கலைக்களஞ்சியம்/ஆய் எயினன்
Appearance
ஆய் எயினன் சிறந்த வள்ளல்; வேளிர் மரபினன். தன்னைப் பாடுவோர்க்கு யானையையுங் கொடுத்துள்ளான் (அகம். 208). ‘வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்’ (அகம். 208) என வருவதால் இவன் தந்தை வெளியன் என்றாவது, இவனுக்கு வெளியன் என்ற மற்றொரு பெயருண்டென்றாவது கொள்ளலாம். இவன் பறவைகளையும் காப்பாற்றிய இரக்கமுடையவன் என்று தெரிகிறது. ‘நன்னன்’ என்பானுக்குப் படைத்துணையாக நின்றபோது ‘மிஞிலி’ என்பானாற் கொல்லப்பட்டானென்றும், அப்போது பறவைகள் அவனுக்கு வெயிலின் வெப்பம் படாமல் வானிலே குவிந்து கவிந்து நிழல் தந்தன என்றும் கூறப்படுகின்றது (அகம். 181,208,396).