கலைக்களஞ்சியம்/அரசியலமைப்புத் திட்டங்கள்
அரசியலமைப்புத் திட்டங்கள்: அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞர் அற்சியல் அமைப்பே இராச்சியத்தின் உயிர் என்று கூறியுள்ளார். அரசாங்கம் எந்த நாட்டிற்கும் இன்றியமையாததாகையால், அரசியலமைப்பும் இன்றியமையாதது என்பதை முற்காலத்தவர்களும் அறிந்திருந்தனர். அரசியலமைப் பின் முக்கியமான அமிசங்களை அந்தந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இச்சட்டங்கள். பொதுமக்களின் பிரதிநிதிகளடங்கிய அரசியல் நிர்ணய சபைகளால் இயற்றப்பட்டவை. அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு. ஜெர்மனியின் 1919ஆம் ஆண்டின் வைமார் அரசியலமைப்பு, ஆஸ்திரேலியக் கூட்டாட்சி அரசியலமைப்பு, இந்திய அரசியலமைப்பு, இவற்றையெல்லாம் உதாரணங்களாக எடுத்துக்காட்டலாம். இங்கிலாந்தைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் அரசியலமைப்பின் விவரங்கள் ஒரு பத்திரத்திலோ பல பத்திரங்களிலோ எழுதப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தின் அரசியலில் முக்கியமான அமிசங்களுக்குப் பத்திரங்கள் அல்லது இயற்றிய சட்டங்கள் ஆதாரங்களாக இல்லை. இந்த வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்புக்களைப் பத்திரம் கண்ட அரசியலமைப்புக்களென்றும், பத்திரம் காணாத அரசியலமைப்புக்களென்றும் ஒரு பாகுபாடு வழங்குகிறது. ஆனால் இது ஒழுங்கான பாகுபாடன்று. இங்கிலாந்தின் அரசியலுக்குப் பெரும்பாலும் சம்பிரதாயங்களும் வழக்கங்களும் முக்கியமான ஆதாரங்களாயிருந்தபோதிலும், அரசியலின் சில அமிசங்கள் பார்லிமென்டால் இயற்றப்பட்ட சட்டங்களில்தான் காணப்படும். பார்லிமென்டு மந்திரிசபை முறை, மந்திரிசபையின் கூட்டுப் பொறுப்பு, மன்னர் வீட்டோ (Veto) சலுகையை உபயோகப்படுத்தாமை, மசோதா சட்டமாயியற்றப்படுவதற்கு முன் மூன்று முறை ஒவ்வொரு சபையிலும் படிக்கப்பட வேண்டுமென்பது முதலானவையெல்லாம் சம்பிரதாயங்கள். பார்லிமென்டுச் சீர்திருத்த முறைகள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஐக்கியம் முதலியவைகளுக்கெல்லாம் ஆதாரங்கள் பார்லிமென்டுச் சட்டங்களேயாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பு 1789-ல் கூடிய பிலடெல்பியா அரசியல் நிர்ணய சபையில் இயற்றப்பட்ட சட்டத்தில்தான் அடங்கியிருக்கிறது. அப்படியிருந்தும் சம்பிரதாயங்களாலும் வழக்கங்களினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களாலும் அச்சட்டத்தில் முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அரசியல் திட்டப்படி மாகாணங்களால்தேர்ந்தெடுக்கபட்ட வாக்காளர் மன்றத்தின் மூலமாய் நிருவாகத் தலைவர், மறைமுகமாக நியமிக்கப்படவேண்டும் என்பது முறை. ஆனால் வழக்கத்தில் இப்பொழுது பொது மக்களால் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு தடவைக்கு மேல் அதாவது மொத்தம் எட்டாண்டுகளுக்குமேல் அவர் பதவி வகிக்கக்கூடாது என்பது சம்பிரதாயமாயிருக்கிறது.
ஒரு நாட்டின் அரசியலமைப்பின் அமிசங்களைப் பரிசீலனை செய்யும்பொழுது தஸ்தாவேஜுகள், சம்பிரதாயங்கள், வழக்கங்கள், நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் இவைகளெல்லாவற்றையும் நோக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்புக்களை எளிதில் மாற்றக்கூடியவை என்றும், எளிதில் மாற்றக்கூடாதவை என்றும் பிரிப்பதுண்டு. இங்கிலாந்தும் நியூஜீலாந்தும் எளிதில் மாற்றக்கூடிய அமைப்புக்கள் ; மற்றத் தேசங்களின் அமைப்புக்கள் எளிதில் மாற்றக்கூடாதவை. நாட்டு மக்களின் பிரதிநிதிகளடங்கிய சட்டசபைக்கு அரசியல் முறைகளைச் சீர்திருத்தம் செய்ய அதிகாரமிருந்தால், அந்த அரசியலமைப்பை எளிதில் மாற்றக்கூடியது என்று சொல்லுகிறார்கள். ஆனால், சாதாரணச் சட்டங்களியற்றும் அதிகாரமும், அரசியல் சட்டச் சீர்திருத்தம் செய்கிற அதிகாரமும், தனித்தனி உறுப்புக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அல்லது அவ்வாறு செய்வதற்குத் தனி முறைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கள் எளிதில் மாற்றக்கூடாதவை என்று சொல்லுகிறார்கள். வளைந்து கொடுக்காத அரசியலமைப்புக்களிலும் சில அதிகக் கஷ்டமில்லாமல் மாற்றப்படலாம். அமெரிக்க ஐக்கிய நாடு, சுவிட்ஸர்லாந்து, பிரான்சு இவற்றின் அரசியல் சீர்திருத்தத்திற்குத் தனியான முறைகள் அமைப்புக்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற இரண்டு நாடுகளின் முறைகளைவிடப் பிரான்சு தேசத்து முறை மேல்தோற்றத்திற்குச் சுலபமான முறையாகக் காணப்பட்டாலும், சுவிட்ஸர்லாந்து அரசியலமைப்பு, பிரான்சு அரசியலமைப்பை விடப் பல தடவைகளில் சீர்திருத்தப்பட்டிருக்கிறது.
