உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழகியல்

விக்கிமூலம் இலிருந்து

அழகியல் (Aesthetics) : செடி கொடிகள், சூரிய சந்திரர், வானம் மேகம், மலைகள் நதிகள் எனப் பலவிதமான அழகுப் பொருள்களைக் கண்டு அனுபவிக்கிறோம். அவற்றில் காணும் அழகு இயற்கை அழகு. மனிதன் அதனுடன் நின்றுவிடவில்லை. தன் செயலைக் கொண்டும் அழகை உண்டு பண்ணுகிறான். இதன் விளைவாகத் தோன்றியவைகளே கலைகள். இவற்றில் காணும் அழகு செயற்கை அழகு. இயற்கை அழகு, செயற்கை அழகு இரண்டும் ஒன்றுதானா? இவற்றின் தொடர்பு யாது?

அழகு பற்றிய மேனாட்டு ஆராய்ச்சிகள் : அழகு என்பதைப் பற்றிய ஆராய்ச்சியை மேனாட்டார் பலவிதமாக நடத்தியுளர் :

1. கலைகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கொண்டு அழகின் தன்மையை அறியலாம் என்பர் ஒரு சாரார். அதாவது ஆதிமக்கள் நாடோறும் தம் வாழ்க்கையில் பயன்படுத்திய அடையாளங்களும் முறைகளுமே கலைகளாக மாறியுள்ளன என்பதாகும். காரியங்களை அறிவிப்பதற்காகக் கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் வரைந்தவை சித்திரக் கலையாகவும் சிற்பக் கலை யாகவும் ஆயின. போர்க்களத்தில் ஆடிய வெற்றி ஆட்டங்களும், முழங்கிய ஒலிகளும், நாட்டியமாகவும் பாட்டாகவும் உருவெடுத்தன. உழவர்கள் உழவு முதலிய வேலைகளைச் செய்யும்போது உற்சாகமாகப் பாடி வந்தனர். இப்பொழுது பாடல்கள் வேலைகளுக்கன்றித் தனிக் கலையாக மாறியிருக்கின்றன. இவ்வாறு ஆதி மனிதன் குடும்ப வாழ்விற்கும் சமுதாய வாழ்விற்குமாக ஏற்படுத்திக் கொண்டவைகள் நாளடைவில் கலைகளாக மாறின. இதிலிருந்து கலைகள் தோன்றி வளர்ந்த வரலாறு தெரிவதாயினும், மனிதன் அழகுள்ளவற்றை நாடியதற்கும், அழகில்லாதவற்றைத் தள்ளியதற்கும் காரணம் தெளிவாகவில்லை. கலைகள் வளர்ந்த வரலாற்றை அறிவதனால், அழகின் தன்மையையோ, கலையின் தத்துவத்தையோ அறிந்துகொள்ள இயலாது.

2. அழகுள்ளவை என்று கருதும் பொருள்களில் காணும் பொதுக் குணங்களை அழகின் முக்கியத் தன்மையாகக் கருதுவது மற்றோர் ஆராய்ச்சி. ஆனால் இது அவ்வளவு எளிதன்று. மலருக்கும் மானுக்குமுள்ள பொதுக் குணங்கள் எவை? சிலைக்கும் பாட்டுக்கும் உள்ள பொதுத் தன்மை யாது? இரண்டும் அழகானவை தான். ஆனால் அவற்றின் அழகு எதனால் ஏற்படுவது?

கிரேக்க அறிஞர் பிளேட்டோ , அழகு என்பது ஒத்த தன்மை என்பதால் ஏற்படுவது என்பர். இணக்கத்தால் ஏற்படுவது என்று பிளாட்டினஸும், ஒற்றுமையால் ஏற்படுவது என்று வேறு சிலரும், வேற்றுமையிடை ஒற்றுமையால் ஏற்படுவது என்று மற்றும் சிலரும் கூறுவர். சிலர் ஒழுங்கே அழகு என்று சொல்வர்.

அழகுடையவைகளில் ஒத்த தன்மையும், இலக்கணமும், ஒருவித ஒழுங்கும் காணப்பட்டாலும், அவை காணப்படும் பொருள்கள் அனைத்திலும் அழகு இருப்பதாகச் சொல்ல முடியுமா? நீர்யானையின் உறுப்பு அமைப்பில் அளவுப் பொருத்தமும், ஒத்த தன்மையும், வேலைக்கேற்ற இணக்கமும் காணப்படுவதாகக் கூறலாம். ஆனால் அதை ஓர் அழகான பிராணி என்று சொல்வது எப்படி?

