உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரசியல்

விக்கிமூலம் இலிருந்து

அரசியல் : மனிதர்கள் எல்லோரும் சமூக வாழ்க்கையினர். பலர் ஒன்றாகக் கூடிவாழும் பண்பு அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. மனிதன் நல்வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தவே இராச்சியம் தோன்றி வளர்ந்து வந்துள்ளது என்று கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இவ்வாறு மனிதனுடைய செயல்களையெல்லாம் சமூக முறையில் ஆராயும் இயல்கள் பலவற்றில் அரசியலும் ஒன்று. அரசியலானது இராச்சியத்தின் தன்மை, அரசாங்கத்தின் இயல்பு முதலியவற்றின் உண்மையைக் கண்டு கூறும். ஒரு சமூகம் நிலைபெற்றிருப்பது, அதன் இராச்சியத்தையும் அரசாங்கத்தையும் பொறுத்திருப்பதால், அரிஸ்டாட்டில் அரசியலைத் தலை சிறந்த அறிவுப் பகுதி (Master Science) என்றார். இவ்வியல் ஒரு சமூகத்துள் வாழும் மனிதனுடைய செயல்களின் வரம்பையும் தன்மையையும் அளந்து காட்டும். மனிதன் செயல்களில் பிறரால் கட்டுப்படுத்த முடியாதவை அவன் எண்ணங்களும் கற்பனைகளுமே; ஆதலால் அவற்றை நீக்கி, மனித சமூகத்தின் ஏனைய செயல்களை யெல்லாம் அரசியல் ஆராய்வதோடு. அரசாங்கத்தின் பலவேறு அமைப்புக்களையும் ஒப்பிட்டு ஆராய்கின்றது. அன்றியும் மனிதர்கள் அமைக்கும் எவ்வகைப்பட்ட குழுக்களையும் பற்றி அது ஆராய்கின்றது.

இவ்வரசியலைச் சமூகக்கலை என்று கூறுவதுண்டு. மக்கள் கூடிவாழும் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளும் பொதுச் செயல்களைப்பற்றி யாராயும் கலைகளைச் சமூகவியல் (Sociology) என்று பொதுப்பட ஒரு தொகைப் பெயரால் இக்காலத்தில் குறிக்கின்றனர்.

இச்சமூகவியல் பொருளாதாரம், அறநூல், தருக்கநூல், மானிடவியல், சட்டம், வரலாறு முதலிய பல தனி இயல்களின் தொகையாகும். இவ்வகை இயல்கள் பௌதிகம், ரசாயனம், கணிதம் முதலிய இயல்களின் தன்மையினின்றும் வேறுபட்டவை. பௌதிகம் முதலிய இயல்கள் உயிரில்லாப் பொருள்களைப்பற்றி யாராய்கின்றன ; அவ்வாராய்ச்சியை ஆய்வுக்களங்களில் நாம் திட்டமிட்ட கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் மனிதனது செயலைப்பற்றி ஆராய்பவர்களாதலால் ஓர் ஆய்வுக் களத்தில் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்த முடியாது. அன்றியும் எப்பொருளைப்பற்றி அவர்கள் ஆராய்கிறார்களோ, அப்பொருள் எக்காலத்திலும் 'ஒரு தன்மையாக மாறாமல் நிற்பதன்று.

சமூக இயலைச் சார்ந்த இயல்களுள் அரசியல் பொருளாதாரத்தையே மிகவும் ஒத்தும் சார்ந்தும் இருக்கிறது. அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் தற்காலத்தில் நெருங்கின தொடர்பும் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இக்காலத்தில் தேசியத்திட்டமிடல் (National planning) எங்கும் காணும் பொதுப் பழக்கமாயிருப்பதால் பொருளாதாரத்துறையும், அரசியல் துறையும் ஒன்றற்கு ஒன்று நெருங்கிய உறவு கொண்டுள்ளன. பொருளாதாரம் தன் முடிபுகளை அறநூல் வாயிலாகவே நிறுவுகின்றது. இல்லையேல், அம்முடிபுகள் பயனற்றவையாயும் குற்றமுடையவையாயும் முடியும். அறத்தின் காரணமாக உண்டாகும் பொருளையே பொருள் என்று கூறுவது தமிழிலும் மரபு என்பது இங்குக் கருதத்தக்கது. அறநூல் தனியொருவரின் ஒழுக்கங்களைப்பற்றிக் கூறுகின்றது. அரசியல் சமூகத்தின் ஒழுகலாற்றை ஆராய்கின்றது. ஆதலால் அரசியலுக்கும் அறநூலுக்கும் உள்ள தொடர்பும் விளங்கும். எவ்வகையாராய்ச்சிக்கும் தருக்க நூற்பயிற்சியின்றியமையாதாதலால் அரசியல் ஆராய்ச்சியும் தருக்கநூல் முறைகளைப் பின்பற்றியே அமையும் என்பதும் விளங்கும்.

