கலைக்களஞ்சியம்/ஆடை அணிகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆடை அணிகள் (மானிடவியல்): அழகு இன்னதென்பதில் மக்களுக்குள் பரந்த மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், இயற்கையாயமைந்த வனப்புக்களை உடையாலும் அணிகளாலும் மேலும் அலங்கரிக்க வேண்டுமென்ற அவா எல்லாச் சமூகத்திலும் இருக்கிறது. உடையில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களை இன்று வாழும் மக்களுடைய உடைகளிலிருந்து நாம் காணலாம். எஸ்கிமோக்களிடையே இன்று நாம் காண்பதுபோலக் கடுமையான குளிரிலிருந்து உடலைக் குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள மக்கள் ஆதியில் அணிந்தவை தோலும், மென் மயிரடர்ந்த தோலுரியுமே என்பது தெரிகின்றது. செம்மண் போன்ற நிறமுள்ள மண், கிளைகள் இலை, மரப்பட்டை, புல், மலர், விதை, இறகு, பட்டாம்பூச்சியின் சிறகுகள், மணி, கிளிஞ்சல் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள் அழகுசெய்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. மிகுந்த குளிர் நாடுகளில் பூயீஜியர்கள் (Fuegians) மிகவும் சொற்பமான உடைகளையே உடுக்கிறார்கள். அதனால் உடை அணிவதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பது நமக்கு புலனாகிறது. அவையாவன நாணம், ஒழுங்கு, நற்சுவையுணர்வு, அழகுணர்ச்சியாலுண்டாகும் இன்பம், ஆண பெண் கவர்ச்சி, மந்திர மாய சமய சம்பந்தமான சடங்குகள் போன்றவை ஆகும். உடலின் எந்தப் பகுதிகளை ஆடையால் மூடவேண்டும் என்ற பழக்க வழக்கங்களை ஒவ்வொரு சமூகமும் பின்பற்றுகிறது. உடைகளை தோல், மரப்பட்டை, இலை எதனால் செய்திருந்தாலும் ஆதி மக்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் உடுத்தியிருக்கிறார்கள். ஆடையின்றி யிருப்பது அவர்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லை. உடலின்மேல் வர்ணங்களைத் தீட்டிக் கொள்வதும், வேறு வழியில் அழகுபடுத்திக்கொள்வதும் வழக்கத்தின் காரணமாய் வற்புறுத்தப்படலாம். ஆப்பிரிக்காவில் பூமியின் நடுக்கோட்டையடுத்த இடங்களில் மரவுரி இடுப்பாடை ஆண்களுக்கும், பனை ஓலைகளாலாகிய சிறு பாவாடை பெண்களுக்கும் ஆடையாகின்றன. பாலினீசியாவில் மரவுரியை ஆண்கள் இடுப்பாடையாக வுடுக்கிறார்கள். பெண்கள் மரப்பட்டையாலாகிய பாவாடையை அல்லது வகிர்ந்து பின்னிய இலையாலாகிய ஆடைகளை உடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள் மரப்பட்டையாலாகிய ஒரு கச்சையை உடுக்கிறார்கள். அதன் ஓரங்கள் ஒப்போசம் என்னும் விலங்கின் மயிர் அல்லது மனிதர் தலைமயிர் இவற்றினால் பின்னிய கட்டுக்கயிற்றால் ஆனவை. கலகாரியிலுள்ள புதர் மக்கள் (புஷ்மன்) முக்கோண வடிவமான ஒரு தோலைக் கால்களுக்கு இடையில் கோத்து, இடுப்பைச்சுற்றி முடிந்துகொள்கிறார்கள். கலகாரிப் பெண்கள் ஒரு கச்சையையும் தோல் அல்லது மணிகளாலாகிய சிறு முன்றானையையும் அணிகிறார்கள். இந்தியர் எனப்படும் வட அமெரிக்கச் சமவெளியில் வாழும் மக்கள் தம்முடைய ஆடைகளை ஆட்டுமாட்டுத் தோல்களைக்கொண்டு செய்துகொள்கிறார்கள். அரேபியாவில் ஆண்களும் பெண்களும் நீளமாயும் தளர்ச்சியாயுமுள்ள ஆடைகளை உடுக்கிறார்கள். இந்தியாவிலுள்ள காடர்கள், கோண்டர்கள், ஓரோன்கள், இன்னும் மற்றப் பழங்கால இனத்தவர்கள் திருமணம், ஆடல்போன்ற சடங்குகளில் மிகுதியாக ஆடைகளை அணிந்தாலும் மற்றக் காலங்களில் சொற்ப ஆடைகளையே அணிகிறார்கள். தொதவர்களில் ஆண்களும் பெண்களும் உடம்பு முற்றும் மூடும்படி உடுக்கிறார்கள்.

பாலினீசியா, மெலனீசியா, தென் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அயல்நாட்டுப் பருத்தி ஆடைகளைப் புகுத்தியதால் அங்கேயே செய்து உடுத்திய மரவுரிகள் மறைந்து வருகின்றன. முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலா போன்ற சில மரங்களுடைய உள்பட்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு அவற்றைத் தவாளிப்புள்ள மரச்சுத்தியால் தட்டி மெதுவாக்குகிறார்கள். அவ்வாறு செய்யப்பட்ட பட்டை சிறிதும் பெரிதுமான தகடு போன்றிருக்கும். அதற்குச் சாயம் கொடுத்து அல்லது அதில் ஓவியம் எழுதி அலங்கரிப்பார்கள். மரவுரி பார்வைக்கு நெய்த துணிபோலிருக்கும். அலங்கரிக்கப்பட்ட நயமான மரவுரிகளுக்குப் பாலினீசியா சிறப்புற்றிருக்கிறது. முக்கியமாகச் சடங்குகளின்போது சில ஆதிக்குடிகள் அதனை இன்றும் உடுக்கிறார்கள். போர்னியோவிலுள்ள காயான்களும் பெல்ஜியன் காங்கோவிலுள்ள நீக்ரோப்பெண்களும் துக்க காலங்களில் மரவுரியை அணிகிறார்கள்.

கூடை பின்னுவதிலிருந்து நெய்யும் தொழில் தெரிந்தது. அதோடு நூற்றலுக்கு வேண்டிய தக்க கச்சாப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரண்டும் தறியில் துணியை நெய்வதற்கு ஆதாரமாயின. முதலில் இரண்டு குச்சிகள் மட்டுங்கொண்ட சாமானிய நெசவுத்தறி இப்போது பல நுட்பங்களோடு பொருந்திய யந்திரமாகிவிட்டது. அது பலவகையான துணிகளை வேண்டிய அகல நீளத்திலும் அழகிய முறையிலும் நெய்து கொடுக்கிறது. அதனால் சமூகக்கட்டுப்பாடுகளுக்காக மரவுரியையும் நாணலாலாகிய பாவாடையையும் அணியவேண்டுமென்ற கட்டாயமுள்ள காலங்கள் தவிர மற்றப்படிச் சாதாரணமாக வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது நடைமுறையில் வழக்கமாய் விட்டது.

செம்மை, மஞ்சள், வெண்மை, பழுப்பு நிறமான இயற்கை மண்ணைப் பூசிக்கொள்வது மிகப் பழங்காலத்தில் உடலை அலங்கரிக்கும் முறையாயிருந்திருக்கலாம். அம்மண்களைக் கலப்பதால் வெவ்வேறு நிறமுள்ள மண்களையும் பெறலாம். இம்முறையை ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் ஐரோப்பாவில் இருந்த பழங்கற்கால வேடர் கையாண்டிருந்தனரெனத் தெரிகிறது. ஆதி பிரிட்டன்கள் போருக்குச் செல்லுமுன் தங்கள் உடலில் நீல நிறத்தைப் பூசிக்கொள்வார்கள் என்று சீசர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் கராபெரி (Corroboree) நடனத்தின்போது தங்கள் உடம்பின்மேல் நன்கு தெரியும்படி பட்டை பட்டையாகவும் புள்ளி புள்ளியாகவும் நிறத்தால் தீட்டிக்கொள்வார்கள். அமெரிக்க இந்தியர்கள் வெற்றியின் அறிகுறியாக நடனமாடும்போது ஒருவித நிறத்தால் உடலை அழகு படுத்திக்கொள்ளுகிறார்கள். உள்நாட்டில் வாழும். அந்தமானியர் முக்கியமாக விருந்துக்குப்பின் உடம்பெல்லாம் வெண் களிமண்ணால் பட்டை தீட்டி அடையாளமே தெரியாதவாறு செய்துகொள்கிறார்கள். பழங்காலந்தொட்டுக் கீழ்நாடுகளில் விரல், உள்ளங்கை, பாதம் இவற்றை மருதோன்றியிலையால் செந்நிறமாக்கிக் கொள்வது வழக்கம். இது இந்தியப் பெண்களிடையே மிகச் சாதாரணம். சந்தனம், நறுமணமுள்ள பட்டைகள், கிழங்குகள் ஆகிய இவற்றை வாசனைக்காக முகத்திலும் உடலிலும் பூசிக்கொள்வார்கள்.

பச்சை குத்தி உடலை அழகு செய்வது அநேகமாக உலக முழுவதும் வழக்கமாயிருக்கிறது. புள்ளிகள், கோடுகள் முதல், மலர்கள், பறவைகள், விலங்குகள் முதலான உருவங்கள் வரை பச்சை குத்துவதில் அடங்கியுள்ளன. நெற்றியிலும், கையிலும், புறங்கையிலும், விரல்களிலும், முதுகிலும், மார்பிலும், கால்களிலும், பச்சை குத்திக் கொள்வது பெண்களிடையே பெருவழக்கமாயிருக்கிறது. மாயோரிகள் (Maoris) முகங்களின்மேல் வளைகோடுகளாகப் பச்சை குத்திக்கொள்ளுகிறார்கள். ஊசியால் குத்தி, புகைக்கரி, மரக்கரித்தூள் அல்லது இலையின் சாறு ஆகிய இவற்றிலொன்றைப் பூசினால் சிவந்த தோலில் பசுமை நிறம் உண்டாகிறது. ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள், அந்தமானியர்கள் போன்ற கறுப்பு நிறத்தினர் பச்சை குத்திக் கொள்வதற்குப் பதிலாகத் தோலைச் சற்றுக் கீறிக் கொள்ளுகிறார்கள். சித்திர உருவங்களைத் தோலின் மேல் கீறி, அழற்சி தரும் பொருள்களை அங்குத் தேய்ப்பார்கள். ஆறினவுடன் அங்கு நிலையான வடு ஏற்படும். அல்லது தசை வீங்கினாற்போல் தழும்பு வெளிவந்துநிற்கும். பல்லைப் பின்னப்படுத்தல், மண்டை ஓட்டை உருக்குலைத்தல், உதட்டில் தொளை செய்தல், மூக்கில் தொளைபோடுதல், இன்னும் இவைபோன்ற மற்ற உருக்குலைவுகளைச் சில சமூகங்களில் அழகு செய்வதற்காகப் பின்பற்றுகின்றனர். ஆப்பிரிக்க நீக்ரோக்கள் சிலர் முன்பற்களைப் பிடுங்கிவிடுகிறார்கள். இந்தியாவில் காடர்கள் பற்களைக் கூர்மையுண்டாக அராவுகிறார்கள். பிரேசிலிலுள்ள பொடொகுடோ சாதிப் பெண்கள் நகை அணிவதற்காகக் கீழ் உதட்டைத் தொளைத்துக்கொள்ளுகிறார்கள். காலடிகளைக் குறுக்கிக்கொள்வது சீனப் பெண்களிடையே மிகச் சாதாரணம். நகை அணிவதற்கு இந்தியாவில் சில பெண்கள் காதுகளின் எல்லா வெளி ஓரங்களையும் மடல்களையும் குத்தித் தொளை செய்துகொள்ளுகிறார்கள்.

ஆதிக்குடிகள் கிளிஞ்சில்களையும், மணிகளையும், மலர்களையும், இறகுகளையும் தலையிலும், தலைப்பாகையிலும், உடலிலும் கவர்ச்சிக்காக அணிய ஆசைப்படுகிறார்கள். அவர்களில் பெண்கள் உச்சிமுதல் உள்ளங்கால்வரையில் கூந்தல் அணிகள், கழுத்து வளையங்கள், மூக்கில் நத்து முதலிய வளைகள், காதணிகள், கடகங்கள், கைக் காப்புக்கள், இரும்பு, பித்தளையாலான கனமான காப்பு முதலிய கால் அணிகள் முதலியவற்றால் அழகு செய்து கொள்ளுகிறார்கள். தேங்காய் ஓடு, கிளிஞ்சில், செம்பு என்னும் இவற்றாலாகிய வளையல்களும், புல்லாலும் நாராலும் செய்த காலணிகளும் உண்டு. ஒட்டியாணங்களும், கை கால் விரல் மோதிரங்களும், ஆரங்களும் பெண்களுக்கு இன்பம் தரும் மற்ற அணிகளாகும். ஆதிக்குடிகள் சமூகத்தில் ஆண்களும் இவ்விதமாகக் காதுகளையும், மூக்கின் நடுச்சுவரையும் நகை அணிவதற்காகத் தொளைத்துக் கொள்வதோடு மோதிரங்களையும் கைக்கடகங்களையும் அணிகிறார்கள். தந்தம், பவளம், வெள்ளி, பொன், விலையுயர்ந்த கற்கள், விலையுயர்ந்த பொருள்கள் இன்று அவர்களுடைய அணிவகைகளைப் பெருக்கியிருக்கின்றன. ஆனால் மந்திர சம்பந்தமான குலிசத்திற்காகக் கிளிஞ்சில்களையும், எலும்புகளையும், பற்களையும், ஆதி மனிதன் அணிந்ததிலிருந்தே இன்றுள்ள அணிகலன்கள் தோன்றியிருக்க வேண்டும். உடைகளும் அணிகலன்களும் ஆதிச்சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்றிருந்தன. அவை ஆண் பெண் பான்மையையும் அந்தஸ்தையும் வரையறுக்கின்றன. ஹி. ரா.

