உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆமணக்கு

விக்கிமூலம் இலிருந்து

ஆமணக்கு: இந்தியாவின் எண்ணெய் வித்துக்களில் ஆமணக்கு முக்கியமானது. இச்செடி இந்தியாவில்தான் ஆதியில் தோன்றியது எனச் சிலர் கருதுகிறார்கள்; வட ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று கூறுவோரும் உண்டு. சென்னை இராச்சியத்தில் இது 25 இலட்சம் ஏக்கர் பயிரிடப்படுகிறது. 1948-1949ல் இந்தியாவின் ஆமணக்கு உற்பத்தி சுமார் 1,10,000 டன். இதில் ஏறக்குறைய பாதி ஐதராபாத் இராச்சியத்தில் விளைகிறது. உலகில் ஆமணக்கு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தையும், இந்தியா அதற்கடுத்த இடத்தையும் வகிக்கின்றன.

ஆமணக்குச் செடியின் விஞ்ஞானப்பெயர் ரிசினஸ் கம்யூனிஸ் (Ricinus communis). இதில் ஓராண்டு வகையும், பல ஆண்டு வகையும் உண்டு. இது நேரான, உட்டுளையுள்ள தண்டுள்ளது. இலை அங்கை வடிவமும், ரம்பம் போன்ற விளிம்புமுள்ளது. இதன் இலைக் காம்புகளும் தண்டும் பச்சை முதல் நீலச் சிவப்புவரை

ஆமணக்கு
1. கிளை 2. பூக்கொத்து அடிப்பாகத்தில் ஆண் பூக்கள், நுனிப்பாகத்தில் பெண் பூக்கள், 3. இளங்காய்–நெடுக்கு வெட்டு.

பல நிறங்கள் கொண்டிருக்கலாம். பூக்கள் பெருங்கொத்தாகக் கிளைகளின் நுனியில் உண்டாகும். ஒரு பாலுள்ளவை. கொத்தின் அடியில் ஆண் பூக்களும் நுனியில் பெண் பூக்களும் இருக்கும். பூக்களில் அல்லி இல்லை. ஆண் பூவில் ஐந்து புல்லிகளும் பல கேசரங்களும் உண்டு. ஒவ்வொரு கேசரத்திலும் தாள்கள் பலவாகப் பிரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவின் நுனியிலும் ஒரு மகரந்தப் பையுண்டு, பெண் பூக்களில் புல்லி விரைவில் உதிர்ந்து விடும். சூலறைமேல் முள் முள்ளாக இருக்கும். அது மூன்று பிரிவுள்ளது. ஒரு பிரிவில் ஒரு விதையிருக்கும். விதைக்கு வெளித்தோல் கடினமாகவும் உள்தோல் மெல்லியதாகவும் இருக்கும். விதையிலைகள் மெல்லியவை. அவற்றைச் சூழ்ந்திருக்கும் முளைசூழ்தசை (Endosperm) எண்ணெய் நிரம்பியது. விதையில் 46-57% எண்ணெய் இருக்கும். காய் மூன்று பாகமாக வெடிக்கும். பிறகு ஒவ்வொன்றும் திறக்கும். விதை அண்டவடிவ வண்டுபோலக் காணும். விதையின் ஒரு முனையில் விதைமுண்டு ((Caruncle) வெண்மையாக இருக்கும். இச்செடி உருண்டையான காய்கள் காய்க்கும். சிலவகைச் செடிகளில் காய் வெடித்து விதைகள் சிதறும்.

ஆமணக்குப் பலவகைப்பட்ட தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் விளைகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பின் இது விதைக்கப்படுகிறது. மழை அதிகமாக உள்ள இடங்களில் இதைச் சிறிது தாமதமாக விதைப்பது நலம். பெரும்பாலும் இது புன்செய் நிலப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள், வெங்காயம், மிளகாய் முதலிய வேறு பயிர்களோடு கலந்து இதைத் தோட்டக்காலில் சாகுபடி செய்வதும் உண்டு. நல்ல வளமும் பாய்ச்சலுமுள்ள மணற்பாங்கான நிலம் இப்பயிருக்கு ஏற்றது. களிமண் நிலத்தில் இது செழித்து வளர்வதில்லை; வளம் குறைவான நிலங்களில் இது தனிப் பயிராகவும், செழிப்பான நிலத்தில் கேழ்வரகு, சோளம், மொச்சை முதலியவற்றுடன் கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