3. இயற்கை அழகையோ, செயற்கை அழகையோ நுகரும்பொழுது உள்ளத்தில் பொதுவாக எழும் உணர்ச்சிகளே அழகின் அடிப்படை என்பது வேறு ஓர் ஆராய்ச்சி. இந்த உணர்ச்சிகளைப் பலர் பலவிதமாகக் கூறுகின்றனர் :

அ. அழகை நுகரும்பொழுது உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சியே அழகு என்று சிலர் கூறுவர். ஆனால் அழகுள்ளவை மகிழ்ச்சியை அளிப்பது உண்மையே யாயினும், அவை சில சமயம் வருத்தத்தையும் உண்டு பண்ணுகின்றன. இதைக் கவிதையிலும் நாடகத்திலும் இசையிலும் காணலாம். சில அழகான பாடல்கள் உள்ளத்தை வருத்துகின்றன. சில நாடகங்களில் சில காட்சிகளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பதுண்டு. ஆயினும் அவற்றை மறுபடியும் பார்க்க ஆவல் கொள்ளவே செய்கிறோம். இந்த மகிழ்ச்சி வேறு, சாதாரணமாய் அனுபவிக்கும் மகிழ்ச்சி வேறு. இது வருத்தமும் பயமும் வேதனையும் கலந்த ஒருவித மகிழ்ச்சியாகும். ஆதலால் அழகின் தன்மை மகிழ்ச்சியை அளிப்பதுதான் என்று கூறுவது சரியன்று.

ஆ. அழகை நுகரும்போது மனத்தில் முதலாவது தோன்றுவது கற்பனை. அதுவே அழகின் தன்மை என்று குரோச்சே (Croce) என்னும் இத்தாலிய அறிஞர் கூறுவர். இந்தக் கற்பனையைக் கலைஞன் அழகான பொருள்களில் அமைக்கின்றான். ஆனால் அப்படிக் கற்பனையை அமைப்பது அழகை அனுபவிக்க உதவியாயிருப்பினும், அது அழகுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது அன்று. கலைஞனுடைய வேலைக்கும் அது அவசியமென்பதில்லை. எப்பொழுது கலைஞனுடைய கற்பனை அவனுடைய உள்ளத்தில் உருவாகின்றதோ அப்பொழுதே அது வெளித்தோற்றம் அடைந்து விட்டதாகக் கருதலாம் என்றும், அதனால் அழகிய பொருளை உண்டாக்கிய கலைஞனுடைய கற்பனை அதைத் துய்ப்பவர் உள்ளத்திலும் உண்டாகும் என்றும், ஆகவே அழகின் தோற்றத்தை அனுபவிப்பவர் அழகின் கற்பனையையும் அறிந்தவரர்வர் என்றும் குரோச்சே கூறுகிறார்.

அவர் கூறுவதை அப்படியே ஒப்புக்கொள்ள முடியாது. கலைஞனுடைய கற்பனையை அறிந்தால்தான் அவன் அமைக்கும் அழகு முழுவதையும் அனுபவிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கற்பனை எழுந்து உருவானவுடனேயே அது வெளித்தோற்றம் அடைந்துவிட்டதாகக் கூறுவது சரியன்று. கற்பனை மட்டும் உள்ளவன் ஓவியன் ஆகிவிடமாட்டான். அவனுக்கு நிறங்களைச் சேர்க்கும் பழக்கமும், ஓவியங்களைத் தீட்டும் பழக்கமும் உண்டாயிருக்கவேண்டும். அதனுடன் கலைஞனுடைய கற்பனை முழுவதும் அவன் அழகை அமைக்கும் முன்னரே உருவாகிவிடும் என்று கூறுவது சரியன்று. அவன் அழகைத் தோற்றுவிக்கும் பொழுதே அவனுடைய கற்பனையும் மாறிமாறி உருவாகி விடும். பாடும்பொழுதே புதுப்புதுக் கற்பனைகள் தோன்றுவதை இசை பயில்வோர் அறிவர். பாடி முடிக்கும் பாட்டு முதலில் பாடகன் தன் உள்ளத்தில் உருவாக்கிய வண்ணமேதான் இருக்கவேண்டும் என்பதில்லை.

