உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அவித்தை

விக்கிமூலம் இலிருந்து

அவித்தை : 1. வேதாந்தம் கூறுவது : அவித்தை என்பது அறியாமை. இது உலக அவித்தை, மூல அவித்தை என இரண்டு வகையாகும். உலகப் பொருள்களை அறியாமலிருத்தல் உலக அவித்தை. அப்பொருள்களை உள்ளபடி அறிவதால் அவைகளைப் பற்றிய அவித்தை விலகும். ஒளி குன்றிய இடத்திலுள்ள கயிற்றைப் பாம்பு என்று எண்ணுகிறோம். அவ்வறியாமையை விளக்கின் உதவியைக்கொண்டு ஏற்படும் கயிற்றின் உண்மை அறிவால் போக்குகிறோம். உலக விஷயங்களைப்பற்றிய அறியாமைக்குத் தூல அவித்தை என்றும் பெயர். சீவன் தனது உண்மையை அறியாமல் உடல், புலன், புத்தி இவைகளையே தான் என்று அபிமானம் கொண்டும், வெளி விஷயங்களை உண்மைப் பொருள்களாகக் கருதி, அவைகளில் விருப்பு வெறுப்புக்கொண்டும் வாழ்க்கையை நடத்துவது மூல அவித்தையின் காரியமாகும். சீவன் தன்னைக் கர்த்தா (செய்பவன்), போக்தா (நுகர்பவன்) என்று எண்ணியும், உலகப் பொருள்களை நுகரத்தக்கவைகளாய் எண்ணியும் மயக்கத்தால் காரியங்கள் செய்கிறான். இதைச் சம்சாரம் என்பர். மூல அவித்தை நாசமடை யாதவரையில் சம்சாரம் நாசமடையாது. கருமங்களைச் செய்வதற்கும், அவைகளின் பயனாகப் பிறப்புக்களை எடுப்பதற்கும் மூல அவித்தையே காரணம். சீவனுக்கும் உலகத்திற்கும் உண்மைச் சொரூபமாயுள்ள பரமாத்மாவை அறிவதால் தான் மூல அவித்தையும் அதன் காரியமாகிய சம்சார சுகதுக்க அனுபவங்களும் நாசமடையும்.

அவித்தையானது பொருளை மறைத்து, அதனை வேறுவிதமாகத் தோன்றச் செய்கிறது. மறைப்பை ஆவரணம் என்றும், பொய்த் தோற்றத்தை விட்சேபம் என்றும் சொல்லுவார்கள். ஆவரணம் உண்மைப் பொருள் இல்லை என்கிற எண்ணத்தை உண்டுபண்ணி அப்பொருளை விளங்காமல் செய்கிறது. இல்லை என்கிற எண்ணத்தை உண்டுபண்ணுகிற ஆவரணத்தின் பகுதியை அசத்வாபாதக ஆவரணம் என்றும், விளங்கவில்லை என்கிற எண்ணத்தை உண்டுபண்ணுகிற பகுதியை அபானாபாதக ஆவரணம் என்றும் சொல்லுவார்கள். உதாரணமாகப் பத்துப்பேர் ஒரு நதியை நீந்தி அக்கரை சென்ற பிறகு, அவர்களில் ஒருவன் தன்னைக் கணக்கிட மறந்து, ஒன்பது பேரைமட்டும் எண்ணிப் 'பத்தாவது ஆள் இல்லை ; ஏனெனில் முன்னிலையில் விளங்கவில்லை' என்று நினைக்கிறான். இந்த எண்ணத்தில் இல்லை என்ற பகுதி அசத்வாபாதக ஆவரணத்தின் காரியம். விளங்கவில்லை என்ற பகுதி அபானாபாதக ஆவரணத்தின் காரியம். பிறகு மயக்கத்தால் “ஐயையோ எங்களைச் சேர்ந்த பத்தாவது ஆள் நதியில் மாண்டான்” என்று புலம்புவது வீட்சேபம். இவ்விதம் வருந்துகிறவனுடைய துயரத்தை நீக்கப் பக்கத்திலுள்ள அன்பன், ”அப்பா, பத்தாவது ஆள் இருக்கிறான்” என்று சொல்வதைக் கேட்ட மாத்திரத்தில் அசத்வாபாதக ஆவரணம் விலகிக் கொஞ்சம் ஆறுதல் ஏற்படுகிறது. ”எங்கு இருக்கிறான்?” என்று வினவ, ”நீ தான் பத்தாவது ஆள்” என்னும் சொல்லைக் கேட்டதும் அபானாபாதக ஆவரணம் விலகித் தன்னையே பத்தாவது ஆளாக அறிந்துகொள்ளுகிறான். அப்பொழுது பத்தாவது ஆள் நதியில் மாண்டான் என்கிற விட்சேபமும் விலகிவிடுகிறது.

