கலைக்களஞ்சியம்/ஆராக்கேரியா

விக்கிமூலம் இலிருந்து

ஆராக்கேரியா ஒரு சாதி பைன் மரம். பூமியின் தென்பாதிக்கு உரியது. தென் அமெரிக்கா, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, நியூகாலிடோனியா, நியூகினி, நார் போக்குத் தீவு முதலிய இடங்களில் உள்ளது. இதில் 15 இனங்களுண்டு. சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத்தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் (Mcnkey Puzzle) என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதையைத் தின்னலாம். பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது.

ஆராக்கேரியா மரம்
உதவி : குப்புராம், பெங்களுர்.

குவீன்ஸ்லாந்திலுள்ளது பன்யா-பன்யா பைன். இதன் விதையும் உணவாகும். ஆராக்கேரிய எக்செல்ஸா மிக அழகானது. சிறு செடியைத் தொட்டிகளிலே வைத்து வீட்டில் வளர்ப்பதுண்டு. ஆராக்கேரியா இனங்களில் பலவற்றை அழகுக்காகத் தோட்டங்களில் வைக்கிறார்கள். இவை 150-200 அடி உயரம் வளரும். அடுக்கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்டமாகச் சமமாக எல்லாத் திக்குகளிலும் விட்டுக்கொண்டு, கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்பது காண்பதற்கு இனிதாக இருக்கும்.

ஆராக்கேரியா மரங்கள் எல்லாமே வேலைக்குப் பயன்படும். மரம் ரெசினுள்ளது. மஞ்சள் கலந்த வெண்ணிறம். ரேகைகள் நேராக அமைந்திருக்கும். எளிதாக வேலை செய்யத்தக்கது. வீட்டிற்குள் வைக்கக்கூடிய சாமான்கள், பெட்டி முதலியவை செய்யப்பயன்படும். காகிதம் செய்ய உதவும். ரெசினிலிருந்து டர்ப்பென்டீன் எடுக்கின்றனர். சிலவற்றின் விதைகள் உணவாகின்றன.