கலைக்களஞ்சியம்/ஆக்டினோசோவா
ஆக்டினோசோவா (Actinozoa) ஆந்தோ சோவா (Anthozoa) என்றும் பெயர் கடற்சாமந்தி (Sea anemone), பவளம், கடற்பேனா முதலியவை இந்த வகுப்பைச் சேர்ந்தவை. சிலென்ட்ரேற்றா (Coelenterata) என்னும் குழியுடலித் தொகுதியிலுள்ளவை. மெடுசா தலைமுறைநிலை இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இல்லை. இவற்றின் பாலிப்பு (Polyp) நிரம்பச் சிக்கலான அமைப்புள்ளது. மேல்தோல் வாய்ப்புறத்தில் மடிந்து உள்ளே போவதால் வாய்க்குழல் ஒன்று உண்டாயிருக்கிறது. இதற்கு ஸ்டோமொடீயம் (Stomodaeum) என்று பெயர். உள்ளறையில் பக்கங்களில் நெடுக்குத் திரைகள் பல உண்டு. இவை தடுக்குக்கள்போல உள்ளிருக்கும் வயிற்றறையைப் பல பாகங்களாகப் பிரிக்கின்றன. இத்தடுக்குக்கள் எண்ணிக்கையில் ஆறு அல்லது எட்டு முதன்மையாகத் தோன்றும். ஆகவே, முறையே ஆறு தடுக்குக்கள் உள்ளவை, எட்டுத் தடுக்குக்கள் உள்ளவை என இந்தவகைப் பிராணிகள் இரண்டு பெரிய கூறுபடும். ஆறு தடுக்குக் கூட்டத்தில், சிறு திரைகள் இடையே உண்டாவதால், 12 தடுக்குக்களையும், இவற்றிற்கு மேற்பட்ட தடுக்குக்களையும் காணலாம். பார்க்க: சிலென்டரேற்றா.