உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அலெக்சாந்திரியா

விக்கிமூலம் இலிருந்து

அலெக்சாந்திரியா எகிப்தில் நைல் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஒரு பட்டினம். இது கைரோவுக்கு வடக்கே 129 மைல் தொலைவிலுள்ளது. மக் : 9,25,081 (1947). மகா அலெக்சாந்தரால் ஆதியில் இந்நகரம் பாராஸ் (Pharos) தீவுக்கும் எகிப்துக் கடற்கரைக்கும் இடையிலிருந்த திட்டில் நிறுவப்பட்டது. பாராஸ் தீவிலிருந்த கலங்கரை விளக்கம் பண்டை உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்தது. அது கி. பி. 300-ல் நிறுவப்பெற்று - 370 அடி உயரமுடையதாயிருந்தது. இப்போது அத்தீவு தீவாக இல்லாமல் அதற்கும் எகிப்துக் கடற்கரைக்குமிடையில் மண் மேடிட்டுத் தீபகற்பமாக இருக்கிறது.

இந்நகரம் மிக விரைவில் வளர்ச்சியுற்றது. கி. பி. 640-ல் காலிப் ஓமார் இதைக் கைப்பற்றிய போது இங்கு 4,000 அரண்மனைகளும் 400 நாடக சாலைகளும் இருந்தனவாம். 10-15ஆம் நூற்றாண்டுவரை இவ்வூரின் பெருமை குன்றிக்கொண்டே வந்தது.1801-ல் நெப்போலியனுடைய பிரெஞ்சுப் படைகளுக்கும் அபர்கிராம்பி யின் தலைமையில் போரிட்ட பிரிட்டிஷ் படைகளுக்கும் இவ்வூர்ப்புறத்தே கடும்போர் நிகழ்ந்தது. 1882-ல் ஆங்கிலேயர்கள் மற்றுமொருமுறை இவ்வூரைத் தாக்கிக் கைப்பற்றி எகிப்தையே ஆக்கிரமித்துக்கொண்டனர். இந்நகரிலிருந்த பண்டைய நூல்நிலையமும் மருத்துவச் சாலையும் புகழ்பெற்றவை. முற்காலத்தில் மேனாட்டிலிருந்த நூல் நிலையங்களுள் இங்கிருந்ததுவே மிகப் பெரியது. இந்த நூல்நிலையத்தை எகிப்து மன்னர் I-ம் டாலமி கி. மு. 3ஆம் நூற்றாண்டில் நிறுவினார். இறுதியில் அதில் ஏழு இலட்சம் நூல்கள் இருந்தனவாம். ரோமானியர் அலெக்சாந்திரியாவைக் கி. மு. 47-ல் தாக்கிய போது இந் நூல்நிலையத்திலிருந்த நூல்களுள் பெரும்பாலனவற்றை எரித்துவிட்டார்கள். எஞ்சியிருந்தவற்றைக் கிறிஸ்தவர்கள் கி. பி. 319-ல் அழித்தனர். மீண்டும் நிறுவப்பெற்ற நூல் நிலையத்தை அராபியர்கள் கி. பி. 640-ல் எரித்தார்கள். இந் நூல்நிலையத்துடன் பொருட்காட்சிச் சாலை ஒன்றும் இருந்தது. அதில் அரசாங்கம் பல அறிஞர்களை வைத்து ஆதரித்து வந்தது. அலெக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த அறிஞர்களில் யூக்லிடு, அப்பலோனியஸ் முதலியவர்கள் மிக்க புகழ் பெற்றவர்கள்.

பண்டைக் காலத்து அலெக்சாந்திரியா நகரம் இப்போதுள்ள நகரத்துக்கு அடியிலே புதையுண்டு கிடக்கிறது. அதனால் தோண்டிப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. வீடுகளுக்கு அடிநிலையிடத் தோண்டும்போது பண்டை நகரப் பொருள்கள் கிடைக்கின்றன. பாம்பி (Pompey)யின் தூண் என்ற இடத்துக்கு அருகிலுள்ள வெளியிடத்தில் தோண்டிப் பல பொருள்கள் எடுத்துள்ளனர். அங்குப் பூமிக்கு அடியில் பல பெரிய கட்டடங்களும் காணப்படுகின்றன. ஒரு கட்டடத்தின் சுவரில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றப்பொருள்களைப் பொருட்காட்சிச் சாலையில் வைத்துள்ளனர். '