உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழகுக் கலைகள்

விக்கிமூலம் இலிருந்து

அழகுக் கலைகள் : கலை என்பதற்குத் திவாகர நிகண்டு 'கல்வி' என்று பொருள் கூறுகிறது. மனிதனால் செய்யப்படாதவற்றை இயற்கை என்றும், மனிதனால் செய்யப்படுவனவற்றைக் கலை என்றும் கூறுவது பொதுவான வழக்கம். மனிதன் செய்வதை எல்லாம் கலை என்று கூறுவதில்லை. அறிவும் பயிற்சியும் கொண்டு செய்வதையே கலை என்பர். அத்தகைய கலைகள் அறுபத்து நான்கு என்று இந்திய நூல்கள் கூறும். ஐரோப்பிய வரலாற்று மத்திய காலத்தில் மேனாட்டார் இலக்கணம், தருக்கம், அணியியல், வானவியல், இசை, கணிதம் ஆகிய ஏழையும் கலைகளாக வகுத்திருந்தனர். இக்காலத்துப் பல்கலைக் கழகங்கள் கல்வியைக் கலைக்கல்வி என்றும் விஞ்ஞானக்கல்வி என்றும் பிரித்திருப்பதில் கலைக்கல்வி என்பது மேற்கூறியவற்றைக் குறிக்கும்.

ஆனால், பொதுவாக மக்கள் கலை என்று கூறும் போது அழகுக் கலைகளையே குறிப்பிடுவர். அழகுக் கலை என்பது அழகுணர்ச்சியை எழுப்புவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருப்பதாகும். அத்தகைய அழகுக் கலைகள் சிற்பம், ஓவியம், கட்டடச்சிற்பம், இசை, கவிதை, நாடகம், நடனம் முதலியனவாம். நகைகள் செய்தல், நந்தவனம் வைத்தல், ஆடை நெய்தல், கலங்கள் வனைதல் போன்ற தொழில்களும் அழகுணர்ச்சியை எழுப்பக் கூடியனவாக அமையின் அழகுக் கலைகளாகவே கருதப்படும். ஆனால் அவற்றை அறிஞர்கள் இரண்டாந்தரத்து அழகுக் கலைகள் எனவே மதிக்கிறார்கள்.

அழகுக் கலையின் நோக்கம் அழகுணர்ச்சியை உண்டாக்குவது ஒன்றே என்றிருப்பினும், சில வேளைகளில் அவற்றைப் பயன் கருதிப் பயில்வதுமுண்டு. வியாபார விளம்பரத்துக்காக ஓவியங்களும், புரட்சி செய்யுமாறு மக்களைக் கிளப்புவதற்காகப் பாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

அழகுக் கலைகளிடம் ஆன்ம எழுச்சி, பரந்த தன்மை என்ற தலையாய இரண்டு இயல்புகள் காணப்படும். அழகுக் கலையை உண்டாக்குவதும் நுகர்வதும் ஆன்ம எழுச்சியின் விளைவேயாகும். மதுரைக் கோயிற் கோபுரத்தைக் கட்டிய கலைஞன் பக்தி நிறைந்தவன் என்பதில் ஐயமில்லை. அதுபோல், பக்தி சிரத்தை நிறைந்தவர்களே அதன் அழகு முழுவதையும் துய்க்க முடியும். அழகுக் கலைகள் எல்லா நாட்டு மக்களுக்கும் இன்பம் தரும். தாஜ்மகால் முஸ்லிம்களால் அமைக்கப் பட்டிருப்பினும் உலக மக்கள் அனைவரும் அதைக் கண்டு வியக்கின்றனர்.

சிற்பம், ஓவியம், கட்டடச் சிற்பம் ஆகியவை ஆதியில் மனிதன் குகைகளில் வாழ்ந்த நாளிலேயே தோன்றியுள்ளன. அவ்வுண்மையை அவர்கள் குகைகளில் வரைந்துள்ள ஓவியங்களிலிருந்தும், இறந்தோரைப் புதைத்துக் கற்குவியல்கள் அமைத்திருப்பதிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்.

அழகுக் கலைகள்-கட்டுரைகள் : இத் தலைப்பின்கீழ் இசை, ஓவியம், சிற்பம், நாடகம் முதலிய பகுதிகள் தரப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உள்ள முக்கியமான கட்டுரைகளைப்பற்றி உரிய இடங்களில் குறிப்புப் பார்க்க.