கலைக்களஞ்சியம்/ஆடு
ஆடு மனிதன் வளர்க்கும் முதன்மையான விலங்குகளிலே ஒன்று. முதன்முதலாக அவன் வளர்த்துப் பெருக்கியது இதுவேயாகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். அவனுக்கு உண்பனவும் உடுப்பனவுமாகப் பாலும், நல்ல மெல்லிய இறைச்சியும், பல பொருடகுதவும் தோலும், மெல்லிய மயிருந் தந்து இன்றும் உதவி வருகிறது. ஆடு இல்லாவிட்டால் மனித வாழ்க்கை பெரிதும் இடர்ப்பாடுடையதாகும்; பல ஆடு ஆதிக்குடிகளுக்கும் நாடோடிச் சாதியினருக்கும் ஆடில்லாவிட்டால் வாழ்வதே அரிதாகிவிடும்.
ஆடு பாலூட்டு விலங்குகளிலே கொம்பும் இரட்டைக் குளம்பும் உடைய அசைபோடும் வகையைச் சேர்ந்தது. இதன் கொம்பானது உள்ளேயிருக்கும் எலும்பை உறைபோல் மூடிக்கொண்டிருக்கும். ஆடுகள் உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் இருக்கின்றன. இவை சமமான தட்பவெப்ப நாடுகளில் மிகுந்த ஈரமில்லாத பாகங்களில் நன்றாகச் செழித்துப் பெருகுகின்றன. ஆயினும் இவை கரடுமுரடான மலைப்பாங்கான இடங்களில் இயற்கையாக வாழ்பவை. காட்டாடுகளெல்லாம் உயரமான மலைகளிலேயே இன்னும் காணப்படுகின்றன. இந்தியாவில் வருடை அல்லது வரையாடு என்பது நீலகிரி, ஆனைமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்த அடுக்கல்களில் இருக்கிறது. இமயமலையிலும் காட்டாடுகள் இருக்கின்றன. மத்திய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல இனங்களைச் சேர்ந்த காட்டாடுகள் இருக்கின்றன. வட அமெரிக்காவில் ராக்கி மலை ஆடு என்னும் ஓரினம் உண்டு. இவையெல்லாம் உயர்ந்த மலைகளில் வாழ்பவையே.
ஆடுகளில் செம்மறியாடு, வெள்ளாடு என இரண்டு வகைகளுண்டு. இந்த இரண்டு வகைகளிலும் காட்டாடுகள் உண்டு. வளர்க்கும் ஆடுகளில் இந்த இரண்டு வகைகளையும் வேறு பிரித்து உணர்ந்து கொள்ளலாமாயினும், சில வகைகளை அவ்வாறு தெரிந்துகொள்ளுவது எளிதாக இருப்பதில்லை.
சாதாரணமாக வெள்ளாட்டைவிடச் செம்மறி பருத்திருக்கும் ; குள்ளமாக இருக்கும். செம்மறியின் கொம்பு தலையின் இருபக்கத்திற்கும் நீட்டிக்கொண்டு, சுருண்டு முறுக்கிக்கொண்டிருக்கும். கொம்பு நெடுக வரி வரியாகக் குறுக்கு வரிகளிருக்கும். வெள்ளாட்டின் கொம்பு தலையின் உச்சியிலிருந்து மேல்நோக்கியெழுந்து பின்னுக்கு வளைந்திருக்கும். அதில் வரைகள் பெரும்பாலும் தோன்றுவதில்லை. செம்மறியின் வால் சற்று நீண்டு, கீழ்நோக்கித் தொங்கும்; வெள்ளாட்டின் வால் மிகச் சிறியதாக மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும். செம்மறியாட்டுக்குத் தாடியிருப்பதில்லை; வெள்ளாட்டுக்கு மோவாயின் கீழே தாடியிருக்கும், தாடியில்லாத வெள்ளாடுகளும் உண்டு. செம்மறியாட்டிற்கு நீளமாக இருக்கும் மயிரோடு அதற்கடியில் தோலுக்கு அருகில் நெருங்கியிருக்கும் ‘மென்மயிர்’ (Fleece) உண்டு ; வெள்ளாட்டில் இந்த மென்மயிர் சிலவகைகளில் இருக்குமானாலும் பெரும்பாலும் இருப்பது நேராக வளர்ந்திருக்கும் மயிரே. செம்மறியாட்டுக் கண்ணின் உள்முனைக்குக் கீழே ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் ஒரு சுரப்பியிருக்கிறது. இந்தச் சுரப்பி இரலைமான் இனங்களில் நன்றாக வளர்ந்திருப்பதைக் காணலாம்; இது வெள்ளாட்டிற்கில்லை. செம்மறியின் குளம்புக்கு இடையில் ஒரு சுரப்பியுண்டு ; இதுவும் வெள்ளாட்டிற்கில்லை. செம்மறியாட்டில் மொச்சை நாற்றம் அடிப்பதில்லை ; வெள்ளாட்டுக் கடாவுக்கு இந்த மொச்சை நாற்றம் உண்டு. இந்த நாற்றம் வெள்ளாடு இனம் பெருகும் காலத்தில் பலமாக அடிக்கும். செம்மறியைவிட வெள்ளாடு மிவும் செங்குத்தான பாறைகளிலும் திறமையோடும் விரைவாகவும் ஏறிச்செல்லும். சாரமற்ற உணவையும் உண்டு வாழும். செம்மறி பெரும்பாலும் புல் மேயும்; வெள்ளாடு பெரும்பாலும் தழை மேயும்.
