கலைக்களஞ்சியம்/அரபு சங்கம்
Appearance
அரபு சங்கம் சவுதி - அரேபியா, எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜார்டன், யெமன், சிரியா, லெபனன் என்னும் அரபு நாடுகளின் மேற்போக்கான ஓர் அரசியல் சங்கம். 1945 மார்ச்சு 22-ல் ஏற்பட்டது. இதன் சபையில் இந்நாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் அங்கத்தினர் உண்டு. பெரும்பாலும் இச்சங்கத்தின் தலைமைச் செயலகம் கைரோவிலிருந்தே அலுவல் ஆற்றி வருகிறது. அரபு நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், அங்கத்தினர்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை வலுக்கட்டாயமின்றித் தீர்த்துவைக்க முயலுவதையும் நோக்கங்களாகக்கொண்டு ஏற்பட்ட இச்சங்கம் முக்கியமாக யூதர்களை எதிர்த்து வருகிறது. புதிய இஸ்ரவேல் நாடு நிறுவப்பட்டபோது இச்சங்கம் அதை எதிர்த்தது. இச்சங்கத்திற்கு மதிப்புக் குறைவா யிருப்ப தற்கு, இதன் ராணுவ பலக்குறைவு முக்கியக் காரணம் என்று கூறலாம்.