கலைக்களஞ்சியம்/அர்ட்டிகேசீ

விக்கிமூலம் இலிருந்து

அர்ட்டிகேசீ (Urticaceae) பெரும்பாலும் சிறு செடிகள்.பலவற்றின் சுணை (Stinging hair). பட்டால் கடுக்கும். புறத்தோல் அறைகளுக்குள் சிஸ்டோலித் (Cystolith) என்னும் அணுக்கற்கள் உண்டு. தண்டு பெரும்பாலும் நாருள்ளது. இலை மாறுபட்ட அல்லது எதிர் ஒழுங்குள்ளது. தனியிலை. இடையடிச்செதில் சாதாரணமாக உண்டு. பூக்கள் மிகச் சிறியவை. அநேகமாக ஒருபாலின. பூங்கொத்துச் சாதாரணமாக வளரா நுனி மஞ்சரி. சிலவற்றில் மஞ்சரித்தண்டு பெரிதாகி, அதன்மேல் பூக்களெல்லாம் நெருங்கியிருக்கும். ஆண் பூவில் இதழ் 4-5. கேசரம் அதே எண்ணிக்கை; இதழ்களுக்கு எதிரிலிருக்கும். மொக்கில் அவை உள்ளுக்கு வளைந்திருக்கும். பிறகு வெளியே வேசமாக வில்போலத் திரும்பி வெடிக்கும். பெண் பூவின் இதழ் ஆண் பூவின் இதழ் அத்தனையே இருக்கும். சூலறை ஓரறையுள்ளது. ஒரே சூல்முடி. ஒரே விதை; நிமிர்ந்திருப்பது. கனி அக்கீன் அல்லது உள்ளோட்டுச் சதைக்கனி. விதையில் முளைசூழ்தசை யுண்டு. இந்தக் குடும்பம் அயன மண்டலத்திலும் சமசீதோஷ்ண மண்டலத்தின் வெப்பமான பாகங்களிலும் உண்டு. தென்னிந்திய மலைகளில் இதைச் சேர்ந்த பல செடிகள் உண்டு:—
1. கைரார்டினியா (Girardinia) நீலகிரிக் காஞ்சொரி.
2. லப்போர்ட்டியா (Laportea) யானைக்காஞ்சொரி, ஒட்டுப்பலா, யானைச்சொரியன். (சாதாரணப் பூனைக்காஞ்சொரி டிராஜியா (Tragia) சாதி. யூபோர்பி யேசீ என்னும் ஆமணக்குக் குடும்பத்தைச் சேர்ந்தது).
3. இலாட்டோஸ்டெம்மா (Elastostemma).
4. பைலியா மைக்ரோபில்லா (Pilea microphylla) துப்பாக்கிச் செடி. இந்தச் செடி, தோட்டங்களிலே பாதை யோரங்களில் நடுவது. இதன் கேசரங்கள் முதிர்ந்திருக்கும்போது செடியை அசைத்தால் மகரந்தத் தூள் புகைபோல வெளியில் எறியப்படும்.

இந்தக் குடும்பம் அல்மேசீ (எல்ம்), மோரேசீ (முசுக்கட்டைச் செடி அத்தி, பலா), கன்னபேசீ (கஞ்சா) குடும்பங்களுக்கு மிக்க இயைபுடையது. இதில் சுமார் 40 சாதிகளும் 480 இனங்களும் உண்டு. சில இனங்களில் உட்பட்டையிலுள்ள நார் மிகவும் பயன்படுவது. ராமீ என்னும் நார் பேமெரியா நிவியா (Boehmeria nivea) செடியில் உண்டாவது. மயோஷியா (Maoutia) அர்ட்டிகா செடிகளிலும் நார் எடுக்கிறார்கள்.