலையில் நேபத்தியம், அரங்கு, காணுநர் இருக்கை என்ற மூன்று பகுதிகள் இருக்கும். அவற்றுள் நேபத்தியம் என்பது நாடகத்திற்கு வேண்டிய இசைக் கருவிகளும், அவற்றை இசைப்போரும், வேடம் புனையத் தேவையான ஆடை, அணிகலன்களும் உள்ள இடம். அவையோர் அறியாது நடிகர்கள் வேடமணியவும், அரங்கை அடையும்வரை மறைந்திருக்கவும் அதில் வசதி இருக்கும்.

நாடகசாலையின் முகம்போல அதன் அரங்கு அமைந்திருக்கும். அது உயரமானதும் சமதளமானதுமான மேடை. ஆதியில் அரங்கில் வர்ணத்திரைகளும், மற்றக் கருவிகளும் இருக்கவில்லை. அழகிய பல திரைகளையும், எந்திர வசதிகளையும், சூரியவொளியையொத்த பிரகாசமான ஒளியமைப்பையும் உடைய அரங்கு பிற்காலத்தில் தோன்றியது. அரங்கில் தூண்களின் நிழல் விழாத வகையில் விளக்குக்களை அமைக்கவேண்டும். அரங்கானது கைப்பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட ஒரு முழு அளவு கோலால் ஏழு கோல்கள் அகலமும், எட்டுக் கோல்கள் நீளமும், ஒரு கோல் குறட்டின் உயரமும் கொண்டிருக்க வேண்டும். உத்தரத்திலுள்ள பலகைக்கும் அரங்கில் அகலவாட்டாக உள்ள பலகைக்கும் இடையே நான்கு கோல் உயரமிருக்கவேண்டும். அரங்கினுள் நுழையவும், வெளியே செல்லவும், அதில் இரு வாயில்கள் இருக்கவேண்டும். அரங்கின் இடப்புறத்திலுள்ள தூணிலிருந்து ஒருமுக எழினியும், வலப்புற முள்ள இரு தூண்களிலிருந்து நெருங்கி வருமாறு அமைந்த பொருமுக எழினியும், மேலே மறைந்திருக்குமாறு அமைக்கப்பட்டுத் தேவையானபோது கீழிறக்கப்பட்ட கரந்துவரல் எழினியும் அமைக்கப்பட்டன.

காணுந ரிருக்கை, அரங்கில் நிகழும் அனைத்தையும் வசதியாக இருந்து பார்க்க ஏற்றவாறு காண்போரது தரத்திற்குத் தக்கபடி அமைந்த ஆசனங்களைக் கொண்டிருக்கும். இதில் அரசரும், அரச குடும்பத்துப் பெண்களும் அமரும் அவையரங்கமும், அதைச் சுற்றிலும் பொதுமக்கள் அமரும் பகுதியும் இருக்கும். இப்பழங்கால அரங்கு அமைப்பு முறை அக்காலத்திய நாடகக் கலையின் மேம்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது.

பழங்கால ஐரோப்பா : பழங்காலக் கிரேக்க நாடகங்கள் கோயில்களினருகே நடத்தப்பெற்றன. நாடகத்தில் இசையும் நடனமுமே பிரதானமாக இருந்ததால், அக்காலத்திய அரங்கு வட்ட வடிவும் சமதளமுமான நிலமாக இருந்தது. இந்த நடனமேடை ஆர்க்கெஸ்ட்ரா என அழைக்கப்பட்டது. இதிலிருந்து இசைக் கருவிகளைக்கொண்டு இசை கூட்டும் குழுவிற்கே இப்பெயர் இக்காலத்தில் வழங்குகிறது. அதனருகே இருந்த மேடு ஒன்றில் மக்கள் இருந்து நாடகம் பார்த்தனர். சாதாரணமாக ஒரு சிறு குன்றினருகே அரங்கை அமைப்பது வழக்கம். நாடகத்தைப் பார்க்க மக்கள் குன்றின்மேல் கூடினர். பிற்காலத்தில் இக்குன்றையே படிப்படியாக வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசையொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன.

இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது.

ஆர்கெஸ்ட்ராவைக் கொண்ட பழங்கால அரங்கு

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீளமாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம்.

பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும்

ரோமானிய அரங்கு

பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந்தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவுகளைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங்கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாடகக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம்.

இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச்சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலிலிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங்களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயிலுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடைபெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட்டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்களில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன.

இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்திலிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்கவாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக்கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன.

இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாடகக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், 'தியேட்டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப்படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களிலும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி 'குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத்தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக்கப்பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப்பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண்மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்றமுள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின.

பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற்குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரிதாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன.

பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர்களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்திலும் சீனாவில் பழங்கால மரபுகள் கையாளப்பட்டு வருகின்றன. சீன நாடகக் கொட்டகை தனது அமைப்பில் எலிசபெத் காலத்திய ஆங்கிலக் கொட்டகையை ஒத்தது. ஆனால் கொட்டகை முழுதிற்கும் கூரை இருக்கும். அரங்கு எளிய அமைப்புள்ளதாகவே இருக்கும். அரங்கின் பின்புறத்தில் சித்திரத் தையலினால் அலங்கரித்த சீலையொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். நடிகர்கள் இதன் இடமாகவும் வலமாகவும் அரங்கிற்கு வருவார்கள். அரண்மனைக் கொட்டகைகளில் அரச குடும்பத்தார் அமரும் உப்பரிகைகளும், பொதுமக்கள் நிற்கும் குழியும் இருந்தன.

ஜப்பானில் நாடகங்கள் நடைபெறும் அரங்கு மரத்தினாலான மேடை. இதன் மேலுள்ள கூரையை நான்கு தூண்கள் தாங்கி நிற்கும். மூன்று பக்கங்களில் இது திறந்திருக்கும். இதன் பின்புறத்தில் மட்டும் தேவதாரு மரத்தின் சித்திரத்தையுடைய திரையொன்று இருக்கும். அரங்கின் வலப்புறத்தில் குறுகிய உப்பரிகையொன்று இருக்கும். இதை மூன்று தேவதாரு மரங்களின் சித்திரம் அலங்கரிக்கும். இம்மரங்கள் புவியையும், வானத்தையும், மக்களையும் குறிக்கும். இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் அரங்கின் பின்புறத்திலும், பின்னணிப் பாடகர்கள் அரங்கின் இடப்புறத்திலும் இருப்பது வழக்கம். காபூகி என்ற நாடகங்கள் விரிவான அமைப்புள்ள அரங்கில் நடைபெறும். இந்த அரங்கு ஐரோப்பிய அரங்கைவிடப் பெரிதாகவும், சுழலும் அரங்குகள் போன்ற எந்திரச் சாதனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரங்கிற்கு நீளவாட்டமாகப் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதை யொன்று உண்டு. இது ஊர்வலம் முதலிய நிகழ்ச்சிகளுக்கும், நடிகர்கள் அரங்கிற்கு வரவும் ஏற்றவாறு அமைந்திருந்தது.

தற்காலக் கொட்டகை : படச் சட்டத்தைப் போன்ற முகப்பையுடைய அரங்கும், குதிரை லாட வடிவான ஆசன வரிசைகளும் பல உப்பரிகைகளும் கொண்ட கொட்டகை தற்காலத்தில் மாற்றி யமைக்கப்பட்டு விட்டது. பழங்கால அமைப்பில் உப்பரிகையில் உள்ளவர்களும், வரிசையின் கோடிகளில் இருப்பவர்களும் அரங்கு முழுவதையும் நன்கு பார்க்க முடியாமல் இருந்தது. இதற்குப் பதிலாக ஆசனங்களின் வரிசை படத்திலுள்ளது போல் அமைக்கப்படுகிறது. கொட்டகையின் தரை அரங்கிலிருந்து சாய்வாக இருப்பதால், முன் வரிசையிலுள்ளோர் பின் வரிசையிலுள்ளோர்க்கு அரங்கு சரி வரத் தெரியாமல் மறைப்பதில்லை. சமூகத்தில் ஜன நாயகக் கருத்துக்கள் பரவியபின் கொட்டகையின் அமைப்பும் மாறியது. செல்வர்கள் சிலருக்காகப் பிரத்தியேகமாக இருந்த தனி அறைகள் மறைந்தன. தற்காலக் கொட்டகையின் பின் புறத்தில் ஒரே ஒரு உப்பரிகை மட்டும் இருக்கும். இரும்பையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தும் கட்டட முறைகளால் தூண்களே இல்லாமல் கொட்டகையை அமைக்க முடிகிறது. அரங்கிற்குள் நடைபெறும் நாடகம் காண்போரது உள்ளங்களையும், நடிகர்களது உணர்ச்சிகளையும் ஒருமைப்படுத்தி, அங்கு நடைபெறுவது செயற்கை நிகழ்ச்சி என்ற எண்ணத்தையே மறக்கச் செய்ய வேண்டும். ஆனால், படச் சட்டத்தையொத்த முகப்புள்ள அரங்கு உள்ளவரை இது இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய அரங்கை அமைப்பதிலும் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு புதுவகை அமைப்புள்ள கொட்டகைகளை அமைக்கப் பல அறிஞர்கள் திட்டம் வகுத்துள்ளனர். அமெரிக்க நாடக அரங்கு அமைப்பில் பெரு மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த நார்மன் பெல் கெட்டெஸ் (Norman Bel Geddes) என்ற அறிஞரது திட்டத்தில் கொட்டகையின் ஒரு மூலையில் முக்கோண வடிவான அரங்கு இருக்கும். பெரிய கும்மட்ட வடிவான கூரையின் கீழ் அரங்கும், காண்போரது ஆசனங்களும் இருக்கும். காட்சி மாற்றத்தின்போது அரங்கு, தரைக்குக்

