கலைக்களஞ்சியம்/ஆக்டினோப்டெரிஜியை

விக்கிமூலம் இலிருந்து

ஆக்டினோப்டெரிஜியை கதிர்த் துடுப்பு மீன்கள் (Actinopterygii): பொதுவாக மீன்களில் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மீன்கள் சுறா, திருக்கை போன்றவை. இவற்றின் சட்டகம் குருத்தெலும்பால் (Cartilage) ஆனது. இன்னொரு வகை மிகப் பெரிய பகுதி. சாதாரணமான மீன்களெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றின் சட்டகம் பெரும்பாலும் எலும்பாலானது. இவற்றின் உட்பிரிவுகளில் ஒருவகை கதிர்த் துடுப்பு மீன்கள். இவற்றின் துடுப்புகளில் துடுப்புக் கதிர்களுக்கு சுறாவுக்கு இருப்பதுபோன்ற அச்சுப்போன்ற பாகம் கிடையாது. இவற்றின் மூக்குத் தொளைகள் உட்பக்கமாகத் தொண்டையுள் திறப்பதில்லை. 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டெவோனியன் காலத்துப் பாறைகளில் இம் மீன்களின் பாசில்கள் முதன்முதல் காணப்படுகின்றன.