கலைக்களஞ்சியம்/ஆயுர் வேதம்
ஆயுர் வேதம் என்பது ஆயுளின் தத்துவங்களையும், நோய் அணுகாவண்ணம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளை நீடிக்கச் செய்யும் முறைகளையும், நோய்களை அறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கான உபாயங்களையும் கூறும் இந்திய மருத்துவ முறையாகும். இது இருக்கு, அதர்வண வேதங்களும் மகாபாரதமும் தோன்றிய கால முதல் இருந்து வருவதாகத் தெரிகிறது. ஆயினும் ஒழுங்குபெற அமைத்து நூலியற்றியவர்கள் சரகர், சுச்ருதர், காசியபர், வாக்படர் முதலியோராவர்.
இவர்கள் மருத்துவத்துக்கு அடிப்படையாகக் கூறும் மூல தத்துவங்களுள் திரிதோஷ தத்துவம் என்பது முக்கியமானது. உடம்பில் வாயு, பித்தம், கபம் என்று மூன்று தாதுக்கள் இருக்கின்றன. அவையே உடல் நலனைக் காக்கின்றன. உடல் நலம் சீரழியும்போது இத்தாதுக்கள் கோளாறடைந்து தோஷங்களாக மாறுகின்றன. இம் மூன்று தாதுக்களுள் வாயுவே மற்ற இரண்டையும் உடலையும் அடக்கியாளும் ஆற்றலுடையது. இவற்றுள் இரண்டு தாதுக்கள் கோளாறடைந்தால் துவந்துவ தோஷம் என்றும், மூன்றும் கோளாறடைந்தால் சன்னிபாதம் அல்லது சன்னி என்றும் கூறுவர்.
ஆயுர் வேதத்தில் சாரீரவிசயம் என்னும் பகுதி உடம்பிலுள்ள அகவுறுப்புக்கள், புறவுறுப்புக்கள் இவை என்றும், அவை யாவும் இரசம், இரத்தம், மாமிசம், நிணம், எலும்பு, எலும்புச்சோறு (மஜ்ஜை), சுக்கிலம் ஆகிய ஆறு தாதுக்களால் ஆகியவை என்றும், அகவுறுப்புக்கள் செய்யும் வேலைகள் இவை என்றும் விளக்குகிறது.
உடல் நலத்தைக் காப்பதற்கான முறைகளை விளக்கும் பகுதி ஸ்வஸ்தவ்ருத்தம் எனப்படும். நாடோறும் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கும்வரை உடல் நலத்தைக் காப்பதற்காகச் செய்யவேண்டிய காரியங்களைத் தினசரியை என்னும் பகுதி விளக்குகிறது. பருவங்களின் மாறுபாடுகளுக்கேற்ப ஆகாராதிகளை மாற்றிக் கொள்ளவேண்டிய சிறப்பு முறைகளை இருது சரியை என்னும் பகுதி கூறும். பெருவாரி நோய்களின் காரணங்களையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் ஜனபதோ த்வம்ஸம் என்னும் பகுதியில் காணலாம். மல மூத்திரங்கள், அபானவாயு முதலியவற்றை வெளியிடும் உணர்ச்சி வேகம் என்றும், அவற்றை இயற்கைக்கு மாறாக அடக்குவது வேகநிரோதம் என்றும் கூறப்படும். வேகநிரோதத்தால் உண்டாகும் தீங்குகளையும், அக்கெட்ட வழக்கத்தைத் தடுக்கும் வழிகளையும் ஸ்வஸ்தவ்ருத்தப் பகுதியில் காணலாம். சகஜபலம், காலஜபலம், யுக்திஜபலம் என்னும் உடலுக்கு ஏற்படும் மூவகைப் பலங்களைப்பற்றிய நுண்ணிய தத்துவங்களையும் இப் பகுதியிற் காணலாம். மேலும் உடற்பயிற்சி, எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், தலைமயிர் நகம் முதலியவற்றை வளரவிடாமல் செம்மைப்படுத்தல் முதலியவற்றால் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் முறைகளும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