தற்காலக் கொட்டகையும் அரங்கும்
அ–அரங்கு
ஆ–ஆசனங்கள்

கீழே தாழ்ந்து மீண்டும் மேலே வரும். ஆஸ்தீரிய அறிஞர் ஆஸ்கர் ஸ்ட்ரினாடு (Os ker Strinad). என்பவரது திட்டத்தில் கொட்டகை வட்டவடிவாக இருக்கும். காண்போரது ஆசனங்கள் அதன் மையத்தில் அமைந்திருக்கும். அரங்கு ஒரு பெரிய வளையம் போன்ற அமைப்புடன் சுழல ஏற்றவாறு இருக்கும். இந்த வளையம் சுழன்று, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காட்சியைக் காண்போருக்கு முன் கொண்டுவரும். இத்தகைய பலமுயற்சிகளி லிருந்தே வருங்கால நாடகக் கொட்டகை தோன்றவேண்டும்.

சினிமாக் கொட்டகை அங்குக் காட்டப் பெறும் காட்சிக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் அமைந்திருக்கிறது. இதில் குறைவான இடத்தில் மிகப் பல ஆசனங்களை அமைக்க வேண்டியிருப்பதால் இதை மிக நீளமாக அமைக்கத் தொடங்கினார்கள். இதை மிக அகலமாகக் கட்டினால், இரு பக்கங்களிலும் கோடியில் இருப்பவர்களுக்குப் படக்காட்சி விகாரமாகத் தெரியும். இதனால் இக்கொட்டகைகளில் ஒன்றன்மேலொன்றாக உள்ள உப்பரிகைகள் ஏற்றவை. கொட்டகைக்குள் நுழையும் கூடத்திற்குமேல் உள்ள காலி இடத்தில் சிற்றுண்டிச்சாலையையும் தாவன அறைகளையும் (Water closets) அமைக்கிறார்கள். 1927-ல் பேசும் படம் தோன்றியபின் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறியது. கொட்டகையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒலியானது தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டடத்தின் அமைப்பும், ஒலிபெருக்கிகளின் அமைப்பும் இருக்கவேண்டும். கொட்டகை நல்ல மேளக்கட்டுடன் இருக்கவேண்டுமானால், அது ஏறக்குறைய மனித மண்டையோட்டின் வடிவமாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சினிமாக் காட்சி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமல்லாமல் 12 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆகையால், மக்கள் கொட்டகைக்குள் எந்நேரத்திலும் சென்று, தேவையானபோது வெளியே செல்வார்கள். ஆகையால், ஒருவர் உள்ளே வரும்போதும், வெளியே போகும் போதும், மற்றவர்கள் படம் பார்ப்பதைப் பாதிக்காத வகையில் ஆசனங்களை அமைக்க வேண்டியிருக்கும். கண்ணுக்கு நலந்தரும் வகையிலும் திரையின்மேல் விழாமலும் அதில் வெளிச்சம் இருக்கவேண்டும். மின்சார விளக்குக்களை மிக்க திறமையுடன் அமைத்து இதைச் செய்கிறார்கள். தட்ப வெப்ப நிலையால் கொட்டகையிலுள்ளோர் பாதிக்கப்படாதவாறு உள்ளிருக்கும் காற்றைப் பதப்படுத்துவதும் அவசியமாகும். எல்லா வசதிகளும் கொண்டு, பல ஆயிர மக்களைக் கொள்ளும் மிகப் பெரிய கொட்டகைகள் அமெரிக்காவில் உள்ளன. டெலிவிஷன், இணைப்பார்வைக் காட்சி போன்ற புதுமைகள் பரவினால் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறும் என எதிர்பார்க்கலாம்.