நன்றாக உழுது பண்படுத்திய நிலத்தில் தேவையான அளவு கால்நடை எரு அல்லது கழிவு எருவை இட்டு, 1 அடியிலிருந்து 3 அடிவரையுள்ள இடைவெளியில் வரிசையாக விதைகளை ஊன்றி மூடுகிறார்கள். வரிசைகளுக்கிடையே 2-லிருந்து 3 அடி தொலைவு இருக்குமாறு அமைக்கவேண்டும். செடிகள் இளமையாக இருக்கும்போது வயலில் நீர்த்தேக்கம் இருக்கக்கூடாது. நீர் தங்கினால் இளஞ்செடிகள் அழுகிவிடும். விதைகளை நட்ட 1 மாதத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பூக்கள் தோன்றத் தொடங்கும். இதற்கு ஒரு மாதத்திற்குப்பின் செடிகளில் காய் காய்க்கும். காய்கள் முதிரும்போது அவ்வப்போது பறித்துவிட வேண்டும். இல்லையேல் காய்கள் வெடித்து விதைகள் சிதறிவிடும். ஆகையால் விதைகளை நட்டதிலிருந்து 3-லிருந்து 4 மாதங்களில் தொடங்கும் அறுவடை கடைசிவரை நீண்டுகொண்டே போகும். காய்களைக் காயவைத்துத் தடிகொண்டு அடித்து விதைகளை எடுக்கிறார்கள். சென்னை இராச்சியத்தில் தனி ஆமணக்குச் சாகுபடியில் ஓர் ஏகராவில் சராசரி விளைச்சல் சுமார் 225 ராத்தல்.

ஆமணக்கெண்ணெய்: ஆமணக்கு வித்திலிருந்து பல வகைகளில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. வித்தை எந்திரத்தில் அரைத்து, அரைத்த வித்தைக் கோணிப் பைகளில் கட்டிப் பிழிந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கலாம். அல்லது வித்தை வறுத்தோ, வெயிலிற் காயவைத்தோ, நீரில் கொதிக்கவைத்து மேலே மிதக்கும் எண்ணெயைப் பிரித்தெடுக்கலாம். ஓர் இரவு முழுதும் வித்தை நீரில் ஊறவைத்து அரைத்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் முறைகளில் உயர்ந்தரக எண்ணெய் கிடைக்கிறது.

ஆமணக்கெண்ணெய் பேதி மருந்தாகவும், பல மருந்துகளிலும் பயனாகின்றது. உள்ளெரி எஞ்சின்களுக்கு இது சிறந்த உயவாகிறது. தாழ்ந்த வெப்பத்தில் இது இறுகுவதில்லை. உயர்ந்த வெப்பத்திலும் இதன் பிசுபிசுப்புக் குறைவதில்லை. இக்காரணங்களால் இது விமான எஞ்சின்களுக்கு உயவிட மிகவும் ஏற்றது. துருக்கிச் சிவப்பு எண்ணெய் (Turkey Red Oil) என்ற ரசாயனப் பொருளின் தயாரிப்பில் இது பயனாகிறது. சவர்க்கார வகைகள் ஆமணக்கெண்ணெயினால் தயாரிக்கப்படுகின்றன. தொன்றுதொட்டே இதை விளக்கேற்றப் பயனாக்கி வந்திருக்கிறார்கள். ஆமணக்கெண்ணெய் விளக்கில் கரிப்புகை தோன்றுவதில்லை. மெழுகுவர்த்திகள், செயற்கை ரப்பர், பீளாஸ்டிக்குகள், மெருகெண்ணெய்கள் ஆகியவற்றின் தயாரிப்பிலும் இது பயனாகிறது.

ஆமணக்குப் பிண்ணாக்கு நல்ல எருவாகிறது. இதை உரமாக இட்டால் இது கரும்புப் பயிரைச் செல் அரிக்காமல் தடுக்கும். ஆகையால் கரும்புச் சாகுபடிக்கு இது மிகவும் ஏற்றது. ஆமணக்குப் பயிரில் ஜம்புப்புழு, புகையிலைப்புழு. செஞ்சிலந்தி முதலியவை விழுவதுண்டு. சீ. ஆர் .சே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆமணக்கு&oldid=1456798" இலிருந்து மீள்விக்கப்பட்டது