ஆடைகள் (சிற்பம், இலக்கியம்) : ஒவ்வொருகாலத்து ஆடைகளை, அவ்வக் காலத்துச் சிற்பங்களும் சித்திரங்களும் நன்றாகக் காட்டும். ஆடைகளின் வருணனையை இலக்கியங்களிலும் காணலாம். தமிழ் நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற் பல்லவர் காலத்திலிருந்துதான் சிற்பங்கள் அகப்படுகின்றன. ஆந்திரப் பகுதியிலுள்ள அமராவதி, ஜக்கய்யப்பேட்டை, நாகார்ஜுனகொண்டா போன்ற இடங்களில் அகப்பட்ட பௌத்த சிற்பங்கள், கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை இருந்த ஆடைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 400-ல் இருந்து கி.பி.650, 700 வரை உள்ள ஆடைகளைப் பற்றி, அக்காலத்தில் தென் இந்தியாவுடன் தொடர்புகொண்ட சாளுக்கிய இராச்சிய ஊர்களான பாதாமி, ஐஹோல் முதலிய இடங்களிலுள்ள சிற்ப வகைகள் காட்டுகின்றன. இதனால் சரித்திர காலத்திற்கு

ஆடைகள்-படம் - 1
அமாாவதிச் சிற்பங்கள்-முதல் வரிசை (கி.மு. 2ஆம் நூ.) : 2.வது வரிசை (கி. பி. முதல் நூ.) ; 3-வது வரிசை (கி. பி. 2ஆம் நூ.)
உதவி : வை. மு. ஈரசிம்மன்

முன்னிருந்து, கி. மு. 200 வரை உள்ள காலத்தை முதற் பகுதியாகவும், கி.மு.200-ல் இருந்து இக்காலம் வரை உள்ள காலத்தை இரண்டாம் பகுதியாகவும் வரையறுத்து, முதற்காலப் பகுதியில் இந்தியா முழுவதையும்பற்றிப் பொதுவாகக்கூறி, இரண்டாம் காலப் பகுதியில் தென் இந்தியாவையும், முதன்மையாகத் தமிழ்நாட்டையும்பற்றி விரிவாகச் சொல்லப்படும்.

கி.மு. 200 வரை: வரலாற்றுக் காலத்திற்கு முந்திய குகைச் சிற்பங்களில் வடிவங்கள் நிருவாணமாகத்தான் காணப்படுகின்றன. அடுத்தபடியாகச் சிந்து வெளி நாகரிகக் காலத்திய (கி.மு. 3500-கி. மு. 1500) மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் வெட்டியெடுக்கப்பட்டசிற்பங்கள் பெரும்பாலும் ஆடையற்றன வாயும், சில சல்லடம் (லங்கோடு) அணிந்தனவாயும், மற்றும் சில போர்வை போர்த்தனவாயும், மயிரை நாடாவால் கட்டியனவாயும் காணப்படுகின்றன. பெண்கள் விசிறி போன்ற தலைப்பாகை அணிந்துள்ளார்கள். மொகஞ்சதாரோ அழிந்து ஆரியர் குடி புகுவதற்கு இடையில் இந்திய நாட்டின் நாகரிகத்தை அறியச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆரியர்கள் குடியேறிய பிறகு வேத நாகரிகம் தொடங்கி, ஆயிரம் ஆண்டுகள் (கி. மு. 1500-கி.மு. 500) வளர்ந்து வந்தது. ஆயினும், முதல் எண்ணூறு ஆண்டுகளில் மிக்க மாறுதல்கள் இல்லை. ஆரியர்கள் தங்கள் ஆடை வகைகளையே மிகுதியாக அணிந்துவந்தபோதிலும் இங்கிருந்த மக்களின் ஆடைகளைப் போலவும் அணியலாயினர். அன்னவர் தோல், புல், மரவுரிகளாலான ஆடைகளை

ஆடைகள்-படம் 2
முதல் வரிசை - அமராவதிச் சிற்பம் (கி.பி. 3-4 ஆம். நூ.); இரண்டாம் வரிசை-சாளுக்கியச் சிற்பம் (கி.பி. 5-7ஆம்.நூ.)
உதவி : வை, மு. நரசிம்மன்

உபயோகித்தார்கள் வேத இலக்கியங்களில் ஆடையின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வொரு தேவதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. துணிகளில் கொச்சு முதலிய வேலைப்பாடுகள் இருந்தன. அடுத்த மகாஜனபத காலத்தில், சைசுநாகர், நந்தர் முதலியோரிடத்து (கி.மு.642-320) இந்திய நாகரிகம் இன்னும் சற்று முன்னேறியது. இக்காலத்தில், காசிப்பருத்தி மிகப் பிரசித்தமாக இருந்தது. மக்கள் பட்டுத் துணிகளையும் உடுத்து வந்தனர். செருப்பு அணியும் வழக்கமும் இருந்தது. அக்காலத்துப் பௌத்த நூல்களில் துணிகளை வெட்டுதல் தைத்தல் என்னும் செயல்களைக் குறிக்கப் பல சொற்கள் காணப்படுகின்றன. மௌரியர் காலத்துச் (கி.மு.400 - கி. மு 200) சிற்பங்கள் சில கிடைப்பினும், இலக்கியங்களே பெரிதும் உதவுகின்றன.கௌடிலிய அர்த்த சாத்திரத்தில் தோலைப்பற்றி அதிகமாகக் கூறப்படுகிறது. அதில் பத்துவிதமான கம்பளத் துணிகளைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. அக்காலத்தில் காட்டு மிருகங்களின் மயிரிலிருந்து துணி நெய்யப்பட்டது. மரப்பட்டைகளினாலும் ஆடைகள் செய்யப்பட்டன. காசியும் ரபுண்டரமும் பட்டிற்கு மிகப் பிரசித்தமாக இருந்தன. துணி நெய்வதற்குத் தனிப்பட்ட தொழிற்சாலைகளை அரசர்கள் ஏற்படுத்தினர். அக்காலத்து ஆடைகளைப்பற்றி யவன சரித்திரக்காரர்களும் எழுதியுள்ளனர். மௌரியர் காலத்துக் கடைசிப் பகுதியைப்பற்றியும், சுங்க காலத்தைப் பற்றியும் கவனிக்கையில், (கி.மு. 185 - கி. பி. 200), பல யட்ச வடிவங்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில், முழங்கால் அல்லது குதிகால்வரை தொங்கும் துணி, இடுப்பில் ஒட்டியாணம், மடித்து இட்ட மேலாடை, இவைகள் சாதாரணமாக அணியப்பட்டுவந்தன போலும்.