இ. அழகுடைய பொருள்கள் மனத்தில் எழுப்பும் உணர்ச்சிகளை அவற்றிற்கே உரியனவாக எண்ணி மகிழ்வதே அழகின் தன்மை என்று சிலர் கூறுகின்றனர். இதை அவர்கள் ஒன்றுணர்ச்சி (Empathy) என்பர். கோபுரத்தைப் பார்க்கும்போது நாம் மெய்ம்மறந்து அதனுடன் ஒன்றாகி ஆகாயத்தை எட்டிப் பிடிக்கும் ஆற்றலும் துணிவும் பெறுகிறோம். நம்முடைய ஆற்றலையும் துணிவையும் அதற்கே உரியனவாக ஆக்கிவிடுகிறோம். இதுவே அதன் அழகில் ஈடுபடுவதன் காரணம் என்பது அவர்கள் கருத்து. இது ஒரு முக்கியமான தத்துவம். கலையில் ஈடுபட்டு மெய்ம்மறந்துவிடுவது யாவரும் அறிந்ததே. அந்த மனோபாவம் இல்லாதவர்கள் அழகை அனுபவிக்க முடியாது. ஆயினும் அழகுள்ள பொருளுடன் ஒன்றாய் விடுவதாகவும் நம் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அதற்கு அளித்துவிடுவதாகவும் சொல்வது மிகையாகும். இவ்வாறு சில அறிஞர் அழகை நுகரும்போது உண்டாகும் உணர்ச்சிகளைக் கொண்டு அழகின் தன்மையை நிருணயிக்க முயல்கின்றனர். ஆனால் உணர்ச்சிகளில் பொதுத் தன்மையை அறிய வேண்டுவது அவசியமாயினும், அவற்றால் ஏற்படும் மகிழ்ச்சியே அழகென்றோ, அல்லது மனத்தில் தோன்றும் கற்பனையே அழகின் இயல்பு என்றோ, அல்லது மனத்தில் தோன்றும் மனோ பாவங்களைப் பொருள்களுக்கு அளிப்பதே அழகை அனுபவிக்கும் விதம் என்றோ கூறுவது சரியன்று. இவை யெல்லாம் அழகை அனுபவிப்பவர் மனத்தில் தோன்றினாலும் இவையே அழகின் தன்மை என்று கூற முடியாது. அதை அறிவதற்கு அந்த அனுபவத்தைச் சிறிது தெளிவாக ஆராயவேண்டும்.

ஓர் ஓவியத்தைப் பார்த்து மகிழ்கிறோம். அதன் அழகில் மெய்ம்மறந்துவிடுகிறோம். உள்ளத்தில் சில எண்ணங்கள் எழுகின்றன. இவற்றை ஆராய்ந்தால் இந்த எண்ணங்கள் அழகான எப்பொருளை நுகரினும் உண்டாகும் என்பதும், அழகான பொருளை யார் நுகர்ந்தாலும் உண்டாகும் என்பதும், அழகை நுகரும்பொழுது மட்டுமே தோன்றும் என்பதும் புலனாகும். இவற்றிலிருந்து அழகின் தனிக் குணங்களை அறிந்து கொள்ளலாம்.

அழகின் தனிக் குணங்கள் : முதலாவதாக அழகான பொருளைப் பார்க்கும்பொழுது நம்மனத்தில் எழும் எண்ணம் அந்தப் பொருள் நமக்கு அழகாகத் தோன்றுகிறது என்னும் எண்ணமன்று, அழகை நுகரத்தக்க அறிவும் உணர்ச்சியும் உடையவர் எல்லோர்க்கும் அது அழகாகவே தோன்றும் என்னும் உறுதியேயாகும். அந்தச் சமயத்தில் பிறர் அழகுடையதாக ஒத்துக் கொள்ளுவார்களோ என்ற ஐயம் எழுவதில்லை. எல்லோர்க்கும் அழகாகவே தோன்றும் என்ற உறுதியே சில நிமிடங்களேனும் காணப்படும். இரண்டாவதாக, அழகுள்ள பொருளைப் பார்க்கும்பொழுது இது உண்மையான பொருளா அல்லது கற்பனையில் எழுந்த பொருளா என்ற எண்ணமும் தோன்றுவதில்லை. கொடியில் பூத்த மலரா அல்லது கற்பனை செய்த மலரா என்ற கேள்வியில் நாம் அக்கறை கொள்வதில்லை. மூன்றாவதாக, இந்த அழகுடைய பொருளை எவ்விதமேனும் உபயோகிக்க இயலுமா என்னும் கேள்வியும் எழுவதில்லை. வாளின் கைப்பிடியில் செதுக்கயுள்ள வேலைப்பாடுகளைக் கண்டு மகழும் பொழுது அதன் உபயோகத்தையோ, வேறு தன் மைகளையோ ஆராய்வதில்லை. ஆராயப் புகுந்தால் அப்பொழுது அழகை நுகரும் மனோபாவம் அகன்று போகும். இந்த மூன்று தன்மைகளும் ஒருங்கே உள்ள மனோநிலையானது அழகைக் கண்டு மகிழும் பொழுதுதான் உண்டாகும். அதை உண்டுபண்ணுவது தான் அழகின் ஆற்றல்.

