கலைக்களஞ்சியம்/அரச மரம்

விக்கிமூலம் இலிருந்து

அரச மரம் அத்திச் சாதியைச் சேர்ந்த மிகப் பெரிதாக வளரும் மரம். பாலுள்ளது. இலை 4-7 அங்குல நீளம், 3-4 அங்குல அகலமிருக்கலாம். அதன் மேற்பரப்பு மயிர் முதலிய வளர்ச்சி ஏதுமின்றி வழுவழுப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும். நுனி மிகவும் நீண்டு குறுகிக்கொண்டே போய் முடியும். இலையின் பரப்பும் நுனியும் இவ்வாறிருப்பதால் இதன்மேல் விழும் மழைநீர் மிக விரைவில் வழிந்தோடி விடும். அரசின் பூங்கொத்தைத்தான் காய் என்றும் கனி என்றும் கூறுகிறோம். இதனுள் நுண்ணிய விதைபோன்றிருப்பவையே உண்மையான அரசங்கனிகளாகும். இது அத்தி மஞ்சரிபோன்றதே. உருண்டையாக அரையங்குல விட்டமுள்ளது. சாதாரணமாக இலைக்கக்கத் திற்கு இரண்டு வீதம் இருக்கும். பழுத்தால் கருமை கலந்த ஊதா நிறமாக இருக்கும். ஆண் பூக்கள் சிலவே ; ஒவ்வொரு பூவிலும் 3 இதழ்களும் ஒரு கேசரமும் உண்டு. பெண் பூவில் 5 இதழ்கள் உண்டு. பூச்சி முட்டையிடும் மலட்டுப் பூக்களே மிகுதியாக இருக்கும். பழத்தைப் பறவைகளும் வௌவால், அணில் முதலியவைகளும் தின்னும். மக்களும் உண்பதுண்டு. பறவை முதலி யவை எச்சமிடும்போது அரசங்கனிகள் (அக்கீன்கள்), பனை முதலிய மரங்கள் மீதும் கோயில், வீடு முதலியவற்றின்

அரச மரம்
(சிறு கிளை)
சொட்டு நுனியுள்ள இலைகள்
கணுச் சந்தில் அத்தி மஞ்சரி
இலையடிச் செதில் மூடிய நுனிக்குருத்து

சுவர்மீதும் விழுந்து முளைப்பதுண்டு. சிறிதாக இருக்கும்போது மரம் தொற்றுச் செடிபோல வளரும். அரச மரம் வேலைக்குதவாது. இதன் பட்டை மருந்தாகப் பயனாகும். இம் மரத்தைப் புண்ணிய மரமாக இந்துக்களும் பௌத்தரும் கருதி வழிபடுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரச_மரம்&oldid=1454259" இலிருந்து மீள்விக்கப்பட்டது