அரசியல் துறையில் ஆராய்ச்சிக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் எல்லாம் வரலாற்றிலிருந்தே பெறப்படுபவை. வரலாற்றில் நாம் கண்கூடாகக் கண்ட விவரங்களையும், பிறர்கண்டு தொகுத்துவைத்த விவரங்களையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சியே அரசியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சியாம். ஆகையால் அரசியல் ஆராய்ச்சிக்கு நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான விவரங்கள் பண்டைய வரலாற்றில் பொதிந்து கிடப்பவை என்பது பெறப்படும்; ஆயினும் சிலர் கூறுவதுபோல வரலாறு எல்லாம் பண்டைய அரசியல் என்றோ, அரசியல் எல்லாம் தற்கால வரலாறு என்றோ நிச்சயமாகக் கூற இயலாது. ஆக்டன் பிரபு கூறியுள்ளபடி, வரலாறு என்னும் ஆற்றுப்பெருக்கு, ஆற்றுப்படுகையில் விட்டுச் செல்லும் பொன் துகள்களே அரசியல் ஆராய்ச்சி என்னும் கலையாம். வரலாற்றின் விவரங்களை ஒப்புநோக்கி ஆராய்ந்து நாம் காணும் உண்மைகளே அரசியல் ஆராய்ச்சிக்கு உதவுவனவாம்.

மனிதனுடைய வாழ்க்கை முறைகளையும், அவன் சமுதாய வாழ்வில் செய்துவந்துள்ள ஆய்வுகளின் முறைகளையும், அவனது நாகரிக வளர்ச்சியையும் தொகுத்து ஆராயும் இயலுக்கு மானிடவியல் (Anthropology) என்னும் பெயர் வழங்குகின்றது. மானிடவியல், மனிதன் சமூகத்தின் உறுப்பாயிருந்து ஆற்றும் செயல்களையெல்லாம் ஆராய்ந்து காணும் உண்மைகளில் பல அரசியல் வரம்புக்குட்பட்டவை யாதலால் அரசியலுக்கும் மானிடவியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் விளங்கும்.

பிளேட்டோ என்னும் கிரேக்க அறிஞர் அரசியலைத் தத்துவசாஸ்திர அடிப்படையில் அமைக்க முயன்றுள்ளார். ஆதலால் அவருடைய அரசியற் கருத்துக்கள் பெரும்பாலும் சிந்தனை முறையில் அமைந்துள்ளவை. பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் உயிரியல் (Biology) அடிப்படையில் அரசியலை விளக்குகின்றார். மனிதன் உயிர் வாழ்வதற்கே அரசியல் வாழ்க்கை தேவையாயிருக்கிறது என்னும் கொள்கையைப் பின்பற்றி அரிஸ்டாட்டில் கூறுவதால், அவர் முறையை உயிரியல் முறை என்று கூறலாம். ஐரோப்பாவில் இடைக்காலத்திலும் ஏனைய நாடுகளில் நெடுங்காலமாகவும் அரசியல் நிலையங்களுக்கு இறையியலையே (Theology) ஆதாரமாக அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். கிறிஸ்தவ அறிஞர்களுடைய கொள்கைகள் இம்முறையையே பின்பற்றி வந்துள்ளன. இவ்வுலகப் பொருள்களுக்கும் அவ்வுலக அருளுக்கும் திருவள்ளுவர் தொடர்பு கூறியிருப்பதுபோல, மக்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பு கூறியவர் செயின்ட் அகஸ்டின் என்னும் கிறிஸ்தவ அறிஞர். 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த சில அறிஞர்கள் இராச்சியத்தின்தோற்றம் சமூக ஒப்பந்தத்தின்மூலம் ஏற்படுவது என்று கூறத்தொடங்கியபோது, அரசியலுக்குச் சட்ட முறையில் ஓர் ஆதாரம் கற்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகள், கடமைகள் முதலியவற்றைப் பற்றிய பிற்கால ஆராய்ச்சி முழுவதும் சட்டத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புபற்றி யெழுந்ததாகும்.