மெட்ரோ சினிமாக் கொட்டகை, பம்பாய்.
உதவி : மெட்ரோ சினிமா, பம்பாய்.

அரங்கு அமைப்பு: இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை மேல்நாடுகளில் நாடக அரங்கு மிக விரிவான காட்சித் திரைகளையும் மற்றச் சாதனங்களையும் கொண்டிருந்தது. நாடகக் காட்சிகளின் சிறப்பினாலேயே புகழ்பெற்ற நாடகங்கள் இருந்தன. ஆற்றையும், மலையையும், கோட்டை கொத்தளங்களையும், எரியும் நகரையும், உள்ளது உள்ளவாறே காட்ட அக்காலத்தில் அரும்பாடுபட்டார்கள்; நிறையச் செலவு செய்தார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஹென்ரி இர்விங் என்ற புகழ் பெற்ற ஆங்கில நடிகர் ஷேக்ஸ்பியரது நாடகங்களை நடித்துக் காட்டியபோது இயற்கைத் தோற்றத்தைக் காட்டும் இம்முறை உச்சநிலையை அடைந்தது எனலாம். அக்காலத்திய அரங்கு இதற்கேற்றவாறு அமைந்திருந்தது. நடிகர்கள் திடீரெனத் தோன்றவும், மறையவும், காட்சிகளை விரைவாக மாற்றவும் ஏற்றவாறு அரங்கில் பல கண்ணிகள் இருந்தன. காட்சித் திரைகளை மேலே இழுக்க ஏற்றவாறு உயரமான பரண் அமைக்கப்பட்டது. ஜப்பானில் பழங்காலத்திலிருந்து வழக்கத்திலுள்ள சுழலும் அரங்கு மேல்நாடுகளிலும் வழக்கத்திற்கு வந்தது. இதன் உதவியால் பல காட்சிகனை முன்னதாகவே தயாரித்து வைத்து, ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் மாற்றமுடிகிறது. வண்டியின் மேல் காட்சிகளைத் தயாரித்து, அவற்றை அரங்கிற்கு இழுத்துவரும் முறையும், அரங்கைக் கீழே தாழ்த்திக் காட்சியை மாற்றும் முறையும் வழக்கத்திற்கு வந்தன.

நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்கு எனக் கருதப்பட்ட அக்காலத்தில் இந்த உபகரணங்கள் அனைத்தும் தேவையாக இருந்தன. ஆனால் இப்சன், பெர்னார்டு ஷா, செகாவ் முதலிய தற்கால நாடகாசிரியர்கள் தோன்றி, இக்கருத்தை மாற்றி, உலகையும் மக்களையும், மனித உணர்ச்சிகளையும் அறிய முயலும் ஆராய்ச்சிக் கூடங்களில் நாடக அரங்கும் ஒன்று என்ற புதுமைக்கருத்தைத் தோற்றுவித்தார்கள். ஓவியத்தில் கண்டு மகிழ்வது போன்ற காட்சிகளை நாடக அரங்கில் விரும்பும் காலம் மறைந்தது.