செம்மறியாடு: ஊரியல் அல்லது ஷாபு என்னும் காட்டுச் செம்மறியாடு பஞ்சாபிலும், சிந்து, பலுசிஸ்தானம், தென் பாரசீகம் வரையில் மேற்கிலும், வட திபெத்து வரையில் கிழக்கிலும் பரவியிருக்கிறது. இதை மிகப் பழைய காலத்திலேயே ஆதி மனிதன் பழக்கி வளர்த்து வந்தான் என்று துருக்கிஸ்தானத்திலுள்ள ஆனன் என்னும் பழைய ஊர் இருந்த இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியால் அறியக்கிடக்கிறது. இது ஓவிஸ் விக்னியை எனப்படும். இதிலிருந்துதான் ஐரோப்பாவில் வளரும் செம்மறிகளுக்கெல்லாம் தாயினமாகிய ஓவிஸ் ஏரிஸ் என்னும் ஆடு உண்டாயிற்று. இது புதுக் கற்கால முதல் இன்றுவரை மாறாமல் வந்திருக்கிறது. சார்டினியாவில் முவ்லோன் என்னும் காட்டினம் உண்டு. இவ்வினம் மனிதர் வளர்க்கும் ஆடுகளுடன் சேர்ந்து பல்குகிறது. இதன் சந்ததி செம்புக் காலம் முதல் இருந்துவருகிறது. இப்போதுள்ள வளர்ப்புச் செம்மறிகளில் பேரளவின இந்தச் செம்புக்கால ஆட்டினின்று தோன்றிய காட்டுச் செம்மறிகள் நடுஆசியாவில்தான் தொகையிலும் இனத்திலும் பெருகியிருக்கின்றன. பெரு மந்தைகளாகவும் சிறு குடும்பங்களாகவும் இவை உலவும். கிழக்கடாக்கள் பொதுவாக மந்தையினின்று தனித்துச் சஞ்சரிக்கும். இவை சிறப்பாக மலையில் வாழ்பவையாயினும் செங்குத்தான இடங்களில் இருப்பதில்லை. குறிஞ்சியைச் சார்ந்த பள்ளமும் மேடுமாகப் பரந்துள்ள புல் நிறைந்த மலைச்சரிவுகளிலே வாழ்கின்றன.
பாமிர் பீடபூமியில் 16,000 அடி உயரத்தில் ஓவிஸ் போலை என்னும் அழகிய ஆடு இருக்கிறது. 13ஆம் நூற்றாண்டில் மார்க்கோபோலோ என்னும் வெனிஸ் யாத்திரிகர் இதைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். ஆதலால் இதற்குப் போலை என்னும் இனப் பெயர்கொடுத்திருக்கிறது. முதிர்ந்த கடாக்களின் கொம்பு மிகப் பெரியது. 52 அங்குல நீளமும், அடியில் 15 அங்குலச்சுற்றும் உள்ளது. தோளருகே 44 அங்குலம் உயரம் இருக்கும். சில ஆடுகள் கடா 250 இராத்தல் எடை இருக்கும்.
பாரால் அல்லது நீல ஆடு திபெத்தில் வசிப்பது. சிக்கிம், நேபாளம் இவற்றின் வடக்குப் பகுதிகளிலும் இது காணப்படுகிறது. ஆசியாவில் தியன்ஷன், துருக்கிஸ்தானம், ஆல்தாய், லடக், தீபெத்து, கிழக்கு மங்கோலியக் கோபிபாலைவனம், ஸ்தானவாய், கிழக்குச்சைபீரியா, காமச்சட்கா இங்கெல்லாம் காட்டுச் செம்மறிகள் உண்டு. வட அமெரிக்காவில் ராக்கிமலை, கானடா, அலாஸ்கா, யூகான், மெக்சிகோ முதலிய பாகங்களில் இருக்கின்றன.