இவ்விதமே அவித்தையால் சீவன் தனது உண்மையான பரப்பிரம சொரூபத்தை மறந்ததால், சரீரம், இந் திரியம், பிராணன், மனம், வெளி விஷயங்கள் முதலியவைகளில் நான் எனது என்று மோகம் கொண்டு வாழ்க்கைத் துன்பங்களை அனுபவிக்கிறான். உபநிடதத்தின் கருத்தைக் குருவினிடமிருந்து கேட்டுத் தன் துயரங்களைப் போக்கும் சத் சித் ஆனந்தரூபமான பரப்பிரமம் இருக்கிறது என்கிற சொல்லின் கருத்தை உணர்ந்த மாத்திரத்தில் அசத்வாபாதக ஆவரணம் விலகுகிறது. பிறகு, ”சரீராதிகள் எல்லாம் சடம், தோற்றம் அழிவுகளுடன் கூடியவைகள், உண்மையில் இருப்பற்றவைகள். நீயோ சேதனன். எக்காலத்திலும் எல்லாவற்றிற்கும் சாட்சியாய் நித்தியமாய் இருக்கிறாய். உன் உண்மை உருவம் சத் சித் ஆனந்த பரப்பிரமமே” என்ற குருவின் உபதேசத்தால் தன்னை அசம்சாரி பரமாத்மாவாக நன்கு அறிந்ததும் அபானாபாதக ஆவரணம் விலகுகிறது. அதன் பிறகு சம்சார அனுபவமான விட்சேபமும் விலகிவிடுகிறது.

அவித்தை என்பது உண்மைப் பொருளன்று. எப்படிப் பொருள்களை மறைக்கும் இருளானது உண்மைப் பொருளில்லையோ, அவ்விதமே ஆத்ம வஸ்துவை மறைக்கும் அவித்தையும் உண்மைப் பொருளன்று. ஒளியால் இருள் விலகுவது போல் புத்தியில் உண்டாகும் ஆத்மா காரமான ஞானத்தால் அவித்தை விலகும். பிறகு எங்கும் நிறைந்த ஏகமான அகண்ட, ஆனந்த, பரமாத்மப் பொருள் தனக்குத்தானே விளங்கும்.

2. சாங்கியர் கூறுவது : பிரதானம், புருஷன் இரண்டையும் பிரித்துத் தெரிந்துகொள்ளாமலிருத்தல் அவித்தை; விவேக ஞானத்தால் அவித்தை விலகிப் புருஷன் தன் அசங்க சுபாவத்தை அறிவதே முத்தி.

3. சைனம் கூறுவது : பாசஜாலத்தில் அடங்கிய ஆணவமாலையே அவித்தை; அவித்தையால் சீவன் தன்னை உடலில் அடங்கியவனாகவும் ; அற்ப ஞானம், அற்ப சக்தி உடையவனாகவும் கருதுகிறான் ; மெய்ஞ்ஞானத்தால் ஆணவமாலையை அறுக்கும்பொழுது ஈசனுடன் ஐக்கியமடைகிறான் ; இதுவே முத்தி நிலை.

4. வைஷ்ணவம் கூறுவது : புண்ணிய பாவமாகிய கருமங்களே அவித்தை; பிரம ஞானத்தால்தான் கருமங்கள் நாசமடையும். வீ. எஸ். கோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவித்தை&oldid=1503266" இலிருந்து மீள்விக்கப்பட்டது