லிவர்ப்பூவிலுள்ள இசையரங்கு மண்டபம்
உதவி : பிரிட்டிஷ் கவுன்சில்

கார்டன் கிரெயிக் (Gordon Craig) என்னும் அறிஞர் தோன்றி, ஆங்கில நாடக அரங்கின் அமைப்பில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவித்தார். நாடகக் காட்சிகளில் இயற்கையான தோற்றத்தைவிடக் கற்பனையே முக்கியமானது என இவர் முடிவு செய்து, திறமையான குறிப்புக்களால் நாடகம் காண்போரது கற்பனைக்கு வேலை கொடுத்தும், நடிகர்களை அரங்கில் அமைக்கும் வகையிலிருந்தும் ஒளியையும் நிழலையும் தக்கபடி மாற்றியமைத்தும், நாடக ஆசிரியனுடைய உள்ளக்கிடக்கைகளையும், நாடகத்தின் உணர்ச்சிகளையும் காண்போர் உணருமாறு செய்தார். பல்வேறு அளவுள்ள செங்கட்டிகள், படிகள், தூண்கள் போன்ற எளிய பொருள்களையும் அலங்காரம் எதுவும் இல்லாத திரைகளையும் கொண்டே இவர், தம் முடைய காட்சிகளை அமைத்தார். ஜெர்மனியில் இதே கருத்துகளை வெளியிட்ட அடால்பே அப்பியா (Adolphe Appia) என்னும் அறிஞரைத் தொடர்ந்து, மாக்ஸ் ரைன்ஹார்டு(Max Reinhardt)என்பவர் இம்மாறுதல் களை வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இதே சமயத்தில் ரஷ்ய நாட்டிய நாடக அரங்கில் நிகழ்ந்த மாறுதல் களும் இவற்றிற்கு வழிகாட்டிகளாக அமைந்தன. குறிப் புக்களால் காட்சிப்பொருள்களைக் காட்டும் முறை ஜப்பானியருக்குப் புதிதன்று. அவர்களுடைய நாடக முறையொன்றில் ஒருசிறு பூ, பூந்தோட்டத்தையும், நீண்ட மூங்கிற்கழி பாலத்தையும் குறிக்கும். மேனாடுகளில் நிகழ்ந்த இம்மாறுதல்கள் ஜப்பானிய முறையை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். தற்கால ஓவியச் சிற்பக் கலைகளில் தோன்றியுள்ள மரபுகள் அனைத்தும் நாடக அரங்கில் கையாளப்பட்டுள்ளன.

அற்புதமான காட்சியை உள்ளது உள்ளபடி காட்டவல்ல சினிமா தோன்றியபின் , நாடக அரங்கில் ஏராளமான பொருட் செலவு செய்து, எத்தகைய காட்சியை அமைத்தாலும் ,அது பெரிதாகத் தோன்றுது. ஆகையால், கற்பனைக்கு இடந்தரும் எளிய காட்சி அமைப்புக்களே தற்காலத்தில் சிறப்பாக மதிக்கப்படுகின்றன. ஆகையால், இதற்கேற்றவாறு தற்கால அரங்கு குறுகலாய்விட்டது. அதன் முகப்பில் பழங்காலத்திலிருந்த அலங்காரங்கள் மறைந்துவிட்டன. காண்போர் உள்ள இடத்துடன் அரங்கு ஒன்றக இணையும் காலமே வந்துவிட்டது.

அண்ணாமலை மன்றம், சென்னை
உட்புறத் தோற்றம்

உதவி: தமிழ் இசைச் சங்கம், சென்னை

பல வடிவங்களிலும் விசேஷமான பல பயன்களுக்கு ஏற்றவாறும் மின்சார விளக்குகளைப் பெற முடிகிற்து. ஆகையால் அரங்கமைப்பில் நிகழ்ந்திருக்கும் பல மாறுதல்களுக்கு மின்சார விளக்குகள் அடிப்படையாக உள்ளன என்பதில் வியப்பில்லே. தற்கால அரங்கின் காட்சித் திரையைத் தீட்டும் ஓவியக்காரர் ஒளி அமைப்பாளரேயாவர். இவர் கையாளும் முறைகளால் காட்சி நம்முள் தோன்றுகிறது. இரண்டடித் தொலைவிலுள்ள மலையை இரண்டாயிரம் அடித் தொலைவிலுள்ளதுபோலவோ,அட்டையாலான உருவத்தைப் பெரும்பாலமாகவோ, வானளாவிய கட்டடமாகவோ, சுவருக்குப் பின்னுலுள்ள வானம் எல்லையற்றது போலவோ ஒளி அமைப்பினுல் காட்ட முடிகிறது. நடிகனின் குரலேவிட நாடகக் காட்சியின் ஒளித் தோற்றமே காண்போரது உணர்சிகளே விரைவாகவும் அதிகமாகவும் கட்டுப்படுத்துகிறது. ஒரு காட்சியின் உட்பொருளை விளக்க அதற்கேற்ற ஒளி இன்றியமையாதது. அரங்கில் எவ்வகை மாறுதலும் இன்றி, ஒளிமாற்றங்களாலேயே ஒரு நாடகத்தின் பல அங்கங்களையும் நிகழ்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒளி அமைப்பின் சிறு மாறுதல்களும் பாவத்தை அறவே மாற்றலாம்.

