உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆச்சாமரம்

விக்கிமூலம் இலிருந்து

ஆச்சாமரம், சாலமரம், மராமரம், ஷோரியா ரொபஸ்டா (Shorea robusta), டிப்டிரோகார்ப்பேசீ

ஆச்சா

1. கிளை 2. பூங்கொத்து 3. பூ 4. கனி

இரட்டைவிதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியக் காடுகளில் உண்டாகும் செல்வங்களில் சிறந்தவை. ஆச்சா பெரிய மரம். கூட்டமாக வளர்வது. 100-150 அடி உயரம் வளரும். 20-25 அடி சுற்றளவு உள்ள மரங்கள் உண்டு. 60-80 அடி வரையிலும் கிளைகளில்லாது ஓங்கி நிற்கும் அடி மரங்கள் உள்ளவையும் உண்டு. 60-80 அடி உயரமும், 6-8 அடி சுற்றளவும், 30-40 அடி கிளையில்லா அடிமரமும் உள்ளவற்றைச் சாதாரணமாகக் காணலாம். வெட்டு மரத்தின் வெளிப்புற மென்பகுதி உரமில்லாதது. உட்புற வைரம் பழுப்பு நிறமானது ; கடினமானது. இலை 6-10 அங்குல நீளமிருக்கும். தனியிலை, முழு இலை. பூக்கள் இலைக் கணுச்சந்தில் அல்லது கிளை நுனியில் பெருங்கொத்தாக வளரும். புறவிதழ்கள் கனி வளரும்போது உடன் வளர்ந்து இறக்கைகள்போல இருக்கும். 3-4 அங்குல நீளமிருக்கும். அகவிதழ்கள் உள்ளே கிச்சிலி நிறமாக இருக்கும். கேசரங்கள் 25-30. சூலகம் 3 அறையுள்ளது. அறைக்கு இரண்டு சூல்கள் இருக்கும். கனியில் ஒருவிதை யிருக்கும். வெடிக்காத கனி. மரம் மார்ச்சு ஏப்ரில் மே மாதங்களில் பூக்கும். விதை ஜூன்-ஜூலையில் முற்றும்.

இந்த மரத்தில் வெண்மையான, மணமுள்ள சாம்பிராணி போன்ற ரெசின் உண்டாகின்றது. மரம் பலவிதமாகப் பயன்படுகிறது. ரெயில்வேத் தண்டவாளத்துக்கு அடியில் போடும் கட்டைகள் பெரும்பாலும் இந்த மரத்தினவே.

இந்தியாவில் இமயமலை யடிவாரத்திலும், மத்திய இந்தியா, ராஜமகால், சோட்டா நாகப்பூர், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, வடசர்க்கார் இவற்றிலும் வளர்கிறது.