கலைக்களஞ்சியம்/அல்மேடா, பிரான்சிஸ்கோ டி

விக்கிமூலம் இலிருந்து

அல்மேடா, பிரான்சிஸ்கோ டி(சு. 1450-1510) போர்ச்சுகலுக்குச் சொந்தமான இந்தியப் பகுதியின் முதல் இராசப் பிரதிநிதி. இவர் மூர் சாதியினரோடு போரிட்டார். இராசப் பிரதிநிதியாவதற்கு முன்பே மடகாஸ்கர் தீவின் கிழக்குக் கரையைக் கண்டு பிடித்தார். கொச்சியில் தாம் வகித்துவந்த அதிகாரத்தை விட்டுவிட மனமின்றிச் சில காலம் போராடிய பின் ஆல்புகர்க் என்பவரிடம் இராசப் பிரதிநிதி உத்தியோகத்தை ஒப்படைத்துவிட்டு ஐரோப்பாவிற்குத் திரும்பினார். வழியில், கேப் டவுன் தற்போது இருக்குமிடத்தில் இறங்கித் தங்கியிருந்தார். அங்கு ஆப்பிரிக்கச் சுதேசிகளோடு ஏற்பட்ட ஒரு சண்டையில் கொல்லப்பட்டார் (மார்ச்சு 1, 1510). மு. ஆ.