கலைக்களஞ்சியம்/ஆங்கிலோ-எகிப்திய சூடான்

விக்கிமூலம் இலிருந்து

ஆங்கிலோ-எகிப்திய சூடான் கிழக்கு ஆப்பிரிக்காவில் எகிப்துக்கு மேற்கேயுள்ள பகுதி. 1899-ல் இங்கிலாந்தும் எகிப்தும் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி பிரிட்டனது உடன்பாட்டுடன் எகிப்து நியமிக்கும் கவர்னர்-ஜெனரல் இதை ஆள்கிறார். இப்பிரதேசம் இவ்விருநாடுகளின் கூட்டு ஆதிக்கத்தில் உள்ளது. 1951 அக்டோபரில் எகிப்து இந்த உடன்படிக்கையைப் புறக்கணித்து, இந்நாடு தனது ஆளுகைக்குட்பட்டதென அறிவித்தது. இந்த அறிக்கையைப் பிரிட்டன் ஏற்கவில்லை. நைல் ஆற்றின் மேற்பகுதி இதன் வழியாக ஓடி எகிப்தில் பாய்கிறது. பரப்பு : 9.67,500 ச. மைல். மக் : 80.79.800 (1949). வடபகுதியில் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். ஐரோப்பியரும் எகிப்தியரும் கிரேக்கரும் பட்டணங்களில் வாழ்கின்றனர். பருத்தி, தந்தம், கருவேலம்பிசின் முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். கெபய்ட் என்னுமிடத்தில் தங்கம் கிடைக்கிறது. தலைநகரம் கார்ட்டூம். மக் : 75,000. மற்ற முக்கிய நகரங்கள் : வாத்மெதாவி. மக்: 57.300.எல் ஒபேய்து மக்: 70.100.