இந்திய ஆராய்ச்சி : பண்டை இந்திய அறிஞர் அழகின் தத்துவத்தைத் தெளிவாக அறிந்திருந்தனர். அழகின் தன்மை இது என்று அலங்கார சாஸ்திரங்கள் மூலம் இலக்கணமுறையிம், நாடகம், நாட்டியம், காவியம் மூலம் இலக்கியமுறையிலும் தெளிவாக விளக்கியிருக்கின்றனர். நாடகத்தை எழுதுபவன் கலைஞன். அதைப் பார்த்து அதன் அழகில் ஈடுபட்டு அனுபவிப்பவன் ரசிகன். அவன் மனத்தில் தோன்றும் பாவங்களும் ரசங்களும் அவனை மகிழும்படி செய்துவிடுகின்றன. அந்த அனுபவத்தை ஆராய்வதே அலங்கார சாஸ்திரங்களின் நோக்கம்.

முக்கியப் பாவரசங்கள் எட்டு அல்லது ஒன்பது என்று பரதரும் பெரும்பாலான நாட்டியச் சாஸ்திர நூல்களும், பத்து என்று பின் எழுந்த சில நூல்களும் கூறுகின்றன. கலைஞன் இந்த ரசங்களை அளிக்கும் நிகழ்ச்சிகளையும் கதா பாத்திரங்களையும் பொறுக்கி அமைக்கின்றான். அதைக் காணும் ரசிகன் அதற்கேற்ற அறிவும், உணர்ச்சியும், மனோபாவமும் உள்ளவனாக இருப்பான். ரசிகன் உள்ளத்தில் சில நிலைத்த உணர்ச்சிகள் (ஸ்தாயிபாவங்கள்) அமைந்திருக்கும்; இதன் காரணமாக ரசிகனுடைய உள்ளத்தில் கதையைப் படிப்பதாலோ, நாடகத்தைப் பார்ப்பதாலோ தூண்டப்பட்டு, உணர்ச்சிப் பெருக்கெடுத்து மகிழ்ச்சி பொங்குகின்றது. பலவிதமான உணர்ச்சிகள் பலவிதமான ரசங்களை உண்டுபண்ணும். இவற்றை அனுபவிப்பதே ரசிகனுடைய தன்மை. அழகு தருகின்ற மகிழ்ச்சியானது மற்றப் பொருள்கள் தருகின்ற மகிழ்ச்சியைப் போன்றதன்று. அது விவரிக்க வொண்ணாத ஒருவித மகிழ்ச்சி என்று கூறுவர். இதனாலேயே ரசிகன் மனோநிலை யோகியின் மனோநிலையை ஒத்ததாகக் கருதுவர். அழகு தருகின்ற மகிழ்ச்சி யானது முத்தி நிலையில் அடையும் மகிழ்ச்சியை ஒத்தது என்று அலங்கார சாஸ்திரங்கள் கூறுகின்றன. அழகிலிருந்து மகிழ்ச்சியேயல்லாது வருத்தமோ, பயமோ, வேதனையோ எவ்வுணர்ச்சியும் எழாது.