நோய் நிருணயம் : இதற்கு நிதானம் என்கிற சொல் முக்கியமாய் வழங்கப்படுகிறது. நிதானம் என்ற சொல்லுக்குப் பொதுவாக மூலகாரணம் என்று பொருள். நோய்க் காரணம், முற்குறிகள் (பூர்வ ரூபம்), இலட்சணம் முதலியவற்றை விளக்கும் சாஸ்திரப் பகுதிக்கும் நிதானம் என்றே பெயர். நோய்க்கு நேர்முகமான காரணம் சந்நிக்ருஷ்ட நிதானம் என்றும், நேர்முகமில்லாததும், பெற்றோர் முதலானோர் மூலமாய் ஏற்படுவதுமான காரணம் விப்ரக்குஷ்டநிதானம் என்றும், இவ்வாறு நோய்க்காரணம் பலவிதமாக வகுக்கப்பட்டுள்ளது. நிதானம் எனப்படும் காரணம், நோய் வெளிப்படையாகத் தோற்றுமுன் காணும் பூர்வ ரூபம் என்னும் முற்குறி, சம்பிராப்தி எனப்படும் தோஷம் உடலிற் பரவும் வகை, குறிகளை அனுசரித்துச் செய்யும் பரிகாரங்களாலான உபசயம், அனுபசயம் என்னும் பலாபலன் ஆகிய ஐந்தும் நோய் நிருணயத்தில் பயன்படுத்தப்படும். இவ்வைந்தும் நிதானபஞ்சகம் எனப்படும். இதை ஆதாரமாகக் கொண்டு நோயாளியை உற்றுநோக்குதல், நோயாளியின் உடம்பில் காதை வைத்துக் கேட்டல், நாடி, நாக்கு, கண், மூத்திரம், மலம் முதலியவற்றைப் பரீட்சித்தல் ஆக இவை அஷ்டஸ்தானப் பரீட்சை எனப்படும். இம் முறைகளைக் கையாண்டு, காய்ச்சல், அதிசாரம், க்ஷயம், குஷ்டம் முதலிய சகல நோய்களையும் பரீட்சித்தறியும் முறைகளைப்பற்றிக் கூறும் ஆயுர்வேத -நூல்களுள் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாதவகரர் என்பவர் இயற்றிய “மாதவநிதானம்” என்பது புகழ்பெற்றது.
சிகிச்சை: இது காயசிகிச்சை என்றும் சல்லிய சிகிச்சை என்றும் இருவகைப்படும். காய மருந்துகளை உபயோகித்து, விஷச்சத்துக்களை உடலிலிருந்து வெளிப்படுத்திக் குணம் செய்விக்கும் முறை கர்ஷண சிகிச்சை என்றும், மருந்து முதலியவற்றால் விஷச் சத்துக்களின் வீரியத்தைப் போக்கிக் குணம் செய்யும்முறை சமன சிகிச்சை என்றும், உடலுக்குப் போஷணை கொடுத்து வலுக்கச்செய்யும் முறை பிரும்மண சிகிச்சை என்றும், ஆகக் காய சிகிச்சை மூன்று வகைப்படும். பட்டினியிருத்தல், வாந்தி செய்வித்தல், மலம் வெளியாக்கல், அசுத்த இரத்தத்தை வெளிப்படுத்தல், வஸ்தி முறைகள் முதலியவை கர்ஷண (சோதன) சிகிச்சையிலும், பசியுண்டுபண்ணுதல் முதலிய உபாயங்கள் சமன சிகிச்சையிலும் அடங்கும்.
சல்லிய சிகிச்சை: உடலிற் புகுந்து துன்புறுத்தும் பொருள் சல்லியம் எனப்படும்; அதை நீக்குவது சல்லிய சிகிச்சை. இதுதான் சஸ்திர சிகிச்சையாகும். இதற்கான கருவிகள் சஸ்திரங்கள் என்றும், எந்திரங்கள் என்றும் இருவகைப்படும் அறுக்கவும், கீறவும், தைக்கவும் பயன்படுவை சஸ்திரங்கள். பிடித்தல், அழுத்தல், இழுத்தல், ஊதுதல் முதலிய வேலைகளில் உபயோகப்படுபவை எந்திரங்களாம். சஸ்திரங்களில் 101 வகைகளையும், எந்திரங்களில் 26 வகைகளையும் சுச்ருதர், வாக்படர் முதலானோர் விவரித்திருக்கிறார்கள். இச்சஸ்திர சிகிச்சையில் ஒடிந்த உறுப்புக்களுக்குப் பதிலாக உலோகாதிகளை வைத்து அமைப்பதும், வேறு உயிர்களின் உறுப்புக்களை வைத்துத் தைப்பதும், அட்டை முதலியவற்றைக் கொண்டு சிரைகளிலிருந்து கெட்ட இரத்தத்தை வெளிப்படுத்துவதும் அடங்கும். தோளுக்கு மேலுள்ள அவயவங்களில் செய்யப்படும் சஸ்திர சிகிச்சை சாலாக்யம் எனப்படும். தொண்டை, நாசி, கண், செவி முதலியவற்றில் நீண்ட சலாகை போன்ற கருவிகளைக் கொண்டு சஸ்திர சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அப்பகுதி சாலாக்ய தந்திரம் எனப்படுகிறது.