கி.மு.200 முதல் கி.பி. 400வரை : முதல் முந்நூறு வருடங்களின் ஆடைகளைப் பற்றிச் சிறிதளவே தெரிகின்றது. அமராவதியிலும் ஐக்கய்யப்பேட்டையிலும் கிடைத்த சில சிற்பங்களிலிருந்துதான் அவைகளை அறிய முடியும். சாதாரணமாக, ஆடவர்கள் சீர்திருந்தாத தலைப்பாகை, முழங்கால்வரை தொங்கும் சுருக்கங்களுள்ள ஆடை, பூ வேலை கொண்ட கயிற்றினால் ஆக்கப்பட்ட இடைக்கச்சு, அதிலிருந்து தொங்கும் தைத்த சிறு துண்டு இவைகளையும், பெண்டிர் முழங்கால்வரை தொங்கும் புடவைகள், காலில் பெரிய தண்டை, இடுப்பில் ஒட்டியாணம், கழுத்தில் கண்டிகை, காதுகளில் குண்டலங்கள், இவற்றுடன் தலைக்கு நாற்கோணமான துணிகளால் பல மாதிரியான வகைகளில் முடிச்சுக்களைச் செய்து அணிந்து வந்தனர். (படம் 1). இனி, பின் முந்நூறு ஆண்டுகளில் அணிந்துள்ள ஆடைகளை அறியப் பல சிற்பங்களும், இலக்கியங்களும், கிரேக்கர், ரோமர் எழுதிய குறிப்புக்களும் உள. இந்தக் காலத்தில்தான் இந்தியாவின் நாகரிகம் மிக விரைவாக வளர்ந்தது. மேலும், ரோம் போன்ற மேலை நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு அதிகரித்து, மிகுந்த பொன் அங்கிருந்து இந்தியாவில் வந்து குவிந்தது. வடமேற்கில் காந்தாரச் சிற்பங்களும், வட மதுரைப் பிரதேசத்துச் சிற்பங்களும், தெற்கே அமராவதி, நாகார்ஜுனகொண்டா, கோலி, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் சிற்பங்களும் ஆடைகளின் சரித்திரத்தை நன்கு தெரிவிக்கும். பொதுவாக, இக்காலத்தில் ஆண்கள் அரையில் வேட்டி, மேலே அங்கவஸ்திரம், தலையில் தலைப்பாகை இவைகளையும், மகளிர், அரையில் புடைவையையும், மேலே சில சமயங்களில் சிறிய துண்டையும் அணிந்தனர். தைத்த ஆடைகள், பெரியகால் செருப்பு, சட்டைகள், குல்லாய்கள் சிற்சில சமயங்களில் அணியப்பட்டு வந்தன. மரப்பட்டை, புல், பழத்தோல் இவைகளிலிருந்து செய்யப்பட்ட துணிகளை துறவிகள் உடுத்தினார்கள்.

இனி, தென் இந்தியாவைப் பற்றிக் கவனிப்போம். பாண்டிய நாட்டின் கீழ்ச் சமுத்திரக் கரையில் வசித்த நாகர், உலகப் பிரசித்தமான மெல்லிய மஸ்லின் துணிகளை நெய்து அயல் நாடுகளுக்கு அனுப்பினர். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஆடைகளைப்பற்றி மிகக் கூறுகின்றன. அரசர்கள் சாதாரணமாக முழங்கால்வரை லங்கோடு போல உடை யணிந்தனர். இது வட்டுடை எனப்படும். மக்கள் தம் நிலைமைக்குத் தக்க ஆடை அணிந்தனர். நடுத்தர வகுப்பினர் இடுப்பைச் சுற்றி ஒரு துணியும், தலையைச் சுற்றி மற்றொன்றும் கட்டினர். பணக்காரர் பல வர்ணப் பட்டுக் கயிறுகளில் நீலமணிகளைக் கோத்து, அவற்றால் தலை மயிரைக் கட்டி, அக்கயிற்றின் நுனியைத் தொங்கும்படி விட்டு அலங்கரித்தனர். போர் வீரர் அங்கி அணிந்தனர். பெண்கள் இடுப்பிலிருந்து கால்வரையும் தொங்கும்படி புடைவை கட்டினர். இடுப்பிற்கு மேல் வாசனைப் பொடிகளும் சந்தனக் குழம்பும் அணிந்தனர். பணிப் பெண்கள் தொடையின் பாதிவரையில் வரும்படி உடுத்தனர். காட்டுப் பிரதேசத்துப் பெண்கள் இலைகளைக் கோத்த தழையுடையை இடுப்பில் கட்டி வந்தனர். அமராவதி நாகரிகத்தைச் சார்ந்த சிற்பங்களில் அடவர் வேட்டி முழங்காலுக்கு மேலோ, கீழோ தொங்குகின்ற முன்பின் கச்சத்துடன் இருக்கிறது. அல்லது ஒரு புறம் சுற்றப்பட்டு, மற்றொரு புறம் முழங்கைவழிக் கீழே தொங்குகிறது. சில சமயம் அங்கவஸ்திரம் காணப்படுகிறது. அது முதுகை மூடிக்கொண்டோ அல்லது தோள்களின் மேல் விழுந்து, கைகளின்மேல் வந்து வெளியே அல்லது மார்பில் குறுக்காகவோ போடப்பட்டிருக்கிறது. பலவகைப்பட்ட தலைப்பாகைகளும், கிரீடங்களும் காணப்படுகின்றன. இடுப்புத் துணியைப் பலவகையான கட்டுக்களால் கட்டினர். பெண்களின் அரைப்புடைவை முழங்கால்வரை வந்து, பின் சொருகப்பட்ட கச்சத்துடனோ, அல்லது புடவையின் ஒரு பாகம் சுற்றப்பட்டுக் கச்சம் பின்னர்ச் சேர்க்கப்பட்டோ, அல்லது இடுப்பில் சுற்றப்பட்டுப் பக்கங்களில் கொசுவிச் சொருகப்பட்டோ காணப்படுகின்றன. பலவகைப்பட்ட ஒட்டியாணங்களால் அது கட்டப்பட்டுள்ளது. இதன்மேல் ஒரு துண்டு ஒரு பக்கமோ, இரு பக்கமோ, கால்களின் பக்கங்களில் தொங்கும்படி அணியப்படுகிறது. சாதாரணமாக இடுப்பிற்கு மேல் எவ்வித ஆடையும் காணப்படுவதில்லை. பெரும்பாலும் தலையை மறைக்காமலிருந்த போதிலும், சில சமயங்களில் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் உபயோகிக்கப்பட்டன. அக்காலத்தில் போர்வை போர்த்துக் கொள்வது குறைவுதான். ஆனால், தலையிலிருந்து பின்புற மயிரை மறைத்துப் போர்வை அணிவதுண்டு. குழந்தைகள் சிறிய துண்டையோ, சிறிய சல்லடத்தையோ அணிந்து, தலையில் மிகச் சிறப்பான பெரிய பாகைகளுடன் காணப்படுகின்றன. பல வேளைகளில் மார்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொள்ளுகிறார்கள்.

