உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அலிகேட்டர்

விக்கிமூலம் இலிருந்து

அலிகேட்டர் முதலை வகுப்பைச் சேர்ந்தது. இது இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அமெரிக்க அலிகேட்டர், மற்றொன்று சீன அலிகேட்டர். இவற்றின் உடலமைப்பு, பழக்கங்களெல்லாம் முதலையைப்போன்றவையே. மிகப்பழைய காலங்களிலே 18 அடி நீளமும் இன்னும் அதிக நீளமுமுள்ள அலிகேட்டர்கள் இருந்தனவென்று அவற்றின் பாசில்களால் அறியக்கிடக்கிறது. இப்போது மிகப் பெரியது 10, 11 அடி இருக்கும். ஆண்கள் பெண்களைவிடப் பெரியவை. பெண் புல் முதலிய செடிகளைக் குவித்துக் கூடு கட்டும். அது 3 அடி உயரம் 6-7 அடி விட்டமுள்ளது. அதன் நடுவில் நனைந்திருக்கும். அந்த இடத்தில் முட்டையிடும். முட்டை கெட்டியான ஓடுள்ளது. கோழி முட்டையை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். சாதாரணமாக ஒரு தடவையில் 50 முட்டையிடும். தாய் தன் கூட்டைக் காக்கும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்ததும் 9 அங்குல நீளமிருக்கலாம். சில மாத காலம் அதாவது அடுத்த வசந்தகாலம் வரையிலும் அவை தாயோடு இருக்கும். ஓராண்டுக்கு ஓரடி நீளம் வளரும். இவ்வாறு ஆறு ஆண்டுகளுக்கு விரைவாக வளரும். பிறகு வளர்ச்சி - மிகவும் மெதுவாக உண்டாகும். அலிகேட்டர் ஐம்பது அறுபது ஆண்டு உயிரோடிருக்கலாம். பனிக்காலத்தில் அலிகேட்டர்கள், சேற்றுக்குள் ஆழமாக வளை தோண்டிப் புதைந்து கிடக்கும். அல்லது ஆற்றின் மடுக்களின் அடியில் நீரில் உறங்கிக் கிடக்கும். ஆண் அலிகேட்டர் மாடு கத்துவதுபோல ஒருவித உரத்த சத்தமிடும். அதன் தலையில் சுரப்பிகள் உண்டு. கஸ்தூரிபோன்ற மணமுள்ள ஒரு பொருள் அவற்றில் உண்டாகின்றது.

அலிகேட்டருக்கும் முதலைக்கும் சில வேறுபாடுகள் உண்டு. முதலை வாயில் கீழ்த்தாடையிலுள்ள நாலாவது பல் மேல் தாடையின் வெளிப்புறத்திலுள்ள ஒரு வளைவில் போய்ப் பொருந்தும். அலிகேட்டரில் அந்தப் பல் மேல்தாடையிலுள்ள ஒருகுழியில் போய்ப்பொருந்தும். முதலையின் முகம் சற்றுக் கூராக முடியும். அலிகேட்டருடைய முகம் அகன்றிருக்கும். இந்தியாவில் அலிகேட்டர்கள் இல்லை.