சென்ற சில நூற்றாண்டுகளாக விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிபுகள் அரசியல் ஆராய்ச்சியையும் பாதித்திருக்கின்றன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்த டார்வின் என்னும் உயிரியல் அறிஞர் இயற்கைத் தத்துவத்தைப் பரிணாம முறையில் விளக்க முயன்றார். இப்பரிணாமக் கொள்கை விஞ்ஞான ஆராய்ச்சியில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்ததால், அது எல்லாக் கலைகளுக்கும் பரவத் தொடங்கிற்று. அரசியல் ஆராய்ச்சியாளரும் மானிடவியல் முடிபுகளை மேற்கொண்டு, பரிணாம முறையில் மனித சமூகத்தின் அரசியல் வளர்ச்சியை விளக்க முற்பட்டனர். அவ்வாறே தற்காலத்தில் உள்ள ஐரோப்பியப் பேரறிஞரான ஐன்ஸ்டைன் என்பவரது சார்புக்கொள்கை (Relativity) எல்லாக் கலைகளையும் பாதித்துள்ளது. இதற்கு அரசியல் ஒரு விலக்கன்று. சார்புமுறையில் அரசியல் கோட்பாடுகளை நிருணயிப்பதும், பிரச்சினைகளை விளக்க முயலுவதும் தற்காலத்தில் அரசியல் ஆராய்ச்சியின் முயற்சியாயிருப்பது கவனிக்கத்தக்கது. மனிதன் செயல்களும் எண்ணங்களும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை எல்லோரும் அறிவர். மனித உள்ளத்தின் பல தளங்களையும் ஆராயும் உளவியல் (Psychology) இன்று பீராய்டு விளக்கிய புதுக்கருத்துக்களைப் பின்பற்றி மிக முன்னேறியிருப்பதால், குடும்பம் இராச்சியம் வரையுள்ள பல குழுக்களில் செயலாற்றும் மனிதன் அடிப்படை எண்ணங்களையும் கற்பனைகளையும், அவன்றியாமலே அவனை இயக்கும் மனோ சக்திகளையும் நாம் அறிந்து, சோதனை வாயிலாகத் தெளிவாக்க முடிகிறது. இந்நிலையில் அடிப்படையான மனித குணம், சமூகப்பண்பாடு ஆகிய இவற்றை உணரவேண்டிய அரசியலாராய்ச்சியாளருக்குத் தற்கால உளவியல் மற்றெல்லா வியல்களுக்கும் மேலான வழிகாட்டியாய் கூதவுகிறது. அவ்வக் காலங்களில் மனிதனது கருத்துக்களைப் பெரும்பான்மை பாதித்துவரும் கோட்பாடுகள் அவ்வக்கால அரசியற் கொள்கைகளையும் பாதித்து வந்திருப்பது மேற்கூறியவற்றால் புலனாகும். ரா. பா.

அரசியல்-கட்டுரைகள் : பார்க்க: அடிப்படை உரிமைகள், அதிகாரப் பிரிவினை, அமைப்பிற்குட்பட்ட அரசாங்கம், அரசாங்க அமைப்பு, அரசாங்கம், அரசியல் அமைப்புத் திட்டங்கள், அரசியற் கருத்துக்கள், ஆதிபத்தியக் கோட்பாடு, ஆட்சிவேண்டாக்கொள்கை, இராச்சியத்தின் தன்மை, ஏகாதிபத்தியம், ஒற்றாடல், கம்யூனிசம், குடியரசு, குடியுரிமை, கூட்டாட்சி, சர்வாதிகாரத்துவம், சிண்டிகலிசம், சோவியத் அமைப்பு, சோஷலிசம், தல ஆட்சி, பாசிசம், பார்லிமெண்டு நடைமுறை, மார்க்சிசம், வரவுசெலவுத் திட்டம், வாக்குரிமை, விகிதப் பிரதிநிதித்துவம், ஜனநாயகம் முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரசியல்&oldid=1462361" இலிருந்து மீள்விக்கப்பட்டது