கலைக்களஞ்சியம்/ஆனிக்கோபொரா

விக்கிமூலம் இலிருந்து

ஆனிக்கோபொரா (Onychophora) இது மிகச் சிறியதான ஒரு விலங்கு வகுப்பு. பெரிபதஸ் என்னும் புழுப்போன்ற ஒருவகைப் பிராணிதான் இந்த வகுப்பிலுள்ளது. பெரிபதஸ் பார்வைக்குப் பட்டுப் பூச்சிப் புழுப்போலத் தோன்றும். இரண்டு, இரண்டரை அங்குல நீளமிருக்கும். உடல் உருட்சியாக மெத்தென்றிருக்கும். நிறம் வெவ்வேறு இனத்தில் வெவ்வேறாக இருக்கும். சில கரிய சாம்பல் நிறம், சில ஒலிவப்பச்சை

ஆனிக்கோபொரா

நிறம். சில பழுப்பு நிறம், சில செங்கல் நிறம். எல்லாவற்றிற்கும் வயிற்றுப் பாகம் வெண்மையாக இருக்கும். தோல் மிக மெல்லியது. அதில் நிறையச் சிறு சிறு மறுக்கள் இருக்கின்றன. தலையில் நன்றாகத் தெரிகின்ற இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இரண்டு கண்கள், வாய்ப் பக்கங்களில் இரண்டு, சிறு காம்பு போன்ற உறுப்புக்கள், வாய்க்குள் இரண்டு தாடைகள், இவையெல்லாம் பக்கத்திற்கொன்றாக அமைந்திருக்கின்றன. வாய்க் காம்புகளில் தொளைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகப் பிசின்போன்ற நீர் வெளிப்படும். இந்தப்பிசின் உடலினுள்ளிருக்கும் இரண்டு பிசின் சுரப்பிகளில் உண்டாகின்றது. இது தற்காப்புக்கும் இரையைப் பற்றுவதற்கும் உதவுகின்றது. இந்தப் புழுவைத் தொட்டால் பிசின் பீச்சிட்டுச் சில அங்குல தூரம் அடிக்கும். இதன் உடல் பல வளையங்களால் ஆனது. உடலில் இத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கால்கள் காட்டுகின்றன. 13 இணை முதல் 42 இணை வரையில் கால்கள் வெவ்வேறு இனங்களில் இருக்கின்றன. அந்தந்த இனத்தின் உடலில் எத்தனை வளையங்கள் சேர்ந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். வெளியே வளையங்களைக் காட்டும் வரைகளில்லை. கால்கள் உள்தொளை உள்ளவை. அவற்றின் நுனியில் கூரிய கொக்கிகள் உண்டு. இந்த இனங்களில் பெரும்பாலானவை குட்டிபோடுகின்றன. ஒரு பெண் 30-40 குட்டிகள் ஓர் ஆண்டில் போடும். பெரிபதஸ் சுறுசுறுப்பான பிராணியன்று. மடித்துப்போன மரங்களில் பட்டைகளுக்கடியிலும் கல்லுக்கடியிலும் சந்துகளிலும் மரவட்டைபோல வாழும். இரவில்தான் திரிந்து இரைதேடும். வெளிச்சத்தில் வாராது. கறையான், மரப்பேன், சிறு ஈக்கள் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும்.

ஆனிக்கோபொரா கணுக்காலித் தொகுதியிலே ஒரு வகுப்பு. இத்தொகுதியிலுள்ள மற்ற வகுப்புக்கள்நண்டு, இறால் முதலியவை அடங்கிய ஓட்டுமீன்கள், பூச்சிகள், மரவட்டை, பூரான்கள், தேள், சிலந்திகள் என்பவை, இந்நான்கும் பெரிய வகுப்புக்கள். இவற்றுடன் ஒத்த படியில் ஆனிக்கோபொரா என்னும் இந்தச் சிறு கூட்டத்தையும் ஒரு வகுப்பாக அமைத்திருக்கிறது. மிகச் சிறிய இக்கூட்டத்தை மிகப் பெரிய கூட்டங்களுக்குச் சமமாக வைப்பதற்குக் காரணம் இதிலுள்ள பல அரிய உயிரியற் சிறப்பியல்புகளாகும்.