கி.பி. 400-700: தென் இந்தியாவில் இக்காலத்தில் ஆடையணிவது அநேகமாக மேலே குறித்துள்ள அமராவதிக் காலத்தை ஒத்தே இருந்தது. ஆடவர் ஆடைகளில் இடுப்புக்கச்சை (Girdle)யிலிருந்து தொங்கும் வளைவுகள் (Loops) மிகச் சிறப்புற விளங்கும். இடுப்புக்கச்சை மிகவும் பட்டையாகக் கட்டப்பட்டுள்ளது. மகளிரின் இடைக்கச்சை அழகான முகப்புடன் தொங்கும் பலவகையான முத்துப்போன்ற பட்டையான சரங்களைக்கொண்டு விளங்கிற்று. இக்காலத்தில், முந்திய காலத்துக் கனத்த தலைப்பாகை மறைந்துவிட்டது. ஆடவர் மேல்பாகத்தில் தட்டையாயுள்ள கிரீடத்துடனும், பெண்கள் மயிர்களைப் பலவகையாக முடிந்த நிலையிலும், சில சமயங்களில் அழகாகக் கூர்மையான முனையையுடைய கிரீடத்துடனும் தென்படுகின்றனர் (படம் 2).

அமரகோசம் என்னும் நிகண்டினால் மரப்பட்டை, பஞ்சு, பட்டு, மிருகங்களின் மயிர்கள், இவைகளிலிருந்து செய்யப்பட்ட பலவகையான துணிகளையும், துணிகள் நெய்வது முதல் விற்பனை வரையிலுள்ள வழிகளையும், தைக்கப்பட்ட பலவகை உடுப்புக்களின் பெயர்களையும் அறியலாம். இன்னும் பட்டுக்களைப் பற்றி அக்காலத்திய ப்ருகத்-கல்ப-சூத்ர-பாஷ்யம் வெகு விரிவாகக் கூறுகிறது. அதில் பலவிதமான செருப்புக்களைப் பற்றியும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இவை எல்லாவற்றினும் அக்காலத்தைச் சேர்ந்து உலகப்புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களிலிருந்து அறியும் விஷயங்கள் மிகப்பல. அவைகள் அக்காலத்தில் கிடைத்த பல மாதிரித் துணிகளைக் காட்டுகின்றன. பல கோடுகள், பூ வேலைகள் செய்த சாயத் துணிகள் மிக விரும்பப்பட்டன. இவ்வாறு சோழ, நாயக்க அரசர்கள் காலத்து ஆடைகளைப்பற்றித்

ஆடைகள்-படம் 3
1, 2, 3, 4 பல்லவர் (கி.பி.7-9ஆம் நூ.).
5, 6, 7, 8 சோழர் (,, 9-13 ஆம் நூ.)
9, 10, 11, 12 விஜயநகர் (,, 13-16ஆம் நூ.).
உதவி : வை. மு. ஈரம்மன்

தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டுச் சிற்பக் காலங்களில் (7-16 நூ.) மேலே கடைசியாகக் கூறின காலத்தை ஒட்டியே ஆடைகள் இருந்து வந்தன (படம் 3). அதில் சில வகையான சிற்பங்களின் வடிவே காட்டப்பட்டுள்ளன. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் அவை மிகச் சிறிய சீர்திருத் தங்களை அடைந்தன. பிறகு, விஜயநகர மன்னர் காலங்களில் இன்னும் கொஞ்சம் மாறுதல்களை ஏற்றுக் கொண்டன.

ஆடவர் வேட்டிகள் கச்சத்தைக்கொண்டனவாகி முழங்கால் அல்லது குதிகால் வரையில் தொங்கவிடப்பட்டன. அவைகள் ஒரு பட்டையான இடுப்புச்சுற் றியால் கட்டப்பட்டன. அந்தச் சுற்றிகள் ஒன்று அல்லது பல தொங்கல்களைக் கொண்டனவாக இருக்கின்றன. இன்னும் அவைகளின்மேல் சிறிய துணிபோல ஒன்று முடியப்படும். அதன் முடி சோழ, விஜயநகர மன்னர்கள் காலங்களில் சிங்கமுகம்போலக் காட்டப்பட்டு, முனைகள் கால்களின் பக்கங்களில் தொங்குவது போல் செய்யப்பட்டன. சாதாரணமாக மேல்வேட்டி கிடையாது. ஆனால், விஜயநகர காலத்தில் இடுப்புக்கச்சையின்மேல் அவை பலமாதிரியாக அணியப்பட்டன. பல்லவர், சோழர் காலங்களில் பெண்டிர், இடுப்பிற்கு மேல் ஆபரணங்களை மட்டும் அணிந்து, கீழே பலவிதக் கொய்சகங்களையும் கச்சங்களையும் கொண்ட புடவைகளை உடுத்தி வந்தனர். விஜயநகர காலத்திலிருந்து இரவிக்கைகளை அணிவது சாதாரணமாயிற்று. மற்றைப்படி இடுப்புக்கச்சை ஆடவருடையதை ஒத்தே இருந்தது எனலாம். தலைமயிர் பலவகையாக முடியப்பட்டோ, அல்லது அழகான கரண்ட மகுடத்தால் அலங்கரிக்கப்பட்டோ வந்தது.

அடுத்தபடியாக, முகம்மதிய, ஐரோப்பிய ஆதிக்க காலங்களில் பலவாக மாறுதல்கள் ஏற்படவில்லை. பொதுவாக, அதற்கு முன் ஏற்பட்ட ஆடைகளையே உறுதிப்படுத்தி, தமிழ் நாட்டிற்கெனத் தனிவகைப்பட்ட ஆடைகள் ஏற்பட்டன. அவை நாம் இப்போது நன்கு அறிந்தனவே.

மொகலாயர் வருகைக்கு 1,500 ஆண்டிற்கு முன்பே தைக்கப்பட்ட ஆடைகளைப்பற்றி முன்னோர் நன்கு அறிவராயினும் தட்பவெப்ப நிலையை அனு சரித்து, வேட்டியையும், மேல் துண்டையுமே உடுத்தி வந்தனர். எவ்விதமாக இந்த இரண்டு துணிகளும் மிக அழகாக உடுத்தப்பட்டன என்பதை இந்தியாவின் பண்டைச்சிற்பங்கள் இன்னும் கூறுகின்றன. பார்க்க: தமிழர்.

