உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரம்ப வாதம்

விக்கிமூலம் இலிருந்து

ஆரம்ப வாதம் என்பது உலகில் காணப்படும் பொருள்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றியுள்ள பல கொள்கைகளுள், நையாயி சுரும், வைசேடிகரும் மேற்கொள்ளும் கொள்கையாகும். அனாதி காலம் தொட்டு நித்தியமாகவுள்ள பரமாணுக்கள் ஈசுவரானுக்கிரகத்தால் ஒன்றோடொன்று சேர்ந்து அணுக்கள் ஆகிப் பின்னர் அவை சேர்ந்து பொருள்கள் உண்டாகின்றன என்று அவர்கள் பொருள்களின் உற்பத்திபற்றிக் கூறுகிறார்கள். காரணமின்றிக் காரியமில்லை என்பதையும், காரணமும் காரியமும் வேறுபட்டவை என்பதையும் தங்கள் கொள்கைக்கு ஆதாரத் தத்துவங்களாகக் கூறுகிறார்கள்.

ஆடை, குடம் என்ற காரியங்கள் முன்னர் இல்லாமலிருந்து பின்னர் முறையே நூல், களிமண் என்ற காரணங்களால் புதிதாக உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு பொருள்கள் புதிதாக உண்டாவதால் இந்தக் கொள்கை ஆரம்ப வாதம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காரியமானது தன்னுடைய உற்பத்திக்குப் பின் காரணத்தில் இல்லாததால் 'அசத் காரியவாதம்' என்றும் அழைக்கப்படுகிறது.

காரணமும் காரியமும் வேறுபட்டவை என்ற சித்தாந்தம் கீழ்வரும் யுக்திகளால் நிலைநாட்டப்படுகிறது. (1) இதை ஏற்காவிடின் இது நூல், இது ஆடை என்ற வேறுபட்ட விவகாரத்துக்கு இடமில்லை.(2) நூல்கள் பல வகையாகவும், அவற்றால் ஆக்கப்பட்ட ஆடை ஒன்றாகவும் இருப்பதால் எண் வகையாலும் காரணமும் காரியமும் வேறுபட்டவை. (3) நூல்கள் நெய்யவும், ஆடை அணியவும் பயன்படுவதால், பயன்படுகையாலும் வேறுபட்டவை. (4) நூல் முன்னரும், ஆடை பின்னரும் தோன்றுவதால் கால வகையாலும் வேறுபட்டவை. (5) நூலுக்குக் காரணம் பருத்தியாகவும், ஆடைக்குக் காரணம் நூலாகவும் இருப்பதால் காரண வேறுபாட்டு வகையாலும் வேறுபட்டவை. (6) நூல் இருக்கும் பொழுது ஆடை அழிவதால், காண்பதாலும் வேறுபட்டவை. (7) சில சமயவாதிகள் கருதுகிறபடி ஆடை நூலிலேயே ஆக்கும் உருவத்தில் இருக்குமேயாயின் அதாவது காரியம் காரணத்திலேயே இருக்குமாயின் ஆடை செய்வதற்குத் தறி முதலிய காரணங்கள் வேண்டியதில்லை.

ஆகவே காரியம் என்பது காரணத்தினால் புதிதாக அதாவது முற்றிலும் வேறுபட்டதாக உண்டாக்கப்படுவது என்பது பெறப்படும்.

சுடப்படாத குடமும், சுடப்பட்ட குடமும் களிமண்ணாலேயே செய்யப்பட்டிருந்தும் அவை நிறத்தில் வேறுபடக் காரணம் யாது என்பதுபற்றி வைசேடிகரும் நையாயிகரும் கூறும் கருத்துக்கள் வருமாறு:

(1) வைரேடிகர் : குடத்தைச் சுடும் பொழுது அது நெருப்பின் சேர்க்கையால் பரமாணுக்களாக பிரிந்து, பின்னர் அவை இரட்டையணுக்களாகவும் (த்வயணுகம்). மும்மையணுக்களாகவும் (த்ரயணும்) ஆகிக் கடைசியில் புதிய நிறமுள்ள குடமாக ஆகிவிடுகின்றது என்றும், முன்னிருந்த குடம் அழிந்து புதுக்குடம் ஆவது அதிவேகத்தில் நடைபெறுவதால் நமக்குப் புலனாவதில்லை என்றும் கூறுகிறார்கள். இது பீலுபாகவாதம் எனப்படும். பீலு என்பது பரமாணு; அதனால் பீலுபாகம் என்பது பரமாணுக்களால் ஏற்படும் அக்கினி சம்பந்தம் என்று பொருள்படும்.

(2) நையாயிகர் : ஆலையிலிடப்பட்ட குடந்தான் இது என்ற உணர்வு ஏற்படுவதால் குடம் அழிவதில்லை என்றும், அக்கினி குடத்தில் சூக்கும துவாரங்கள் வழியாக உட்புகுந்து நிறத்தை மாற்றுகிறது என்றும் கூறுகின்றனர். இது பிடரபாகவாதம் எனப்படும். பிடரம் என்பது குடம்; அதனால் பிடரபாகம் என்பது குடமாக இருக்குங்கால் உண்டாகும் அக்கினி சம்பந்தம் என்று பொருள்படும். கே. ஸ்ரீ.