பெரிபதஸிலே மிகப்பழமையான நிலையைக் காட்டும் உடலமைப்புப் பண்புகளும் வளையப் புழுக்கள் தொகுதிக்குரிய சில பண்புகளும் தோன்றுகின்றன. விலங்குலகத்திலே இரண்டு பெரும் பிரிவுகளான இந்தத் தொகுதிகளுக்கு நடுவான ஓரமைப்பு இந்தப் பிராணியில் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த உயிர் மிகவும் தாழ்வானதானாலும் விலங்கியலாராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கழிவுறுப்புக்கள் புழுக்களிலுள்ளவை போன்றவை. உடம்பின் வளையத்துக்கு ஒரு ஐதையாகக் குழாய் வடிவமாக இருக்கின்றன. மூச்சு உறுப்புக்கள் ஈ, எறும்பு முதலிய கணுக்காலிகளின் உடலில் உள்ளது போன்ற மூச்சுக் குழாய்கள் (Tracheae). இந்தப் பண்பைக் கொண்டே பெரிபதஸைக் கணுக்காலித் தொகுதியிற் சேர்த்திருக்கின்றது. ஆயினும் இதற்கும் மற்றக் கணுக்காலிகளுக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் காண்கின்றன. இறால், பூச்சி, தேள் முதலியவற்றின் தோலில் கெட்டியான பாகங்களும், அவற்றிற்கிடையே மெல்லிய பாகங்களும் மாறிமாறி வரும். அதனால் உடம்பு வளையம் வளையமாகத் தோன்றும். கால்கள் கணுக்கணுவாக இருக்கும். பெரிபதஸின் தோல் மிக மெல்லியது. இலேசாக மடியக் கூடியது. ஆதலால், இதன் உடம்பில் வளையமோ கால்களில் கணுக்களோ காண்பதில்லை. இது கணுக்காலித் தொகுப்பைச் சேர்ந்ததானாலும் இதன்கால்களில் கணுக்களில்லை மேற்சொன்னபிராணிகளின் கால்கள் உணர்கொம்பு, கண், பலவிதமான தாடைகள், இடுக்கி, நடக்கும்கால், நீந்துங்கால் மூச்சுறுப்பு எனப் பலவித மாறுபாடுகளை அடைந்திருக்கின்றன. இங்கு உணர்கொம்பு, தாடை என இரண்டொரு மாறுபாடுகள் தாம் உண்டு. இது தோற்றத்தில் புழுவுக்கும் பூரானுக்கும் நடுவானதாகக் காண்கிறது.

இதன் உள்ளமைப்பில் கணுக்காலிப் பண்புகள் காண்கின்றன என்றும், அவற்றுள் ஒன்று மூச்சுவிடும் உறுப்பு என்றும் மேலே சொல்லப்பட்டன. மூச்சுக் குழாய்கள் தோலிலுள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுகுழிகளிலிருந்து கொத்துக் கொத்தாக எழுந்து உடம்பினுள்ளிருக்கும் பல உறுப்புக்களுக்கும் செல்கின்றன. இன்னொரு முக்கியக் கூறு இதன் உடலின் உள்ளறை. (Body cavity). இது இரத்தம் நிரம்பியது, அனால் இரத்தம் நிரம்பிய உள்ளறை பின்னால் தான் ஏற்படுகிறது. இது கருவாக வளரும் இளம் பருவத்தில் சாதாரண மண் புழுவிலிருப்பதுபோல சாமானியமான இரத்தமண்டலம் இருக்கின்றது. பாய்குழாய்களும் வடிகுழாய்களும் இருக்கின்றன. இரத்தம் இல்லாத உண்மையான உடலறை (Coelom) உண்டு. ஆனால் இது வளர வளர, வடி குழாய்களிற் சில மெல்ல மெல்ல அகன்று பெரியவாகி முதலிலிருந்த உடலறையை அழுத்திச் சுருக்கி எங்கோ சிறு மூலைகளில் தெரியாதவாறு ஒடுக்கிவிட்டு, முதிர்ச்சி முற்றிய உடலிலே இவையே இரத்தம் நிறைந்த இரத்தவுடலறையாக (Haemocoelic body cavity) ஆகிவிடுகின்றன : இதிலுள்ள புழுக்களை யொத்த அமைப்பு இதன் கழிவுறுப்புக்களில் காண்கின்றதென மேலே குறிக்கப்பட்டது. இவை மண் புழுவிற்போல உடல் நெடுக இருக்கின்றன. ஓர் இணைக் காலுக்குச் சமமாக, ஓர் இணைக் கழிவுச் சுரப்பிக்குழாய் (Nephridium) இருக்கின்றது. இக்குழாய்களில் உள்ள சில அணுக்களில் மிக நுண்ணிய மயிர்கள் (Cilia) உண்டு. நுண் மயிருள்ள அணு கணுக்காலிகளில் இல்லாத, ஆனால் புழுக்களில் காணும், ஒரு பண்பு.

