உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரோக்கியம் - சுகாதாரம்

விக்கிமூலம் இலிருந்து

ஆரோக்கியம் - சுகாதாரம் :ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல்.

தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும்.

தனிப்பட்டவர் சுகாதாரம்: உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப்பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளனவாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக்குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும். அரையில் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.

காலையிலும் மாலையிலும் பல் துலக்குதல் இன்றியமையாதது. பற்களுக்கு இடையிலுள்ள உணவுத் துணுக்குக்களை நீக்காவிட்டால், அவை அழுகி நோய் உண்டாக்கும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் பல் வைத்தியரின் அபிப்பிராயம் கேட்பது நல்லது. நாடோறும் குளிக்க வேண்டும். வெப்ப நாட்டினர் காலையிலும் மாலையிலும் குளித்தல் நல்லது. குளித்தால் வியர்வையால் உண்டான அழுக்கு நீங்கித் தோல் நன்றாக வேலை செய்யும். தலையில் பேன் பிடிக்க விடலாகாது. நகங்கள் சுத்தமாக இருக்கவேண்டும். நீர் தவிர வேறு எதனை உண்டாலும் குடித்தாலும் அப்படிச் செய்வதற்கு முன்னும் பின்னும் வாயை நன்றாகக் கழுவுதல் வேண்டும்.

நாடோறும் தக்க உடற்பயிற்சி செய்தல் இன்றியமையாததாகும். உடற்பயிற்சி அழுக்கை நீக்கும்; தசைகளுக்கு உரம் தரும்; உறுப்புக்கள் ஒழுங்காக வேலை செய்ய உதவிபுரியும். எவ்வளவு வலிமை குறைந்தவர்களாயினும் நாடோறும் ஒரு நேரமாவது சிறிது தூரம் திறந்த வெளியில் உலவவேண்டும்.

உறக்கமும் சுகாதார சாதனங்களுள் ஒன்று. களைத்துப்போயிருந்தும் போதுமான அளவு உறங்காதிருப்பவர்க்கு நோயை எதிர்த்துத் தடுக்கும் ஆற்றல் இராது. பொதுவாகப் பெரியவர்களுக்கு எட்டு மணிநேர உறக்கமும், குழந்தைகளுக்கு அதனினும் மிகுந்த உறக்கமும் தேவை. காற்றோட்டமுள்ள இடத்திலேயே உறங்கவேண்டும்.

வீடுகள் தூயனவாயும், காற்றோட்ட முள்ளனவாயும், தட்பவெப்பநிலை சமமாக உள்ளனவாயும் இருக்கவேண்டும். வீட்டில் ஈக்களும் கொசுக்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சாக்கடை கட்டிக் கழிவு நீரை அருகில் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தவேண்டும். அடுப்புப்புகை அறைகளில் சுழன்று கொண்டிராமல் வெளியே போய்விட ஜன்னல்களும் புகைப்போக்கி வசதிகளும் அமைக்கவேண்டும்.

உட்காரவேண்டிய முறையையும் நிற்கவேண்டிய முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும். முறைப்படி உட்காரவும் நிற்கவும் செய்தால், உடல் அழகு கெடாமலிருப்பதோடு, அதிலுள்ள உறுப்புக்களும் ஒழுங்காக வேலை செய்யும். இல்லாவிட்டால் வயிறு கீழே சரியும். சுவாசம் சரியாக நடைபெறாது. உட்காரும்போதும் நிற்கும்போதும் தலையும் முதுகும் நிமிர்ந்தே இருக்க வேண்டும். கூனியிருப்பவர் விரைவில் களைத்துப்போவர்.

வரம்பு கடந்து வேலை செய்தால் நோய் நுண்மங்களை எதிர்க்கும் ஆற்றல் குறைந்து போகும். வேலை செய்து முடிந்த பின்னர் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் உடல் நலத்துக்கு நல்லது. இதனால் உடலும் உள்ளமும் ஓய்வு பெறும்.

