கலைக்களஞ்சியம்/அரசி பேரறிக்கை
அரசி பேரறிக்கை: 1857-ல் தோன்றிய சிப்பாய்ப் போரை அடக்கியபின், பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசாங்கத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து தாமே மேற்கொள்ள முடிவு செய்தனர். கம்பெனியின் டைரக்டர்கள் அத்திட்டத்தை எதிர்த்து வாதித்தபோதிலும், இறுதியாக அரசாங்கத்தாரின் நோக்கந்தான் நிறைவேறியது. புதிய சட்டம் 1858 ஆகஸ்டு மாதம் பார்லிமென்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நவம்பர் 1ஆம் தேதி அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அவ்வேளையில் விக்டோரியா அரசியின் பேரறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. வைசிராய் கானிங் பிரபு அலகாபாத்தில் பெருங் கூட்டமொன்றைக் கூட்டுவித்து இப்பேரறிக்கையைப் பிரசுரித்தார்.
அவ்வறிக்கையில் இந்திய மக்களுக்குக் கீழ்வரும் உறுதிமொழிகள் கூறப்பட்டன : நீதிவழுவாது அரசாங்கத்தை ஒழுங்குபட நடத்துவது, மத விஷயத்தில் நடு நிலைமையை மேற்கொள்ளுவது, மேலும் போர் புரியவோ, இராச்சியத்தின் பரப்பைப் பெருக்கவோ நோக்கமின்றி, அரசாங்கத்தார் நாட்டு அரசர்களின் நிலையைச் சீர்குலைக்காமல் ஆதரிப்பது, அவர்களுக்குக் கம்பெனியார் அளித்திருக்கும் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் காப்பாற்றுவது, இந்தியக் குடிகளுக்கு மதம், வகுப்பு, இனம் இவ்வித வேற்றுமைகளைக் கருதாமல், அவர்களுடைய கல்வி, திறமை, உண்மையான நடத்தை முதலியவற்றை மட்டிலும் சீர்தூக்கி நாட்டு அலுவல்களில் நியமிப்பது, குடிகளின் நன்மையை நாடி இந்திய நாட்டின் கைத்தொழில்களைப் பெருக்குவது, பொது நன்மைக்கான பல நற்காரியங்களில் ஈடுபடுவது ஆகியவைகளாம். கே. க.