சில அரசியல் திட்டங்கள் நீளமாகவும் விரிவாகவும், மற்றும் சில சுருக்கமாகவும் இருக்கின்றன. நார்வே தேசத்து மக்கள் தங்களுடைய அரசியல் இலட்சியங்களையெல்லாம் 25 பக்கங்களில் அடக்கிவிட்டார்கள். இந்திய அரசியல் திட்டம் 395. பிரிவுகளும் 8 அட்டவணைகளும் கொண்ட 300 பக்கங்களுக்கு மேலடங்கிய தஸ்தாவேஜாக இருக்கிறது. அரசாங்க அமைப்புச் சட்டத்தில் என்னவெல்லாம் சொல்லப்பட வேண்டும் என்பது மக்களின் மனப்பான்மை,பொருளாதாரக் கொள்கைகள், கல்வி முன்னேற்றம், பழக்க வழக்கங்கள் இவற்றைப் பொறுத்திருக்கும். சாதாரணமாக எல்லாத் திட்டங்களும் அரசாங்கத்தின் முக்கியமான அங்கங்களையும், அதிகார உறைவிடங்களையும், அவைகளின் அமைப்பையும், அலுவல்களையும் தெளிவாக விவரிக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு, சுதந்திர அயர்லாந்து, இந்தியா, சோவியத் ரஷ்யா, பால்டிக் சமுத்திரப் பிரதேசங்களாகிய நார்வே, ஸ்வீடன் நாடுகள், இவைகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் குடிமை, அடிப்படை உரிமைகள், தேர்தல்கள், சிறுபான்மையோரின் நிலைமை என்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அமெரிக்க ஐக்கியநாடு, சுதந்திர அயர்லாந்து, இந்தியா ஆகிய இவைகளின் குடியரசுச் சட்டங்களின் பீடிகைகள் இந்தச் சட்டங்களியற்றிய மக்களின் பொது இலட்சியங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய அரசியலமைப்பிலும், சுதந்திர அயர்லாந்து அரசியலமைப்பிலும் அரசாங்க வேலை முறையில் அனுசரிக்க வேண்டிய கொள்கை யென்ற ஒரு பகுதி விசேஷமாக விருக்கிறது.
கூட்டாட்சி முறையை அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா, கானடா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன. இம்முறைக்கு வழிகாட்டி அமெரிக்க ஐக்கிய நாடு. இது அரசியலில் ஒரு முக்கியமான முறை. இந்தக் கூட்டாட்சி அமைப்பு நாடுகளில் இரண்டு சர்க்கார்கள் இருக்கின்றன. இரண்டும் ஆதிபத்திய அதிகாரத்தை மக்களிடமிருந்து நேரில் பெற்றிருக்கின்றன. அமைப்பில் சொல்லிய வரம்புப்படி வரி விதிக்கவோ, சட்டங்களியற்றவோ அவற்றிற்கு அதிகாரமுண்டு. ஒரு பகுதி அதிகாரங்கள் கூட்டாட்சி சர்க்காருக்கும், மற்றொரு பகுதி அதிகாரங்கள் இராச்சிய சர்க்காருக்கும், சில அதிகாரங்கள் இரண்டு சர்க்காருக்கும் கூட்டாகவும் பங்கிடப்பட்டிருக்கின்றன. இவ்விதமான மூன்று ஜாபிதாப் பங்கீடு இந்திய அரசியலமைப்பில் தவிர வேறு எந்த அரசியலமைப்பிலும் வழக்கிலில்லை. கூட்டாட்சி முறை நாடுகளில் கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டிருக்கும். பிரத்தியேகமாகக் கூட்டாட்சி அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படாத அதிகாரங்களெல்லாம் இராச்சியங்களைச் சேர்ந்தவை. இந்த முறையை ஆஸ்திரேலியா. அமெரிக்க ஐக்கிய நாடு, சுவிட்ஸர்லாந்து ஆகியவை பின்பற்றுகின்றன. கானடாவில் அரசாங்கங்களின் அதிகாரங்கள் சட்டமூலமாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், இங்குக் கூட்டாட்சி சர்க்கார் தான் மற்ற அதிகாரங்களுக்கு வாரிசு. 1867ஆம் ஆண்டுச் சட்டத்தில் இச்சர்க்காரின் அதிகாரங்களின் ஜாபிதா ஒன்றிருந்தாலும் அதிகத் தெளிவுக்காக ஏற்பட்ட அந்த ஜாபிதாவால் கூட்டாட்சிச் சர்க்காரின் அதிகாரம் குறையவில்லை. பொது அதிகார ஜாபிதா எப்படிப் பின்பற்றப்படுகிறது என்பது கூட்டாட்சி அரசியல் முறையில் ஒரு முக்கிய பிரச்சினை ; பொது ஜாபிதாவில் கண்ட ஏதேனும் ஒரு பொருள்பற்றி யியற்றும் சட்டம் முரண் பாடில்லாம லிருக்கவேண்டும். முரண்பாடிருந்தால் இராச்சியச் சட்டம் ரத்தாய்விடும்.
