கலைக்களஞ்சியம்/ஆண்டீஸ் மலைகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆண்டீஸ் மலைகள்: உலகத்திலுள்ள மிக நீண்ட மலைத்தொடர். இது தென் அமெரிக்காவின் மேற்குக்கரை முழுவதும் 4,500 மைல் நீண்டு கிடக்கிறது. இமயமலை ஒன்றுதான் இதைவிட உயர்ந்தது. மத்தியப் பகுதியில் 500 மைல் அகலமுடையது. ஸ்பானியர்கள் இதைக் கார்டிலரா (அதாவது முதுகெலும்பு) என்று அழைத்தார்கள். மத்திய ஆண்டீஸிலுள்ள உயர்ந்த சிகரங்கள் சஹாமா, சிம்பரோஜோ, கொட்டபாக்ஸி, இல்லிமாசி. இல்லாம்பு என்பன. ஆண்டீஸ் மலைகளுள் பல எரிமலைகள் உண்டு. கொட்டபாக்ஸி, துங்குராகுவா, சாங்கே என்பன இப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பவை. பூகம்பம் அடிக்கடி நிகழ்ந்து நகரங்களை அழித்துவிடும். அமேசான் நதி இம்மலையின்கீழ்ச் சரிவிலே உற்பத்தியாகின்றது. ஆண்டீஸ் என்பது செம்பு என்று பொருள்படும் ஆண்டி என்னும் பெருவியச் சொல்லிலிருந்து பிறந்த தாகும். இந்த உலோகம் ஆண்டீஸ் மலைகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.