பிரசவ சாஸ்திரம் (பிரஸூதி தந்திரம்) : மாதவிடாய், கருத்தரித்தல், கரு வளர்ச்சி, பிரசவம் முதலியவற்றைப்பற்றி விளக்குவது இச் சாஸ்திரம். பெண்கள் பதினாறு வயதுக்கு முன் கருத் தரிப்பது தகாதென்று ஆயுர்வேதம் கூறுகிறது.
கௌமாரப்ருத்தியம்: குழந்தைகளைப் பரிபாலிக்கவும், அவர்கட்கு வரும் நோய்களை நீக்கவும் ஏற்ற முறைகளைக் கூறுவது இப் பகுதி.
அகத தந்திரம் என்னும் பகுதி விஷ சாஸ்திரமாகும். ஓஷதி விஷங்கள், தாது விஷங்கள் என்னும் இரு பகுதிகளையுடைய தாவர விஷங்களைப் பற்றியும், சர்ப்ப விஷம், கீடவிஷம் முதலிய ஜங்கம விஷங்களைப்பற்றியும் உள்ள விஷயங்களை மாதவநிதானம், சுச்ருதம் முதலிய நூல்களில் விவரமாகக் காணலாம்.
திரவியகுணம்: மருந்துகளாகப் பயன்படும் பொருள்கள், அவற்றின் இரச-வீரிய-விபாக-பிரபாவாதி குணங்கள், அவற்றாலும் அவற்றைக் கூட்டியும் பக்குவம் செய்யக்கூடிய கஷாயம், சூர்ணம், குளிகை, வடகம், கிருதம், தைலம், லேகியம், ஆசவம், அரிஷ்டம் முதலியவற்றைக் கூறும் இப்பகுதி ஆயுர்வேதத்தில் வெகு விரிவானது.
இரச சாஸ்திரம் : தாதுப் பொருள்களிலிருந்து சத்து எடுப்பது முதலிய உபாயங்களை விளக்குவது இவ்வாயுர்வேதப் பகுதி. இரச ஒளஷதங்களைத் தயார் செய்வதற்கான இடம் இரசச்சாலை எனப்படும். சாலையில் கல்வங்கள், யந்திரங்கள், அடுப்புக்கள் முதலியன பல வகையாக அமைக்கப்பட்டிருக்கும். இது சம்பந்தமான சிறந்த நூல்களை ஆதிமர், சந்திரசேனர், நித்தியநாதர், நாகார்ஜுனர், காபாலி முதலிய இருபத்தாறு சித்தர்கள் இயற்றி யிருக்கிறார்கள். இரச சாஸ்திரமானது (1) தாதுத் திரவியங்களைச் சுத்தி செய்து, இரசௌஷதம் தயார் செய்வதுபற்றிக் கூறும் இரசகண்டம் என்றும், (2) சுத்தம் செய்த திரவியங்களைக் கொண்டு செய்த மருந்துகளை உபயோகிக்கும் வகைகளைக் கூறும் பிரயோக கண்டம் என்றும், (3) ஆயுளை நீடிக்கச் செய்யும் இரசௌஷதங்களைக் கூறும் இரசாயன கண்டம் என்றும், (4) செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக மாற்றும் முறைகளைக் கூறும் வாதகண்டம் என்றும், (5) மணிமந்திர ஓஷதிகளால் நோயைப் போக்கி. யோகசித்தி பெறும் வகைகளைக் கூறும் மந்திர கண்டம் என்றும் ஐந்து முக்கியமான பிரிவுகளுள்ளது.
முக்கியமான ஆயுர்வேத நூலாசிரியர்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு. தமிழ்நாட்டு மருத்துவ முறையைப் பற்றிச் சித்த மருத்துவம் என்ற கட்டுரை பார்க்க. எம். து.