உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆன்மா

விக்கிமூலம் இலிருந்து

ஆன்மா: ஆத்மா என்பது உயிர்ப்பது என்னும் பொருளுடைய அன் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அதனால் அது உயிர் என்னும் பொருளுடைய பிராணன் என்னும் சொல்லுடன் சம்பந்தம் உடையது. ஆத்மா என்னும் சமஸ்கிருத பதந்தான் தமிழில் ஆன்மா என்று வழங்கப்படுகிறது. இந்த மொழி இருக்கு வேதத்தில் சுமார் முப்பது தடவை பல பொருளில் காணப்படுகிறது. ஆயினும் ஆன்மா என்பது உடலினின்று வேறுபட்டதும், உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனபின் பூமியில் செய்த செயல்களின் பலன்களைத் துய்ப்பதுமான மனித ஆவியையே குறிக்கிறது. உபநிடதங்களிலும் இந்தப் பொருளிலேயே ஆளப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் அது உபநிடதச் சொல்லான பிரமம் என்பதற்குப் பதிலாக வந்துள்ளது. அப்பொழுது அதன் பொருள் பிரபஞ்சத்தின் மூல தத்துவம் என்பதாகும்.

சாருவாகர்கள் உடலினின்று வேறான ஆன்மா ஒன்றை ஒப்புக்கொள்ளவில்லை, சில வாதிகள் இந்திரியங்களையோ அல்லது பிராணனையோ அல்லது மனத்தையோதான் ஆன்மா என்று கூறிவிடுவார்கள். உபநிடதங்கள் கூறும் ஆன்மாவைப்பற்றிப் புத்தர் கருதியது யாது என்பது விளங்கவில்லை. அவர் ஆன்மா உளது என்பதாகவும் கூறவில்லை; இலது என்பதாகவும் கூறவில்லை. புத்தருக்குப் பின் பௌத்தமதத்தினர் நான்கு பிரிவினராகப் பிரிந்தனர். அவர்களுள் மாத்தியமிகர் என்போர் ஆன்மா என்பது தனிப்பட்ட சூனியந்தான் என்று கூறுகிறார்கள். மற்றப் பிரிவினரான விஞ்ஞான வாதிகள் ஆன்மா என்பது பகுத்தறிவாகிய விஞ்ஞானமேயன்றி வேறன்று என்று கூறினர். இந்த அறிவும் கணநேரமே நின்று போகும் மனோநிலைமையின் பிரவாகமாதலால் ஆன்மா என்பதும் கணந்தோறும் வேறுபடும் தத்துவமேயன்றிச் சாசுவதத் தன்மையுடைய தத்துவமன்று என்று கூறுகிறார்கள். ஆன்மா வேறு, உடம்பு வேறு என்றும், அவை இரண்டும் ஒரே பரிமாணம் உடையன என்றும், ஆன்மா விரியவும் சுருங்கவும் கூடிய சக்தி வாய்ந்தது என்றும் சமணர்கள் கூறுகிறார்கள்.

வைதிக தரிசனங்கள் என்னும் இந்து தத்துவ சாஸ்திரங்கள் ஆறும் நித்தியமான ஆன்மா வேறு, அநித்தியமான உடல் வேறு என்பதை ஏற்றுக்கொள்கின்றன. இந்தத் தரிசனங்களிடையே சில சிறு வேறுபாடுகள் காணப்படினும், புறத்தேயிருந்து வந்து உடலில் புகுந்துவிட்ட மாசுகளை எல்லாம் நீக்கிவிட்டால் எஞ்சி நிற்பது ஆன்மா என்பதே அவை அனைத்தும் கூறும் முடிவாகும். எச். ஜீ. ந.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆன்மா&oldid=1461611" இலிருந்து மீள்விக்கப்பட்டது