கலைக்களஞ்சியம்/அழகர் மலை

விக்கிமூலம் இலிருந்து

அழகர் மலை மதுரைக்கு வடகிழக்கே 12 மைலிலுள்ளது. இதனைத் திருமாலிருஞ்சோலைமலை என்பர். இங்குத் திருமால் நின்ற கோலத்துடனுள்ள கோவில் இருக்கிறது. வாயிலருகே பதினெட்டாம்படிக் கறுப்பன் கோவில் இருக்கிறது. அருகில் ஓடும் சிற்றாறு, சிலம்பாறு அல்லது நூபுரகங்கை யெனப்படும். இது திருமால் குன்றமெனச் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. இங்கு ஒரு பிலமும், புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகளும் உண்டு என்றும் அந்நூலால் தெரிகிறது. திருமாலிருஞ்சோலைக்குப் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியவர்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்கள். சுவாமி திருநாமம் : அழகர், மாலலங்காரர். தாயார் : சுந்தர வல்லி நாச்சியார். தீர்த்தம் : சிலம்பாறு. விருட்சம் : சந்தனம். மலயத்துவச பாண்டியனுக்கும் தருமதேவதைக்கும் சுவாமி காட்சியளித்திருப்பதாகக் கூறுவர்.