கலைக்களஞ்சியம்/அவித்தல்
அவித்தல் (Quenching) : சூடான உலோகங்களை ஒரு திரவத்திற்குள் அமிழ்த்தி அதைக் குளிர்விப்பது அவித்தல் எனப்படும். இச் செய்முறையினால் உலோகம் உறுதியும் கடினமும் பெறுகிறது. உலோகத்தை எந்த வேகத்தில் குளிர்விக்கவேண்டும் என்பதை ஒட்டி, அது பலவேறு திரவங்களில் அமிழ்த்தி அவிக்கப்படலாம். உதாரணமாக, தண்ணீர் எண்ணெய்களைவிட வேகமாக உலோகத்தைக் குளிர்விக்கும். அவித்தலில் பயனாகும் திரவம் வெப்பத்தை விரைவாக ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும். நீரைவிட நீர்த்த உப்புக் கரைவு வேகமாக உலோகத்தை அவிக்கும். மிக அதிகமான மாறுதல்களைச் செய்ய உலோகங்கள் திரவக் காற்றில் (Liquid air) அவிக்கப்படலாம். குறிப்பிட்டதோர் உயர்ந்த வெப்ப நிலையில் உலோகத்தை அவிக்கநேரலாம். அப்போது சூடான நிலையில் அது உருகிய ஈயம் போன்ற தொரு பொருளுக்குள் அமிழ்த்தப்படும். அவிக்கும் திரவத்தின் வெப்பநிலையில் உலோகத்தின் உட்கூறு அமைப்பு எவ்வாறு இருக்குமோ அதை இச்செய்முறை நிலை நிறுத்துகிறது, இது தான் அவித்தலினால் விளையும் நன்மை. ஆனால் உலோகக் கலவைகளில் அவித்தலின் போது மிக விரைவான மாறுதல்கள் நிகழ்கின்றன. இரும்பையும் எஃகையும் இவ்வகையில் கடினப்படுத் தும் முறை மிகப்பழமையானது.