உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அவந்தி

விக்கிமூலம் இலிருந்து

அவந்தி என்பது புராணங்களில் முத்தி நகரங்கள் ஏழனுள் ஒன்றாகக் கூறப்படுவது. இங்கே ஆலமரம் ஒன்றிருப்பதாகவும், அதன் அருகிலுள்ள தீர்த்தத்தில் முழுகி அங்கிருக்கும் சிவபெருமானை வழிபடுவது முத்தி தருமென்றுங் கூறுவர். இந்நகரை உச்சயினி(உஜ்ஜயினி) என்று சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறுவர். இது மாளவதேசத்தில் ஒரு பட்டணமென்றும், இங்கே பலராமனும் கண்ணனும் சாந்தீப முனிவரிடம் கல்வி கற்றனரென்றும் விஷ்ணு புராணம் கூறும். இது ஒரு நாடு என்றும், இதன் தலைநகர் உஞ்சை என்றும், இதன் அரசன் பிரச்சோதனன் என்றும் பெருங் கதை கூறும். கி. மு. 6ஆம் நூற்றாண்டில் சண்டப்பிரத்தி யோதன் முதலிய வீரர்கள் இந்நாட்டை ஆண்டுவந்ததாகப் பௌத்த நூல்கள் கூறும். இது பிற்காலத்தில் மேற்கு மாளவம் என்னும் பகுதியின் பெயராயும், உச்சயினி தலைநகரின் பெயராயும் ஆயின. முற்காலத்தில் அவந்திக் கொல்லர் பெயர் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. கதைகளில் வரும் விக்கிரமாதித்தன் இந்த நாட்டில் அரசு புரிந்தான் என்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவந்தி&oldid=1454096" இலிருந்து மீள்விக்கப்பட்டது