உள்ளத்தில் தோன்றும் கவலை, அச்சம் முதலியவற்றால் உடல்நலம் கெடக்கூடும். உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும். மகிழ்ச்சியும் சிரிப்பும் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சாதனங்களுள் சிறந்தன வாகும்.

உடல்நலம் விரும்புவோர் இன்னொன்றையும் முக்கியமாகக் கவனிக்கவேண்டும். கலவியில் அளவோடு இருக்க வேண்டும். சிறுவர்கள் பருவமடையுமுன் கலவியை நினைக்கலாகாது. காதலுணர்ச்சி மிகாதிருப்பதற்குத் தேவையான முறைகளைக் கையாளுதல் இன்றியமையாததாகும். தவறான அளவில் கலவியின்பத்தைப் பெறீன் உடல்நலம் கெடும். தொற்று நோயுள்ளவர்களுடன் கலந்தால் அந்நோய்கள் பற்றிக்கொள்ளும்.

சமூக ஆரோக்கியம் - சுகாதாரம் : தனிமனிதன் உடல்நல விதிகளை மீறாமல் நடந்தாலும், அவனுடைய சூழ்நிலை அவ்விதிகட்கு மீறியதாக இருக்குமாயின், அவனால் ஆரோக்கியமாக வாழ முடியாது. அதனால் சூழ்நிலையை உடல்நலத்துக்கு ஏற்றதாகச் செய்துதர வேண்டியது இக்காலத்தில் அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு இராச்சியத்திலும் சமூக சுகாதார இலாகா ஏற்பட்டுள்ளது. அந்த இலாகாவினர் மக்களுக்குத் தூய நீர் கிடைக்கும்படி செய்வர். அசுத்தங்களை அப்புறப்படுத்துவர். நீர் தேங்கிக் கொசு உண்டாகாமல் தடுப்பர். சமூக ஆரோக்கியம் முக்கியமானதென்று பண்டை இந்தியர் அறிந்திருந்தனர்.மொகஞ்சதாரோ நகரத்தின் அமைப்பு இந்தியருடைய சுகாதார அறிவையும், பண்டை ரோம் நகரத்துச் சாக்கடைகள் அந்நாட்டுச் சுகாதார அறிவையும் காட்டுகின்றன.

இக்காலத்தில் சூழ்நிலைச் சுகாதாரத்தில் இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தொற்று நோய்கள் பரவாதிருக்கவும் ஏற்பாடுகள் செய்கிறார்கள். தொற்றுநோய் கண்டால் அவர்களைத் தனியாகப் பிரித்து வைத்துச் சிகிச்சை செய்கிறார்கள். வைசூரி வராமல் இருப்பதற்காக அம்மை குத்துகிறார்கள். க்ஷயத்தைத் தடுக்கப் பீ. சீ. ஜீ. வாக்சின் மருந்து குத்துகிறார்கள். காலரா வராதிருப்பதற்காகவும் தடை மருந்து குத்துவதுண்டு.

போதிய காற்றும் ஒளியும் பெறுவதற்கு ஏற்றவாறு வீட்டை அமைக்கவேண்டும் என்று கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. வைத்தியர்களும், கம்பவுண்டர்களும், மருந்து விற்பவர்களும் தத்தம் வேலைக்கு ஏற்ற கல்வி பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொழிற்சாலையிலும் தொழிலாளர்களின் ஆரோக்கிய நிலைக்கு வேண்டிய விதிகளும் சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. உணவுப்பொருள்களைக் கலப்படம் செய்வதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. பாடசாலைகளில் ஆரோக்கிய விதிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சர்க்கார் ஆரோக்கிய இலாகாவும் ஆரோக்கிய சங்கங்களும் துண்டுப் பிரசுரங்கள், சொற்பொழிவுகள், சினிமாக் காட்சிகள் வாயிலாகவும் ஆரோக்கியத்தைப் பற்றிய அறிவை மக்களிடையே பரப்புகிறார்கள்.