கலைக்களஞ்சியம்/அல்மேசீ

விக்கிமூலம் இலிருந்து

அல்மேசீ (Ulmaceae) : இதை அர்டிகேசீக் குடும்பத்தில் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தனர். இப்போது அல்மேசீ தனிக் குடும்பமாகக் கருதப்படுகிறது. இது இரட்டை விதையிலைத் தொகுப்பைச் சேர்ந்தது. இதில் மரங்களும், குற்றுச் செடிகளும் உண்டு. இலைகள் தனி ; மாறியமைந்தவை ; இரு பத்தியாக இருக்கும், இலையடிச் செதில் உண்டு. அது சிலவற்றில் காம்பின் இரு பக்கத்திலும் இருக்கும்; சிலவற்றில் காம்புக்கு உட்பக்கத்திலிருக்கும் (Intrapetiolar). பூக்கள் சிறியவை. இலைக்கக்கத்தில் கொத்தாக வளர்பவை. சாதாரணமாக இக் கொத்துக்களில் இருபாற் பூக்கள் இருக்கும் அல்லது இருபாற் பூக்களும் ஒருபாற் பூக்களும் கலந்திருக்கும். பெண் பூக்கள் சில சமயங்களில் ஒரு கொத்துக்கு ஒரே பூவாக இருக்கும். இதழ்கள் வட்டத்திற்கு நான்கு அல்லது ஐந்து ; இவை பிரிந்துமிருக்கலாம், அல்லது இணைந்து மிருக்கலாம். மகரந்தக் கேசரங்கள் இதழ்களத்தனை, அல்லது இரட்டித்த எண். சூலகம் இரண்டு சூலிலையுள்ளது; அறைக்கு ஒரு விதையுண்டு; கனி வெடிக்காதது. உள்ளோட்டுத் தசைக் கனி, அல்லது வெடியாச் சிறகுக் கனி(Samara). இக்குடும்பத்து மரங்களுள் ஒன்றான எல்ம் (Elm) உலகிற் சிறந்த மரங்களுள் ஒன்று ; ஐரோப்பா, வட ஆசியா, வட ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் வளர்வது. தென்னிந்தியாவில் உள்ளவை : 1. ஆயா (காஞ்சி, தபசி, வெள்ளாயா) ஹாலப்டீலியா இன்டெக்ரிபோலியா (Holoptelea integrifolia) பெரிய மரம். இலையுதிர்வது; பட்டை வெண்மையான சாம்பல் நிறமுள்ளது. புதிதாக வெட்டினால் நாற்றமடிக்கும். விறகுக்குதவும். 2. பீநாறி (கோடாலி முறுக்கி) செல்டிஸ் சின்னமோமியா (Celtis cinna' momea) மருந்துக்குதவும். 3. கொடி தான்றி (கி ரோனி யெரா ரெட்டிகுலேட்டா-Gironniera reticulata) பெரிய மரம்; பொறியியல் வேலைகளுக்குதவும். 4. அம்பரத்தி (ஓமன், முதலை) (ட்ரெமா ஓரியன்டாலிஸ்--Trema orientalis) கரி சுடுவதற்கு மிக ஏற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அல்மேசீ&oldid=1489168" இலிருந்து மீள்விக்கப்பட்டது