கலைக்களஞ்சியம்/அரு மண்கள்

விக்கிமூலம் இலிருந்து

அரு மண்கள் (Rare Earths) : ஆவர்த்த அட்டவணையின் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த தனிமங்களின் உப்பு மூல ஆக்சைடுகள் இப் பொதுப்பெயரால் வழங்குகின்றன. இவற்றின் பொதுக் குறியீடு R203. ஆனால் சில அரு மண்கள் மட்டும் RO2 என்ற குறியீட்டை உடையவை. ஸ்காந்தினேவியா, சைபீரியா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய இடங்களில் மட்டும் இவை மிகச் சிறு அளவு காணக்கிடைக்கின்றன. ஆகையால் இவற்றின் கூட்டுக்கள் மிக விலையுயர்ந்தவை. இவற்றின் பண்புகள் இன்னும் முற்றிலும் அறியப்படவில்லை. இத்தனிமங்கள் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருப்பதால் இவற்றை வேறாகப் பிரித்தறிவதும் கடினம். தென்னாட்டில் திருவிதாங்கூர்க் கடற்கரை மணலிலுள்ள மானசைட்டு என்னும் பொருள் அரு மண் தனிமங்களது கனியங்களில் முக்கியமானது. சிரைட்டு (Cerite), அல்லனைட்டு (Allanite), சாமர்ஸ்கைட்டு (Samarskite), கடோலினைட்டு (Gadolinite), பெர்குசனைட்டு (Fergusonite), ஆர்தைட்டு (Orthite), கொலம்பைட்டு (Columbite) ஆகியவை மற்ற முக்கியமான அரு மண் கனியங்கள்.

ஸ்வீடனில் காணப்படும் ஒரு கருமையான கனியத்திலிருந்து கடோலின் (Gadolin) என்ற அறிஞர் 1794-ல் இட்ரியா என்ற பொருளைக் கண்டுபிடித்தார். 1804-ல் பெர்சீலியஸ், ஹைசிங்கர் (Hisinger) என்ற இரு விஞ்ஞானிகளும், கிளாப்ராத் என்பவரும் வேறொரு கனியத்திலிருந்து சீரியா என்ற பொருளைக் கண்டுபிடித்தார்கள். இதன்பின் வேறு பல அரு மண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இக்காலத்தில் பதினாறு அரு மண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இனிக் கண்டுபிடிக்கப்படும் அரு மண் எதுவும் இல்லை என்பதை அணு அமைப்புப் பற்றிய தற்காலக் கொள்கைகள் தெளிவாக்குகின்றன. அரு மண் தனிமங்கள் அனைத்தும் மூவலுவெண் கொண்ட தனிமங்கள். இவை வலிவான உப்புமூலத் தன்மையுள்ள கார ஆக்சைடுகளுக்கும், வலிவற்ற மூலமான அலுமினியாவிற்கும் இடையே உள்ளன. இவற்றின் உப்புக்கள் நீர் முறிவதில்லை. இவற்றின் குளோரைடுகளையும், புளோரைடுகளையும் மின்பகுத்துத் தனிமங்களைத் தனியே பிரிக்கலாம். இவ்வுலோகங்கள் மஞ்சள் வெண்மை நிறமும், பளபளப்பும் கொண்டவை. காற்றில் இவை எளிதில் மங்குவதில்லை. இவற்றின் கனியங்களிலிருந்து காரங்கள் ஹைடிராக்சைடுகளைப் படிவிக்கும். ஆக்சைடுகளைச் சுட்டு, அவற்றின்மேல் குளோரின் வாயுவைச் செலுத்தி, இவற்றின் குளோரைடுகளைப் பெறலாம்.

இத்தொகுதியிலுள்ள தனிமங்களை மூன்று உப தொகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் முதலாவது உபதொகுதியில் லாந்தனம் (La 138.9), சீரியம் (Ce 140.2), பிரசியோதிமியம் (Pr 140.9), நியோதிமியம் (Ne 144.3), இல்லினியம் (11 ?), சமாரியம் (Sa 150.4) ஆகிய தனிமங்கள் உள்ளன. இரண்டாவது உபதொகுதியில் யூரோபியம் (Eu 152.2), கடோலினியம் (Gd 157.3), டெர்பியம் (Tb 159.2) ஆகிய மூன்று தனிமங்கள் உள்ளன. மூன்றாம் உபதொகுதியில் டிஸ்புரோசியம் (Dy 162.5), ஹாமியம் (Ho 163.5), இட்ரியம் (Y 89.0), எர்பியம் (Er 167.7), தூலியம் (Tu 169.4),இட்டர்பியம் (Yb 173.5), லூட்டிசியம் (Lu 175.0) ஆகிய தனிமங்கள் உள்ளன.

மேற்கூறிய தனிமங்களுள் சீரியம், லாந்தனம், நியோதிமியம் ஆகிய மூன்றும் பொதுவானவை. யூரோபியம், டெர்பியம், தூலியம் ஆகியவை மிக அரியவை.

இத்தனிமங்களுள் சிலமட்டும் தொழில்களில் சிறிதளவு பயனாகின்றன. மற்றவை ஆய்வுகளத்தில் மட்டுமுள்ள விந்தைப் பொருள்கள். சீரியத்தை இரும்புடன் கலந்து தயாரிக்கப்படும் கலவையைத் தேய்த்தால் தீப்பொறிகள் தோன்றும். இக்காரணத்தால் இது சுருட்டுப் பற்றவைக்கும் கருவியில் பயன்படுகிறது. விமான எதிர்ப்புப் பீரங்கியில் பயனாகும் குண்டு, தான் செல்லும் பாதையைக் காட்டுமாறு செய்ய, அதில் சிறிது சீரியத்தைப் பயன்படுத்துகிறார்கள்.