இந்த மனோநிலை நமக்கு ஒரு நிறைவு உணர்ச்சியை அளிக்கிறது. இதன் பயனாகவே ரசிகன் மகிழ்கின்றான், பரவசமடைகின்றான். இதுவே அழகின் தத்துவம். அழகிற்கு இந்தச் சக்தி எங்கிருந்து வந்தது? இதற்கு விடை கூற இயலாது. ஆனால் இந்தச் சக்தி இருப்பதினாலேயே ஒரு பொருள் அழகுள்ளதாக ஆகிறது. இது இயற்கை அழகிற்கும் செயற்கை அழகிற்கும் பொருந்தும். அழகின் தன்மை இரண்டிலும் ஒன்றே. கலைப் பொருள் இயற்கைப் பொருள்போல் இருந்தாலும் அல்லது வெறும் கற்பனைப் பொருளாகவே இருந்தாலும் அழகின் அடிப்படையான தன்மை மாறுவதில்லை.

மக்கள் ஆதிமுதல் அழகை நுகர்ந்து மகிழ்ந்து வந்ததோடு அழகையே கடவுளாகப் போற்றியும், கடவுள் தத்துவத்துக்கும் அழகுக்குமுள்ள சம்பந்தம் பற்றி ஆராய்ந்தும் வந்தனர். அவ்விதம் ஆராய்ந்த மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகளில் முக்கியமானவர் பிளாட்டினஸ் என்னும் கிரேக்க அறிஞராவர். உண்மை, நன்மை, அழகு என்னும் மூன்றுமே வாழ்வின் அற நிலைகள் என்றும், அவை மூன்றும் பூரணமாக நிரம்பிய ஒன்றே பரம்பொருள் என்றும், ஆன்மா, அறமும் அழகும் பெறும் பொழுது கடவுள் தன்மை அடைகின்றது என்றும் அவர் கூறுகின்றார். கடவுளைக் காணாதவன் அதை நன்மையாக எண்ணி, அதை அடைய விரும்புவான். கடவுளைக் கண்டவன் அதை அழகாக எண்ணிப் போற்றுவான். அதுவே ஆன்மாக்களின் உன்னதக் குறிக்கோள். அதை அடைய வேண்டுமானால் உலக போகங்களில் மனத்தைச் செலுத்தாமல் உன்னதச் செயல்களில் ஈடுபட்டுப் பேரழகாகிய கடவுளைக் காணக் கூடிய அளவு ஆன்மா தன்னை அழகுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய கருத்து.

வேதத்தின் சாரமாகிய உபநிடதங்களும், கடவுளைப் பூரணம் அதாவது சத்-சித்-ஆனந்தத்தின் நிறைவு என்று கூறுகின்றன. விகாரங்கள் நிறைவுக்கு விரோதமாதலால் ஆனந்தம் அழகினாலேயே உண்டாவது என்று அறிஞர்கள் உரை கூறுவர். உலகத்தில் அழகுடையனவாக இருப்பவை அனைத்தும் ஈசுவரனுடைய அமிசமே. சத்தியம், சிவம், சுந்தரம் (உண்மை நன்மை , அழகு) நிறைந்தவர் கடவுள் என்பது ஆகம புராணங்களின் கருத்து. இது பிளாட்டினஸ் கருத்துடன் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

பழந் தமிழரும் கடவுளை அழகுப் பொருளாகவே கொண்டு வழிபட்டு வந்தனர். அவர்கள் அவ்வழகுப் பொருளுக்குக் கொடுத்த பெயர் முருகு-முருகன் என்பது. இம்முருகன் வழிபாடு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டில் வழக்கிலிருந்தது என்பர் அறிஞர். இவ்வழகைக் 'கைபுனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பு' என்று நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் கூறுவர்.

தமிழ் பிறந்த இடமும், தமிழ் வளர்த்த அகத்தியர் வாழ்ந்த இடமும், சங்கம் மருவிய இடமுமான பாண்டி நாட்டின் பழைய மக்கள் கடவுளை ஆலவாய்ச் சொக்கன் என்ற பெயரால் வழிபட்டனர். சொக்கு என்பதன் பொருள் பேரழகு. வைணவப் பழம்பதியாகிய திருமாலிருஞ்சோலையில் உள்ள கடவுளை அழகன் என்றே தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். யான் எனது என்னும் செருக்கற்று வழிபடுவோரே அவ்வழகனைக் காண்பர் என்பது தமிழ்ப் பெரு முனிவர்கள் கருத்து. பார்க்க : அலங்கார சாஸ்திரம். அ. சு. நா. பி.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அழகியல்&oldid=1455440" இலிருந்து மீள்விக்கப்பட்டது