வளர்ப்புச் செம்மறி: வேளாண்மை நடக்குமிடங்களிலெல்லாம் மனிதன் இதை வளர்க்கிறான். ஆயினும் சம தட்பவெப்ப வலயங்களிலேயே இது மிக நன்றாகப் பல்குகின்றது. செம்மறியில் பலவகைகள் உண்டு. ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புண்டு. பெண்ணின் கொம்பு சிறிதாக இருக்கும். சில வகைகளுக்குக் கொம்பே இல்லை. மற்றுஞ் சிலவற்றிற்கு 4, 8 கொம்புகள்கூட உண்டு. கிழக்குத் தேச வகைகளுக்கு முகத்தில் மூக்கெலும்பு உயர்ந்து வளைந்திருக்கும். சிலவற்றிற்கு வால் மிக நீண்டு தரையிற்படும். மற்றுஞ் சிலவற்றின் வாலின் அடியில் இருபுறத்தும் கொழுப்பு மிகத் திரண்டிருக்கும். உடம்பின் வடிவம், கொடுக்கும் மயிரின் அளவு, பண்பு, நிறம், பாலின் அளவு முதலிய பல குணங்களில் செம்மறி வகைகள் மாறுபட்டிருக்கின்றன. இப்படி 200 வகைச் செம்மறியாடுகள் உண்டு. இவற்றில் 36 வகைகள் பெரும்பான்மையாக வளர்ப்பவை. கம்பளி, மென் மயிர்த்தோல், இறைச்சி, பால் இவற்றின் தன்மையைக் கொண்டு அவற்றை ஆறு பிரிவுகளாகக் கருதுகின்றனர். நுண்மயிர், நடுத்தரமயிர், நீண்ட முரட்டு மயிர், மென்மயிர்த்தோல், இறைச்சி, பால் என்பன அபபிரிவுகளின் பெயர்கள்.
நுண் மயிர் கொடுக்கும் வகைகளில், மெரினோ என்பது மிகவுயர்ந்தது. ஸ்பெயின் தேசத்தில் இது முதலில் தோன்றியது. இப்போது இது பல நாடுகளில் வளர்க்கும் முக்கிய வகையாகும். ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, தென்னாப்பிரிக்க யூனியன், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளில் இது மிகுந்துள்ளது. ஆய்ந்து ஆய்ந்து நல்ல ஆடுகளைச் சேர்ப்பதால் பல வகைகளின் பண்பு மேலும் மேலும் சிறப்படைந்து வந்திருக்கிறது.
செம்மறிக்கு வேண்டிய உணவு மிகச் சாமானியமான புல், புதர் முதலியனவே. குதிரையும் மாடும் பன்றியுங்கூட விரும்பாதவற்றை மேய்ந்து வாழும். தண்ணீர் குடிக்காமல் சில வாரகாலம் இருக்கும்; சற்றுக் கொழுமையான புல் பனியால் நனைந்ததே போதும். செம்மறி புல்லை நன்றாக அடிவரையில் ஒட்டக் கடித்துத் தின்னும். ஆடு தழை தின்பதுபோல என்றும், நுனிப்புல் மேய்வதுபோல என்றும் சொல்லுகிற பழிச்சொற்கள் செம்மறிக்குப் பொருந்தா.
செம்மறி மந்தை மந்தையாக வாழும். தலைமையாடு ஒரு முதிய கடாவாக இருக்கும். அது போகும் வழியைப் பின்பற்றி மற்றெல்லாம் தொடர்ந்து போகும். இவை பெரிய கோழை. ஒரு காகிதம் பறந்தாலும் திடுக்கிட்டுவிடும். இடி முழக்கங்கேட்டால் நாலாபக்கமும் சிதறியோடும். ஆனால் இவை சண்டைபோடுவதும் உண்டு. ஒரு பெரிய கடா எருதையும் எதிர்த்துப் பொருது நிற்கும். குட்டிகளை நாய் முதலியவை தொந்தரவு செய்யாமல் பெண்ணாடுகள் காக்கும். இரண்டுமூன்று பெண்ணாடுகள் குட்டிகளோடு வந்துகொண்டிருந்தால் ஓர் ஆடு அந்தக் குட்டிகளை அழைத்துக்கொண்டு போகும். மற்றவை நாயை எதிர்த்து நின்று மடக்கும். நாய் பாய்ச்சல் காட்டினாலும் தடுக்கும். அதற்குள் குட்டிகள் தப்பித்துக் கொள்ளும்.
வெள்ளாடு ஏழைகளின் பசு. கடுமையான வாழ்க்கையையுந் தாளக்கூடியது. செம்மறியைவிடக் கரடுமுரடானதும் செழுமையில்லாததுமான இடத்திலும், செங்குத்தான மலைப்பாகங்களிலும் முரட்டு முட்செடியோ கொடியோ தழையோ புல்லோ, எது கிடைக்குமோ அதைத் தின்று வாழும். இது தொடாத சில செடிகள் உண்டு. அவற்றை ஆடு தீண்டாப்பாளை என்பார்கள். குதிரையும், மாடும், செம்மறியாடுங்கூட தின்று வாழமுடியாத சாரமற்ற உணவையுந் தின்று இது பிழைத்திருக்கும். நிரம்ப ஈரமான இடங்களில் இது செழிக்காது. வெள்ளாட்டில் கறுப்பு, பழுப்பு, வெள்ளை முதலிய பல நிறங்கள் உண்டு. கறுப்பு மிகுதியாக இருக்கும்.
வெள்ளாட்டின் ஆணுக்குக் கடா, தகர், மோத்தையென்று பெயர். ஆட்டுக்குட்டி தாயின் வயிற்றில் 21- 23 வாரம் அதாவது ஐந்து மாதமிருந்து பிறக்கும். ஆடு ஆறாம் மாதம் என்பார்கள். ஓர் ஈற்றில் சாதாரணமாக இரண்டு குட்டிகள் பிறக்கும். அடிக்கடி மூன்றும், சில சமயங்களில் ஒன்றும், ஐந்தும் கூடப் பிறக்கும். குட்டி பிறக்கும்போதே உடம்பில் மயிர் மூடியிருக்கும். கண் திறந்திருக்கும். பிறந்து முன்று நாலு மணி நேரத்தில் குட்டி ஓடித் துள்ளிக் குதிக்க முடியும். குட்டி 3- 6 மாதம் தாய்ப்பால் குடிக்கும். இப்போது 10, 11 மாதம் குடிக்கும் நல்ல வகைகளை உண்டாக்கி யிருக்கிறார்கள். இதனால் மனிதன் பால் கறந்து கொள்ளும் காலம் நீடிக்கும். குட்டி ஆறு மாதத்தில் வயதுக்கு வரும். ஆயினும் நல்ல வகை ஆடுகளை ஓராண்டு நிறைவதற்கு முன் குட்டிபோட விடுவதில்லை. வெள்ளாடு 10-14 ஆண்டு உயிருடன் இருக்கும். ஓர் ஆடு சாமானியமாக 100-120 ராத்தல் நிறையுள்ளது.
வெள்ளாட்டுப் பால் வெண்மையாகவும் இனிப்பாகவும் இருக்கும். உடம்பை வளர்க்கும் சத்து இதில் மிகுதி. பசும்பாலில் இருப்பதைவிட இதில் கொழுப்பும் புரோடீனும் மிகுதி. இதில் ஆல்புமின், புரோட்டீன் சம்பந்தமில்லாத நைட்ரொஜென் அதிகமுண்டு. நயசின், தயாமின் என்னும் வைட்டமின் பீ கலப்புள்ள பொருள்கள் முறையே பெல்லாக்ரா, பெரி பெரி என்னும் நோயைத் தடுப்பவை இதில் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, பசும்பாலில் உள்ளதுபோலவே இருக்கின்றன. பசுவின்பாலைவிட இது எளிதில் செரிமானமாகும். நோயாளிகளுக்கு ஏற்றது. எலும்புருக்கி நோய், வயிற்று நோய், குடல் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உத்தமமான உணவு. இந்தப் பாலைக் குடித்துப் பழகினவர்கள் பசுவின்பாலைவிட இதையே விரும்புகின்றனர். ஆட்டு வெண்ணெய் அவ்வளவு நன்றாக இராது. பால்கட்டி நன்றாக இருக்கும். உலகத்திலே மாட்டுப் பாலைவிட ஆட்டுப்பாலையே மிகுதியாக மக்கள் உட்கொள்கின்றனர்.