கூட்டாட்சி முறைக்கு எதிராக உள்ளது ஒற்றையாட்சி என்பது. பிரிட்டன், பிரான்சு, பெல்ஜியம், ஹாலந்து, நியூஜீலாந்து, நார்வே, சுவீடன், ஸ்பெயின் ஆகியவை இவ்வகுப்பைச் சேர்ந்தவை. ஒற்றைச் சர்க்கார் முறையில் அதிகாரப் பங்கீடு கிடையாது. எல்லா அதிகாரங்களும் அரசியல் அமைப்பின் ஒரே சர்க்காரில் குவிந்திருக்கும். சர்க்கார் அலுவல்கள் எளிதில் நடைபெறும்பொருட்டுச் சில அதிகாரங்கள் மாகாணங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. மாகாணங்கள் அதிகாரங்களைச் சரிவரச் செலுத்துகின்றனவா என்று தலைமைச் சர்க்கார் மேற்பார்வையிடலாம். மாகாண அரசாங்க முறைகளில் தலைமைச் சர்க்கார் தலையிடுவதற்கு வரம்பே கிடையாது. அவசியமிருந்தால் தலைமைச் சர்க்கார் எல்லா விஷயங்களிலும் சட்டமியற்ற முடியும்; நிருவாகமும் வகிக்க முடியும். கூட்டாட்சி அரசியல் முறைகளைப் பின்பற்றும் நாடுகளில் அரசியலமைப்புத் திட்டந்தான் உயர்வு; அந்த அரசியலமைப்புத் திட்டத்தில் கண்ட நிபந்தனைக்குட்பட்டு கூட்டாட்சி அரசாங்கமும், இராச்சிய அரசாங்கங்களும் நடந்து கொள்ளுகின்றனவா என்பதைக் கவனித்து, அத்திட்டத்தை மற்ற அங்கங்கள் ஆக்கிரமிக்காதவாறு பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமையாகும். ஆகவே அமெரிக்க ஐக்கிய நாடு, இந்திய யூனியன் இவைகளில் உச்ச நீதிமன்றம் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அநேக இராச்சியச் சட்டங்களையும், கூட்டாட்சி அரசாங்கச் சட்டங்களையும் அரசியல் திட்ட அமைப்பில் கண்ட ஷரத்துக்களுக்கு முரண்பாடாயிருந்தன என்று தீர்ப்புக்கள் அளித்து அச்சட்டங்களை ரத்து செய்திருக்கிறது. ஓர் அரசியலமைப்புத் திட்டத்தின் தன்மை, அது இயற்றப்பட்ட காலத்தையும், மக்களின் மனோபாவத்தையும் பொறுத்திருக்கிறது. கால நிலைமையும் மக்களின் மனோபாவமும் மாறலாம். அப்பொழுது அரசியலமைப்பும் அரசியலமைப்பின் மாறுதல்களின் தக்கவாறு மாறவேண்டும். ஓர் அரசியலமைப்பின் மாறுதல்களின் முக்கியமான நோக்கங்கள் நால்வகையாகும். முதலாவது, அத்திட்டம் எளிதிலும் மனப் போக்குப் போனபடியும் மாற்றமுடியாதபடி யிருக்கவேண்டும். இரண்டாவது, மாறுதலுக்கு முன் பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்படவேண்டும். மூன்றாவது, கூட்டாட்சியின் அதிகாரம் எதுவும் ஓர் அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாக மாற்ற முடியாதபடி யிருக்கவேண்டும். நான்காவது, மக்களின் தனி உரிமைகளோ, அல்லது அடிப்படை உரிமைகளோ, அல்லது சிறுபான்மையோரின் உரிமைகளோ போதுமான அளவு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நான்கு நோக்கங்களையும் தனியாகவோ அல்லது சேர்த்தோ அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்புத் திட்டச் சீர்திருத்த முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டமென்பதுதான் அரசாங்கத்துக்கு அடிப்படை. ஆகையால் அத்திட்டம் மிக்க மதிப்புடன் பாராட்டப்படவேண்டும். அது மிகவும் புனிதமானது என்கிற உணர்ச்சியிருந்தால்தான் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் வலுவும் உறுதியும் ஏற்படும். வீ. வெ.