உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆர்த்தாசர்சிஸ்

விக்கிமூலம் இலிருந்து

ஆர்த்தாசர்சிஸ் : இப்பெயர் 'அர்த்த க்ஷத்ர' என்பதன் சிதைவு. இப்பெயருள்ள பல பாரசீக மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.

ஆர்த்தாசர்சிஸ் I கி. மு. 460 -ல் தந்தை சர்சிஸுக்குப் பின் பாரசீக மன்னனானான் ; பாக்டிரியாவிலும் எகிப்திலும் கலகங்களை யடக்கினான். இவன் காலத்தில் அதீனியர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைப் படி அயோனிய நகரங்களையும் திரேசையும் பாரசீகம் இழந்துவிட்டது. இவன் 40 ஆண்டுகள் ஆண்டான்.

ஆர்த்தாசர்சிஸ் II தந்தையான II-ம் டரையசுக்குப் பின் கி.மு.404-ல் பட்டமெய்தினான். ஸ்பார்ட்டா நகரின்மீது நடத்திய போரில் ஆசியாவிலுள்ள கிரேக்க நகரங்களையும் சைப்ரசையும் திரும்பப் பெற்றான். இவன் கி.மு.359-ல் இறந்தான்.

ஆர்த்தாசர்சிஸ் III மேற்கூறியவனுடைய மகன். கி.மு. 359-ல் பட்டமெய்தினான். ஆசியா மைனரிலும் பினீஷியாவிலும் உண்டான கலகங்களை யடக்கினான். ரோட்சு தீவைச் சேர்ந்த மென்டார் என்னும் சிறந்த வீரன் இவனுடைய படைத் தலைவன். இவ்வரசன் கொடியவன். இவனுடைய வேலையாளான பாகோஸ் என்பவன் இவனையும் இவன் மூத்த மக்களையும் கி. மு. 338-ல் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டான். பாரசீக மன்னர்கள் வெளி நாட்டிலிருந்து திரும்பி வரும்போது. அந்நாட்டு மகளிர்க்கு ஒவ்வொரு பொற்காசு அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஒரு மரபு. III-ம் ஆர்த்தாசர்சிஸ் ஒரு முதிர்ந்த உலோபியாகையால் தன் வெளிநாட்டிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது.