கலைக்களஞ்சியம்/ஆணி
ஆணி பழங்காலத்தி லிருந்தே இந்தியாவில் ஆணிகள் பயனாகி வந்துள்ளன. கொல்லனது உலைக்களத்தில் இரும்பைக் கம்பியாக நீட்டிச் சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு முனையைக் கூராகவும், மற்ற முனையை அகன்ற தலையாகவும் அடித்து அவை செய்யப்பட்டு வந்தன. இம்முறை இன்னும் ஓரளவு வழங்குகிறது.
நீண்ட கம்பிகளிலிருந்து எந்திரத்தினால் ஆணிகளைத் தயாரிக்க முடிவதால் இவற்றை மிக மலிவாக விற்க முடிகிறது. இந்த எந்திரம் முக்கியமான மூன்று உறுப்புக்களைக் கொண்டது. சுருளிலிருந்து வரும் கம்பியை எந்திரக் கத்தரி தேவையான நீளத்திற்குக் கத்தரிக்கிறது. இவ்வாறு கத்தரிக்கப்பட்ட துண்டங்களின் ஒரு முனையை ஒரு குறடு அழுத்தி இழுத்துக் கூர்மையாக்குகிறது. துண்டத்தின் மறு முனையை ஒரு சம்மட்டி அடித்துத் தலையை உருவாக்குகிறது. இந்த எந்திரங்கள் நிமிடத்திற்கு 1000 ஆணிகள் வரை தயாரிக்கும். தகட்டு இரும்பைச் சிறு நாடாக்களாகக் கத்தரித்து, அவற்றிலிருந்து ஆணிகளைத் தயாரிப்பதும் உண்டு.
நூற்றுக்கு மேற்பட்ட ஆணி வகைகள் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் சிறப்பாகப் பயனாகும் ஆணி வகைகள் உள்ளன. சில மர வேலைகளுக்குத் திருகாணி ஏற்றதாகக் கொள்ளப்படுகிறது. கம்பியாணியைவிட இது மரத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது. இதை உள்ளே செலுத்துவதும் எளிது. சாதாரண அணியைத் தயாரித்து, அதை இரு உருளைகளிடையே அனுப்பி, அதைச் சுற்றிலும் சுருளான தவாளிப்பை வெட்டி இது தயாரிக்கப்படுகிறது.