அணிகள் (சிற்பம், இலக்கியம்) : வரலாற்றுக் காலத்திற்கு முன் தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூரில் (த.க.) சவக்குழிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட நகைகளும், மண் பொம்மைகளின்மேல் காணப்படும் அணிகலன்களும் அக்காலத்து அணிகளை மிகத் தெளிவாகக் காட்டுவதோடு, சோழி வகைகளும், சங்கு வகைகளும் பண்டைத் தமிழரின் மனத்தை மிகுதியுங் கவர்ந்தன எனவும் அவைகள் காட்டுகின்றன. சோழி வகைகளை வெகு நேர்த்தியாகக் கோத்துக் கழுத்து, கை, கால்களிலும் இடுப்பிலும் கட்டி வந்தனர். சங்குகளை மிகத்திறமையுடன் சிறிய வட்டங்களாக அறுத்துக் காப்புக்களாகவும் கடகங்களாகவும் அணிந்தனர் (படம் 1). விலையுயர்ந்த பச்சை, சிவப்பு முதலிய கற்களையும், முத்துக்களையும், பவளங்களையும், பலவகை அணிக

படம் 1 சங்கு வளையல்கள்
(சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளவற்றில் சில)
உதவி : வை, மு. நரசிம்மன்

ளாகச் செய்து அணிந்தனர். பொன்னால் செய்யப்பட்ட மணிகளையும் கோத்துப் புனைந்தனர். அந்தக் காலத்தில் இன்றுபோல மிகப் பல அணிகள் தெரிந்திராவிடிலும், தெரிந்த நகைகளை மிகுதியாக அணிந்து வந்தனர். ஆதிச்சநல்லூர் நாகரிகக் காலத்தது சிந்துவெளி நாகரிகம் என்னும் மொகஞ்சதாரோ-ஹாரப்பா நாகரிகம். அங்குக் கிடைத்த பல அணிகள் ஆதிச்சநல்லூர் அணிகளை ஒத்திருக்கின்றன.

வேதகால நாகரிகம் (கி.மு.1500-கி.மு. 500வரை): ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்குப் பிறகு,கி.மு.3000 முதல் கி.மு.1500 வரை, அதாவது வேதகாலம்வரை இருந்த அணிகளைப் பற்றி அறிய எவ்விதச் சான்றுகளும் கிடைக்கவில்லை. அக்கால அணிகளை வேத இலக்கியங்களிலிருந்து தான் ஒருவாறு ஊகிக்க முடியும். அக்காலச் சிற்பங்களோ, அணிகளோ அகப்படவில்லை. அக்காலத்துப் பெண்கள் தலைக்குக் கும்பா அல்லது குரிரா என்ற அணியையும், காதுகளில் வட்டமான கம்மலையும், கால் கைகளில் காப்புக்களையும், விரல்களில் மோதிரங்களையும், தோள்களில் கடகங்களையும் அணிந்தனர். ஆனால், இவைகள் எல்லாவற்றையும் விடக் கழுத்தில் அணியும் காசுமாலை போன்ற அணியை மிக மதித்தார்கள்; மிக முக்கியமானதாகவும் கருதினார்கள்.

அமராவதிக் காலம் : அணிகலங்களின் வரலாற்றில் கி.மு. 500 முதல் கி. மு. 200 வரை, ஒன்றும் தெரியாத காலமாக உளது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை உள்ள காலத்து அணிகளை, அமராவதி நாகரிகம் நன்கு காட்டுகிறது. அமராவதி, நாகார்ஜுனகொண்டா, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் பௌத்த சிற்பங்களின் மேல் காணும் அணிகள் அப்பொழுது இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. உலகப் புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களின் அமைப்புக்கு இச் சிற்பங்களே மிக்க ஊக்கம் அளித்தன எனலாம். பல வளைவுகள் கொண்ட வளையல்களையும், காப்புக்களையும்,கடகங்களையும் அணிய அமராவதிப் பெண்கள் மிக விரும்பினர். மலர்ந்த தாமரைப் பூவைப்போன்ற திருகைக்கொண்ட அணியால் கூந்தலை அலங்கரித்தனர். தலையைச் சுற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட ஒரு பட்டையான நகையைத் தரித்தனர். அதிலிருந்து நெற்றியில் தொங்கச் சில தொங்கல்களை அணிந்தனர். காதுகளில் பூ, இலை வட்டம், மீன் போன்ற பல வடிவுகள் கொண்ட மிக வியக்கத்தகுந்த பலவிதக் குண்டலங்களைப் பூண்டனர். காதணியிலிருந்து முத்துச் சரங்கள் தோள்களின்மேல் புரள்வனபோல் சில சிற்பங்களில் காணப்படுகின்றன. மேலே மகரக் கொடி செதுக்கப்பட்டுப் பாம்புகள் போலச் சுற்றப்பட்ட கடக வகைகளையும், சங்குகள், பவளங்கள் தந்தங்கள், இரத்தினங்கள் இவைகளால் செய்யப்பட்டோ, அல்லது ஒரே கெட் டியாகவோ, அல்லது பலவிதமான சந்துகளைக் கொண்டோ உள்ள பல நூதனக் கழுத்துச் சங்கிலிகளையும், அச் சங்கிலிகளிலிருந்து தொங்கும் பலவகையான பதக்கங்களையும், கயிறுகளைப் போன்றோ, அல்லது ஒரே தடிப்பாகவோ உள்ள காப்புக்களையும், பொன் வெள்ளி இவைகளால் செய்யப்பட்ட ஒட்டியாணங்களையும், இடுப்புப் பட்டைகள், உதரபந்தங்கள், சன்னவீரங்களையும் அணிந்தனர். ஆனால் விரல்களில் மோதிரம் காணப்படவில்லை.

கடைச் சங்க காலம்: அமராவதி நாகரிகத்தின் இடைக் காலத்தை ஒட்டியது இக்காலம். இக்காலத்துத் தமிழரின் அணிகளைக் குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் அறிவிக்கின்றன. சாதாரணமாகத் தமிழர் மிகப் பல அணிகலன்களை உபயோகித்தனர். பெரிய மிராசுதார்களும், தலைவர்களும், முத்து அல்லது வைரங்கள் கொண்ட ஆரங்களையும், கனமான பொன் கடகங்களையும் அணிந்தார்கள். அரச குலத்தவரும், சிற்றரசர்களும், தங்கள் மதிப்புக்கு ஏற்பக் கால்களில் மணிகள் கட்டிய வீரக்கழலை அணிந்தனர். மற்றோர் சங்கு மாலைகளையும், நீல வெள்ளை மணிகளால் கோக்கப்பட்ட கழுத்தணிகளையும் உபயோகித்தனர்.

