கலைக்களஞ்சியம்/ஆம்ஹர்ஸ்ட் பிரபு
ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1773-1857) : வில்லியம் பிட் என்னும் பெயருடைய ஆம்ஹர்ஸ்ட் பிரபு சீனாவிற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாகச் சென்று வந்தவர். 1824-ல் இவர் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமனம் பெற்றார். இவர் காலத்தில் முதல் பர்மிய யுத்தம் (1824-26) நடைபெற்றது. அந்த யுத்தத்தின் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றியடைந்தனராயினும், ஆம்ஹர்ஸ்ட்டின் திறமைக் குறைவால் ஆங்கிலேயர்கள் மிகுந்த நஷ்டமும் துன்பமும் அடைந்தனர். 1824-ல் வங்காள சிப்பாய்களிடையே ஏற்பட்ட பரக்பூர் கலகத்தை ஆங்கிலேயர்கள் கடுமையாக அடக்கினர். 1826-ல் பரத்பூர் இளவரசனை ஏமாற்ற நினைத்த துர்ஜனசால் என்பவனை எதிர்த்துப் பரத்பூரில் நடந்த போரில் ஆங்கிலேயர் வெற்றியடைந்தனர். முதன் முதலில் கோடைக்காலத்தில் சிம்லாவில் வந்து தங்கிய கவர்னர் ஜெனரல் இவரே. ஆம்ஹர்ஸ்ட் பிரபு 1828 மார்ச்சில் கவர்னர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்குச் சென்றார். இவர் 1857-ல் இறந்தார். தே. வெ. ம.