வெள்ளாட்டிறைச்சி செம்மறியிறைச்சியைப் போல அவ்வளவு சுவையுடையதன்று. ஆயினும் பத்தியத்துக்கு இது நல்லதென்பர். வெள்ளாட்டுத் தோல் மிகவுயர்ந்தது. உலகப் புகழ் பெற்ற மொராக்கோ என்பது வெள்ளாட்டுத் தோலே. இளங்குட்டிகளின் தோலால் கைக்கு உறை, காற்செறி முதலியன செய்கிறார்கள். இது விலையுயர்ந்ததாகையால் எலித்தோல், நாய்த் தோல்களை இதற்குப் போலியாக உபயோகிக்கிறார்கள்.
வெள்ளாட்டை நாய், பூனை வளர்ப்பதுபோல வீட்டில் ஆசைக்காக வளர்ப்பதுண்டு. இது கூர்மையான அறிவுள்ளது. குறும்பு செய்வதில் விருப்பமுள்ளது. ஆதலால் கட்டிப்போட்டு வைப்பார்கள். குழந்தைகளுடைய வண்டிக்கு ஆட்டைக் கட்டுவதுண்டு. சில நாடுகளில் பொதி சுமக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
வெள்ளாடுகளெல்லாம் பாரசீகத்திலிருக்கும் காப்ரா பசாங்கு என்னும் காட்டாட்டிலிருந்து உண்டானவை. இதிலிருந்து ரோசனம் எடுக்கப்படுகிறது. வெள்ளாட்டில் மூன்று முக்கிய வகைகள் உண்டு. சுவிஸ் ஆடு கூரான வடிவுள்ள, நேராக நிமிர்ந்துள்ள காதுள்ளது. ஐரோப்பிய அமெரிக்க வெள்ளாடுகள் இதன் வழியின. நியூபியன் ஆட்டின் காது மடிந்து தொங்கும். இந்திய வெள்ளாடுகள் இதன் சந்ததியின. யமுனைக் கரையாடும், சூரத்தி என்னும் வகையும் உயர்ந்தவை. மூன்றாவது இந்த நியூபியன் வகை நல்ல பால் தரும். வகை நல்ல கம்பளிமயிர் தருவது. அங்கோரா, காச்மீர ஆடுகள் இந்தச் சாதியின. அங்கோரா (த. க.) உடம்பு முழுவதும் நீண்ட மயிருள்ளது. இதன் மயிர் மிகவுயர்ந்தது. இதிலிருந்து மொகேர் என்னும் உயர்ந்த துணிவகைகளும் போர்வைகளும் நெய்யப்படுகின்றன. வெள்ளாடு மிகுதியாக உள்ள நாடுகளில் இந்தியா முதன்மையானது. இங்கு ஐந்துகோடி ஆடுகள் இருக்கின்றன. துருக்கி, தென்னாப்பிரிக்க யூனியன், ஈரான், ரஷ்யா, கிரீசு, மொராக்கோ இதையடுத்தவை. ★
1. காச்மீர வெள்ளாடு: இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளில் இது மென்மையான பட்டுப்போன்ற மயிருக்குப் பேர்போனது. இதன் மயிர் காச்மீர சால்வையும் விலையுயர்ந்த மெதுவான ஆடையும் நெய்வதற்கும் உதவுகிறது. ஒரு சால்வை நெய்வதற்குக் குறைந்தது பத்து ஆடுகளின் மயிர் தேவையாகும். இந்த ஆடுகளைப் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் கூட வளர்க்கிறார்கள்.
2. நீலகிரி வரையாடு: இது நீலகிரியில் இருக்கும் காட்டு வெள்ளாடு. இதற்கு நீலகிரித் தகர் என்றும் பெயர்.முதிர்ந்த ஆண் ஆடுகள் கோடைக் காலத்தில் மந்தையைவிட்டுத் தனியே மேய்கின்றன. மந்தையில் சிறு குட்டிகள் ஆண்டின் எல்லா மாதங்களிலும் காணப்படுகின்றன. ஆயினும் இந்த ஆடுகள் பெரும்பாலாகக் கோடையின் தொடக்கத்தில்தான் குட்டி போடுகின்றன. சாதாரணமாக ஒரு ஈற்றுக்கு ஒரு குட்டி தான் போடும். சில சமயங்களில் இரண்டு குட்டிகளும் போடும். முதிர்ந்த கடாவின் இறைச்சி மொச்சையடிக்கும்; நன்றாக இராது. பெண்ணாடு, கடாக்குட்டி இவற்றின் இறைச்சி மிக நன்றாக இருக்கும். க.