சிலப்பதிகாரத்தில் மாதவி யென்னும் நடிகையின் நகைகள் பின்வருமாறு: கால் விரல்களுக்கு மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரங்கள். அடிகளுக்குப் பாதசாலம், சிலம்பு, பாடகம், பரியகம் என்னும் அணிகள். தொடைக்குக் குறங்குசெறி யென்னும் ஓர் அழகிய அணி. இடுப்பில் பூத்தொழிலையுடைய நீலச் சாதர் (Muslin) என்னும் துணியை வெகு அழகாகக் கொசுவிக்கட்டி, அதன்மேல் 32 முத்துச் சரங்களைக் கொண்ட மேகலை. கைகளில் முத்து, பவளம், சங்கு, பொன், இவைகளால் செய்யப்பட்ட பளபளப்பான பலவகை வளையல்கள். கைவிரல்களில் முடக்கு மோதிரம், மரகதத்தை அழுத்திய வட்டப்பூ, மணிகளிழைத்த அடுக்காழி, கழுத்தணிகளாக வீரச்சங்கிலி, நேர்ஞ் சங்கிலி, சவடி, சரப்பளி, முத்தாரம் இவற்றை ஒன்றாய்ப் பின்புறத்தே பிணைத்து, முதுகு மறையவிடும் பின் தாலி முதலியவை. கோமேதகமும்,வைரமும், மாற்றி மாற்றிக் கட்டப்பட்டக் காதணிகள். தெய்வ வுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை, தென்பல்லி, வட பல்லி என்னும் இவை தலை முழுதும் அணி செய்கின்ற தலைக்கோல அணிகள்.

தமிழ்ச் சிற்பக் காலம்: மேலே குறித்த சங்க, அமராவதிக் காலத்திற்குப்பிறகு முந்நூறு ஆண்டுகளின் (கி.பி. 400 முதல் 700 வரை) நிலை நன்கு தெரியவில்லை. அக்கால அணிகளை அறிய பாதாமி போன்ற இடங்களிலுள்ள சாளுக்கியர் சிற்பங்கள் மிக உதவுகின்றன. அச்சிற்பங்களின் மேல் காணப்படும் அணிகள், முன் பல்லவ கால அணிகளையே ஒத்திருக்கின்றன. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கி.பி.700-ல் இருந்துதான் கிடைக்கின்றன. ஏறக்குறைய, கி. பி. 1,600-ல் விஜயநகர சாம்ராச்சியம் அழிந்து, முகம்மதியர், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்பட்டது. ஆகையால், கி.பி. 1600க்கு அப்புறம் ஏற்பட்ட சிற்பங்களை விலக்கிக் கி. பி. 700 முதல் 1600 வரையுள்ள சிற்பங்களைத் தமிழ்ச்சிற்பங்களாகக் கொள்ள லாம். அவைகளின்மேல் காணப்படும் அணிகள் அக்காலத் தமிழ் மக்களின் முக்கிய அணிகளாகும். பல்லவ காலத்திலிருந்து விஜயநகர காலம்வரை காணப்படும் அணிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பினும், காலத்தை ஒட்டிச் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. (படம் 3). கிரீடங்களைப் பிரதிமைகளன்றி மக்கள் யாவரும் அணிந்தன ரெனலாகாது. கிரீட வகைகள் தனியாகப் படம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவகைக் கிரீடத்தைப் பார்த்தவுடனே அது எந்தக் காலத்தியது எனச் சொல்லும்படி ஒரு தனி அமைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, மற்றைய அணிகளும் அமைந்துள்ளன. உதாரணமாகப் பல்லவ காலத்தில் பூணூல் ஒரே பட்டையாகவும், கைமேல் விழும்படி யாகவும், சோழர்காலத்தில் மூன்று நூல்கள் போல் உடம்போடு ஒட்டிய மாதிரியும்,விஜயநகரக் காலத்தில் ஆறு, ஒன்பது, நூல்கள் போலப் பெரிய தாகவும் அமைந்துள்ளன. ஆகையால் அணிகளைக் கொண்டு சிற்பங்களின்காலத்தை மதிப்பிட முடியும். விஜய நகரக் கடைசிக் காலத்தில் சிற்பங்களில் தெரிந்த அணிகளைப் பற்றிக் கீழே விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

படம் 2.
பல்லவ(1, 4, 5, 8), சோழ(2, 3, 6, 9),
விஜயநகர் (7), ஹொய்சாள (10)
கிரீடங்கள்

1. தலை அணிகள்: படம் 4-ல் பெண்களுக்குரிய முக்கியமான தலையணிகள் காட்டப்பட்டுள்ளன.

அணிகளைக் காட்டும் சிற்பங்கள்
உதவி : வை, மு.நரசிம்மன்

2. காது அணிகள் : படம் 5-ல் சில முக்கியமான குண்டலங்கள் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

3. கண்டிகை: இது பொன்வளையத்தில் கோத்த உருத்திராக்க மணிகளைப் போன்ற ஒரு கழுத்தணி. சாதாரணமாகச் சிற்பங்களில் இவைகளின் மேலும்கீழும் இரண்டு வளையமான அணியாகக் காட்டியிருக்கும்.

படம் 4.
1.நாக பில்லை. 2, 4, 7, 8. முன் பில்லை. 3. சந்திர பில்லை. 5. பின்னல் அணி. 6. ராக்கடி.
உதவி : வை. மு. நரசிம்மன்

4. ஆரங்கள் மார்பின் நடுவரையில் வரும்படி அணியும் ஆபரணங்கள். படம் 6-ல் சில வகைகள் காட்டப்பட்டுள்ளன.

5.கழுத்தணிகள்(சங்கிலிகள் அல்லது ஹ்ருந்மாலா): தஞ்சைக் கல்வெட்டுக்களில் இவைகள் கொண்டுள்ள சரங்களை ஒட்டி ஏகாவளி, திரிசாரி, பஞ்சசாரி, சப்தசாரி என்று கூறப்படுகின்றன. பொதுவாக இவைகளைப் பொன்மாலைகள் எனலாம். இவைகள் கழுத்திலிருந்து தொப்புள்வரை தொங்க அணியப்படும். இவைகள், பொன் அல்லது விலையுயர்ந்த இரத்தினங்கள் புதைத்த பொன் வடங்கள், முத்து வடங்கள், அல்லது முத்துக்கள், பொன்மணிகள், இரத்தின மணிகள் கோத்த வடங்கள் ஆகியவைகளாக இருக்கலாம். இன்னும் பலவித இலைகள் பழங்கள் கொடிகள் போலச் . செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் இருக்கலாம். சாதாரணமாக இவைகளின்கீழே முத்துக்கள் கட்டின பதக்கம் கோக்கப்படும்.

