கலைக்களஞ்சியம்/ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர்

விக்கிமூலம் இலிருந்து

ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர் (1871-1940) ஒரு பிரிட்டிஷ் பாதிரியார். இவர் கேம்பிரிட்ஜிலுள்ள வெஸ்கட் அவுஸ் கல்லூரியின் உபதலைவராக இருந்தார். பிறகு இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் அந்நாட்டின் நன்மைக்காக உழைத்தார். ரவீந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய சாந்தி நிகேதனத்துக் குருகுலத்தில் 1913-ல் சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இந்தியத் தொழிலாளிகளின் நன்மையைக்

ஆண்ட்ரூஸ்

கோரிக் காந்திஜி தொடங்கிய சத்தியாக்கிரகத்திற்கு முழு ஆதரவும் அளித்தார். கடல் கடந்து சென்ற இந்தியர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பிஜி தீவுகளுக்கும், கெனியா, பிரிட்டிஷ் கயானா முதலிய இடங்களுக்கும் சென்றார். இந்தியர்களுடைய சமூக, அரசியல் எண்ணங்களை யுணர்ந்து அவர்கள் கோட்பாடுகளை யாதரித்தார். சுய நலம் சிறிதும் இல்லாதவர் ; எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலும் முழுவதும் நம்பிக்கை யுள்ளவர். இவர் காந்திஜியோடு கொண்டிருந்த நட்பும் தொடர்பும் இவரை இந்தியர்களுள் ஒருவராகவே செய்துவிட்டன. இவரை இந்தியர்கள் 'தீனபந்து' என்னும் பட்டப்பெயரால் அழைத்தனர். இவர் எழுதிய பல நூல்களால் மேல் நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.