கலைக்களஞ்சியம்/அரியநாத முதலியார், தளவாய்
அரியநாத முதலியார், தளவாய் (?-1600) காஞ்சீபுரத்தை அடுத்த மெய்ப்பேடு என்னும் கிராமத்தில் ஓர் எளிய வேளாள குடும்பத்தில் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே தக்க உடற்பயிற்சியும், கல்விப் பயிற்சியும் பெற்றார். வயது வந்ததும் அரியநாதர் விஜயநகரத்துக்குச் சென்று, அங்கே செல்வாக்குடன் விளங்கிய நாகம நாயக்கரிடம் கணக்குப்பிள்ளை வேலையில் அமர்ந்தார். நாகமருடைய மகனான விசுவநாதரின் அரிய நண்பரானார்.
பின்பு விசுவநாத நாயக்கர் மதுரைக்கு நாயக்கராக நியமிக்கப் பெற்றார். அப்பொழுது அவர் அரியநாதரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவருக்கு மந்திரி பதவியையும் அளித்தார். விசுவநாத நாயக்கருக்கும், அவருடைய சந்ததியார்களான குமாரகிருஷ்ணப்பர், வீரப்பர் என்னும் மதுரை மன்னர்களுக்கும் அரியநாதர் தளவாயாக விளங்கினார்.
அரியநாதர் மதுரை நகரைச் சுற்றிக் கோட்டை மதிலைக் கட்டினார்; அகழிகள் அமைத்தார்; எழுபத்திரண்டு கொத்தளங்கள் கட்டினார் ; இராச்சியத்திலுள்ள எழுபத்திரண்டு பாளையக்காரர்களையும் கொத்தளத்துக்கு ஒருவராகப் படையுடன் காக்க ஏற்பாடு செய்தார்; மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி முதலிய பாகங்களில் நீர்ப்பாசன வசதிகள் செய்வித்தார்; ஆலயத் திருப்பணிகள் பல செய்தார். மதுரைச் சுந்தரேசுவரர் கோயிலில் பல பாகங்களைப் புதுப்பித்தார். அங்கேயுள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் குதிரை மீது வீற்றிருக்கும் இவருடைய சிலையை நாம் இன்றும் காணலாம். இவர் திருவரங்கத்திலும் பல திருப்பணிகள் செய்தார். எஸ். ஆர். பா.