கலைக்களஞ்சியம்/ஆன்கரா
ஆன்கரா (Ankara) துருக்கியின் தலைநகரம். பண்டை நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குமுன் கால் (Gual) நாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்களின் தலைநகராக இருந்தது. பைசாண்டிய நாகரிக காலத்தில் இது முக்கிய நகர். இதன் பின்னர் இது பலமுறை கைமாறியது. 1415-ல் இதைத் துருக்கியர்கள் மீட்டுக் கொண்டனர். கெமால் பாஷா 1920-ல் இங்குத் தமது அரசாங்கத்தை ஏற்படுத்தினார். 1923-ல் இது நாட்டின் தலைநகராக்கப்பட்டது.
நகரம் செங்குத்தான மலையின்மேல் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலக் கோட்டையின் சிதைவுகள் உள்ளன. பண்டை ஐரோப்பியக் கட்டடச் சிற்ப முறையில் அமைந்த கட்டடங்கள் பல உள்ளன. குறுகிய தெருக்களையுடைய இந்நகரம் தலைநகராக்கப்பட்டபின் தற்கால வசதிகளோடு சீர் திருத்தப்பட்டது. பல தொழிற்சாலைகள் நிறுவப்பெற்றன. ஓடு, துணி, கித்தான் துணி முதலியவை உற்பத்தியாகின்றன. கம்பளித் துணி, மோஹேர் கம்பளி, தானியம் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து வரும் தேனும் பழமும் பேர் போனவை. மக்: 2.86,781(1950).