இவ்வாறு பெரிபதஸின் உடலமைப்பும் முதிர்ச்சியும் இது வளையப்புழுத் தொகுதிக்கும் (Annelida) கணுக்காலித் தொகுதிக்கும் (Arthropoda) இடைப்பட்டதாக இருப்பது என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உள்ள பரிணாம சம்பந்தத்தை இவை விளக்குகின் றன. வளையப் புழுக்களைப்போன்ற உயிரினங்களிலிருந்து கணுக்காலியினங்கள் பரிணமித்துச் சென்ற வழியிலே தோன்றும் அடிச்சுவடு போல இருக்கின்றது இந்த வகுப்பு.

பெரிபதஸை, அறிஞர் அக்கறையோடு ஆராய்வதற்கு மற்றொரு காரணம் அதன் பரவுநிலை (Distribution). இது உலகத்தைச் சுற்றிலும் பல பாகங்களில் காணப்படுகிறது. மேற்கு இந்தியத் தீவுகள், மேற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்க தென் அமெரிக்காவின் வடபகுதி, சிலி, தென்னாப்பிரிக்கா, திபெத்து, இந்தியா, மலேயா, மெலனீசியா, ஆஸ்திரலேசியா என்று இப்படி மிகப் பரந்து கிடக்கும் நாடுகளில் அகப்படுகிறது. ஆயினும் தொடர்ந்து வியாபித்திராமல் இடைவிட்டு இடைவிட்டு அகப்படுகிறது. இப்படி இடைவிட்ட நாடுகளிலும் இது அகப்படும் பிரதேசங்கள் மிக மிகக் குறுகிய குறித்த சில இடங்கள்தாம். இந்தப் பிராணிகள் இப்போது அகப்படும் இடத்தோடு சேர்ந்து இவை உயிர் வாழ்வதற்கு ஏற்ற தன்மையுடைய இடங்கள் அகன்று கிடந்தாலும் இவை ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன. இந்த மாதிரிப் பரவுநிலை நுரையீரல்மீன்களில் (Dipnoi) காணப்படுகிறது. இந்த இடைவிட்ட பரவு நிலையால் (Discontinuous distribution) அறியக் கிடக்கும் பரிணாம தத்துவம் : இந்தவகையுயிர்கள் முன்பு நெடுந்தூரம் பரவியிருந்திருக்க வேண்டும். அவற்றின் சாதி, இனம், தொகை கூட முன்பு மிகுதியாக இருந்திருக்கவேண்டும். இப்போதுள்ளவை அவற்றுள் எஞ்சியிருப்பவை. இவை தேய்வுற்று வருபவை, நாளடைவில் முற்றிலும் அற்றுப்போனாலும் போகலாம் என்பதாம்.

பூச்சிகளிலும் புழுக்களிலும் நரம்பு மண்டலம் இரண்டு நெருங்கிய இழைகளாக வயிற்றுக்குக் கீழே உடலின் நெடுக ஓடும். ஆனால் பெரிபதஸில் இந்த நரம்பிழைகள் நடுவில் சேர்ந்திராமல் உடலின் பக்கத்திற்கு ஒன்றாக அகன்று இருக்கின்றன. இவற்றை இணைக்கும் குறுக்கு நரம்புகள் ஏணியின் படிகள் போலப் பல இருக்கின்றன.

பரிணாம வழியில் தோன்றும் சுவடுகளில் இன்னொன்று பெரிபதஸ் போன்ற ஆஷியையா (Asheaia) என்னும் பாசில் (Fossil). இது கேம்பிரியன் காலத்துப் பாறைகளில் அகப்படுவது. இது கடற் பிராணியெனத் தெரிகிறது.

ஆனிக்கோபொரா புழுப் போன்றவையானாலும் அழகு மிக்கவை, உணர் கொம்புகளின் மிக நுட்பமான உணர்ச்சியும், ஓயாமல் மாறிக்கொண்டேயிருக்கும் வடிவமும், நன்றாகத் திரண்டு கொழுவியதாகக் காணும் உடலும், தலையின் பக்கங்களிலே சிறு வைரங்கள் பதித்தது போன்ற கண்களும், நயமிக்க கால்களும், இவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தோலின் செழுமையான நிறங்களும், மக்மல் போன்ற நெசவும் இத்தனையும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிராணிகளுக்கு முற்றிலும் அசாதாரணமான அழகிய தோற்றத்தை அளிக்கின்றன என்று செஜ்விக் அறிஞர் கூறுகின்றார்.