ஒளி அமைப்பு: பழங்காலத்தில் நாடக அரங்கைப் பந்தங்களால் ஒளி பெறச் செய்தனர்; பின்னர் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தும் வழக்கம் தோன்றியது. பதினெட்டாம் நூற்றாண்டுவரை இம்முறையை அதிகமாக வழங்கியது. இதன் பின்னர் எண்ணெய் விளக்குகள் வழக்கத்திற்கு வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எரிவாயுவைக் கொண்டு நாடகக் கொட்டகைகளில் விளக்கெரிக்கும் முறை தோன்றியது. இந்த விளக்குக்களில் மான்டில்களைப் பயன்படுத்தும் முறை தெரிந்தபின் இவற்றின் பயன் அதிகமாயிற்று. எரிவாயு விளக்குகளைத் தேவையானவாறு கட்டுப்படத்த முடிந்ததால், அரங்கின் ஒளியமைப்பைக் கட்டுப்படுத்தி விசேஷ விளைவுகளைக் காட்ட முடிந்தது. இதன் பின்னரே நாடகத் தின்போது காண்போர் உள்ள இடத்தின் ஒளியைக் குறைத்து, அனைவரது கருத்தையும் அரங்கில் நிலை பெறச் செய்ய முடிந்தது.

ஆனால் 1879-ல் எடிசன் என்னும் அறிஞர் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த பின்னரே பலதிறப்பட்ட

சுழலும் அரங்கைக்கொண்ட கொட்டகை
அ- அரங்குகள் ஆ- ஆசனங்கள்

விளக்குக்களின் ஒளியினால் அரங்கிற்கு ஒளி தரும் நவீன முறை வழக்கத்திற்கு வந்தது. பல ஆயிரம் மெழுகுவர்த்திகளின் ஒளியைத்தரும் சக்தி வாய்ந்த மின்சார விளக்கும், பரவளைவு வடிவான ஆடிகளும் கண்டுபிடிக்கப்பட்டபின், அரங்கில் ஏதாவது ஓர் இடத்தில் மட்டும் ஒளிதரும் விளக்குக்களை அமைக்க முடிந்தது. வெள்ள ஒளி (Flood light) விளக்குக்களைக் கொண்டு அரங்கின் சில பகுதிகளை மட்டும் பிரகாசமாக ஒளிரச் செய்கிறார்கள். வான வில்லையும், மேகங்களையும், கடலலைகளையும், வாண வேடிக்கைகளையும் அரங்கின் மேல் காண்பிப்பதற்கேற்ற சுழலும் விளக்குக்கள் பயனாகின்றன. பழங்காலத்திலிருந்து வழங்கும் கருவியான படவிளக்கினைத் தக்கபடி மாற்றியமைத்து, வெள்ளைத் திரையின் மேல் பலதிறப்பட்ட படங்கள் விழும்படி செய்து, சிக்கலான காட்சி அமைப்புக்களையும் காட்ட முடிகிறது. நிழற் படங்களையும், வானவெளியையும், தொலைவிலுள்ள காட்சிகளையும் காட்ட இம்முறை இணையற்றது. அரங்கிலும் கொட்டகையிலும் உள்ள விளக்குக்களைத் தேவையானவாறு கட்டுப்படுத்த, முன்னர் நெம்பு கோல்களும் வேறு எந்திரங்களும் பயனாயின. ஆனால் இப்போதோ ரேடியோக் குழல்களின் உதவியால் ஒரு பலகையிலுள்ள சில விசைகளைத் திருப்பி, இவ்வேலையை மிக எளிதாகவும் திருத்த மாகவும் செய்ய முடிகிறது. இத்தகைய சாதனங்களால் அரங்கின் ஒளியைக் கட்டுப்படுத்தும் முறை மேலும் வளர்ந்துள்ளது.

நூல்கள் : சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை; வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் நாடகவியல் ; S. Cheney, The Theatre, 3000 years of Drama, Acting & Stagecraft; E. Reynolds, Modern English Drama ; R. D. Mankad, Ancient Indian Theatre : Yajnik, Indian Theatre.