6.ஸ்கந்தமாலா தோள்களின் மேலே அல்லது கழுத்தில் தோள்களின் கீழ்வரை தொங்க அணியப்படும் முத்து அல்லது பொன் பூமாலை. இவை பிற் சோழர் காலத்திலிருந்துதான் காணப்படுகின்றன.

7.உதரபந்தம் மிகப்பழைய அணி. வயிற்றின்மேற் பாகத்தில், உந்திக்கு மேல் கட்டப்படும் இரண்டு, மூன்று அங்குலமுள்ள ஒரு பட்டை. பலவித இரத்தினங்களால் இழைக்கப்பட்டு மிக நேர்த்தியாகக் காணப்படும். சாதாரணமாக, ஆண் சிற்பங்களிலேதான் இவைகளைப் பார்க்க முடியும்.

8.சன்னவீரம் ஒன்றை ஒன்று குறுக்கிட்டுச் செல்லும் இரண்டு பூணூல்களைப் போல், ஆண்களும் பெண்களும் அணிவது. வீரர் அணிவதாகக் காவியங்களில் வந்துள்ளது.

9. கடகம் சன்னவீரம் போல் இருபாலாரும் தோளில் அணிவது. நீண்ட முகப்போடு கூடிய வளையம். முகப்பு மகரக்கொடி அல்லது பாம்புபோல் செய்யப் படலாம். முத்து, இரத்தினங்களால் இழைக்கப்பட்டோ அல்லது முழுவதும் பொன்னிலோ செய்யப்படலாம்.

10.வளையல்கள், மோதிரங்கள்: இவ்விரண்டும் நன்கு தெரிந்திருப்பதால், அவைகளைப்பற்றிக் கூற அவசியமில்லை.

11. கடிசூத்திரமும் ஊருதாமமும் இக்காலத்து ஒட்டியாணங்களையும், அவைகளிலிருந்து தொங்கும் மணிகளையும் போன்றன.ஐந்து அல்லது மூன்று பட்டைகளைக்கொண்டு முன்பக்கம் சிங்கம்போன்ற முகப்பில் சேர்க்கப்பட்ட இடுப்பணி. தஞ்சைக் கல்வெட்டுக்களில் கடிசூத்திரம், பட்டிகை என வழங்கப்படுகிறது. சிற்பியின் வேலைத்திறம் முழுவதும் இந்த அணியில் காட்டப்படும். அதிலிருந்து தொங்கும் பல வளைவுகளைக் கொண்ட முத்துச் சரங்கள் ஊருதாமம் என்று சொல்லப்படும். இச் சரங்கள் தொடையின் கீழ்வரையில் தொங்கலாம். பல்லவ, முற்சோழர் காலச் சிற்பங்களில் ஒரே ஒரு முத்துச் சரந்தான் காணப்படும். ஆனால், பிற்காலச் சிற்பங்களில் ஒவ்வொரு தொடைமேல் இரண்டும், நடுவில் ஒன்றும் ஆக ஐந்து மாலைகள் காணப்படும்.

12. கால் அணிகள் காப்புக்கள், கொலுசுகள், தண்டைகள், சிலம்புகள், விரல்களுக்கு மோதிரங்கள். சாதாரணமாக, இவைகள் வெள்ளியில் செய்யப்படும். சிலம்புகளுக்குப் பாதசாலகம் என்று பெயர். இது சிறிய குழாய் போல வளைந்து கால்களில் படிய அணிவது. குழாய்க்குள் இரத்தினங்களோ, சிறிய மணிகளோ போடப்படும். அல்லது கெட்டியாகச் செய்யப்பட்டால் சிறிய மணிகள் அதில் தொங்கவிடப்படும்.

படம் 5. குண்டலங்கள்
உதவி : வை. மு. நரசிம்மன்

கம்பராமாயணம் (பாலகாண்டம் - கோலங்காண் படலம்), சீவகசிந்தாமணி (இலக்கணையாரிலம்பகம்) போன்ற தமிழ்க் காவியங்களிலும் பலவிதமான அணிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவைகளில் சில இப்போது உபயோகத்தில் இல்லைபோலும். உதாரணமாகத் தங்கத்தினால் இயன்ற தோடு, சுறவுக் குழை, இரத்தினங்களினால் இயன்ற கடிப்பு அல்லது குதம்பை என்ற ஆண், பெண்கள் காதணிகள், பொன், முத்து, வைரம் இவைகளாலாகிய பல தோள் அணிகள், தாரகச்சும்மை என்ற நட்சத்திரத் தொகுதிபோல முத்துக் கூட்டத்தாலாகிய இடையில் அணியும் நகை இவைகளைக் கூறலாம். இக் காலத்தில் மூக்கில் அணியப்படும் திருகுகள், மூக்குத்திகள், புலாக்குகள், காதுகளில் மடலின் நடுவிலும் மேலும் அணியப்படும் நகைகள் பண்டைக்காலச் சிற்பங்களின்மேல் காணப்படவில்லை. அவைகள் அயல்நாட்டு வியாபார மூலம் ஏற்பட்டிருக்கலாம்.

முடிவு: மேலே முக்கியமான சில அணிகளே குறிக்கப்பட்டுள்ளன. பலவகையான பண்டைக்கால அணிகளை மிக அழகாகச் சிற்பிகள் பல சிற்பங்களின்மேல் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். கவிஞரும் இனிது வருணித்துள்ளார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சில அணிகளை அணிவதும் விலக்குவதும் வழக்கமாயிற்று. அரசர்கள் கிரீடங்களை விசேஷகாலங்களில் கட்டாயமாக அணியவேண்டும். மணிகளைக்கொண்ட ஒட்டியாணத்தையும் கால் தண்டையையும் கணவனைப் பிரிந்து வசிக்கும் மனைவியர் அணியலாகாது. நடிகைகள் எல்லா ஆடை அணிகளுடனும் காணப்படுவார்கள். கர்ப்பிணிகள் முக்கியமாகச் சில அணிகளையே அணிவர். சிற்பங்களின் அணிகள் அம்சுத்பேதாகமம், மானசாரம், சில்பரத்னம், பாத்மசம்ஹிதா போன்ற ஆகமங்களில் நன்கு சொல்லப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் சங்கு, பவளம், முத்து மிக உபயோகப்பட்டன. ஆனால், இக்காலத்தில் வைரங்களே வெகுவாக உபயோகிக்கப்படுன்றன.

படம் 6. ஆரங்கள்
உதவி : வை. மு. நரசிம்மன்

இன்னும்,அழகிலும் வேலைப்பாட்டிலும் பண்டைக்கால நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள அணிகள் மிக மேம்பட்டே விளங்குகின்றன. பல நூற்றாண்டுகள் ஆகியும், பல புராதன அணிகள் இன்றைக்கும் ஒரு சிறிய அளவு மாறுதலுடனேயே உபயோகப்பட்டு வருகின்றன. வை. மு. ந.