உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆந்தைகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆந்தைகள் : இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம்.

நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தைகளின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு.

உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப்பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற்போதிலும் கம்பங்கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட்டினதும் கூக்குரலிடும்.

ஆந்தை

இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார்பும் வயிறும் உடையதும், கரும்புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட்டான் (Barn or Screech Owl) எனப்படும் மற்றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டைகளிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது.

குகைகளில் வாழும் பெருங்கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறைகள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளையும் இருளில் கொன்று வாழும். இதன் ஆழ்ந்த குரல் அந்திப் பொழுதில் நீண்டு தொனிக்கும்.

ஆந்தை
(ஊமன்)

கூகையைப் போலவேயுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந்தையின் கொம்புகள் குத்தாய் நிற்காது சிறிது படிந்திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர்வை அற்றிருக்கும். இது தண்ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலிகளையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா. கி.