கலைக்களஞ்சியம்/ஆர்னல்டு, மாத்தியூ
Appearance
ஆர்னல்டு, மாத்தியூ (1822 -88) பேர்பெற்ற பிரிட்டிஷ் கல்விப் புலவரான
தாமஸ் ஆர்னல்டின் குமாரர். தலை சிறந்த ஆங்கிலக் கவிகளில் ஒருவர். சிறந்த திறனாய்வாளர். நடுத்தரக் கல்விச் சீர்திருத்தம் செய்தவர். இலக்கியத்திற்போலவே சமயத்திலும் அரசியலிலும் பண்பாடும் அழகும் தேவை என்றும் அதற்காகப் பழம் பேரிலக்கியங்களைக் கற்க வேண்டியது அவசியம் என்றும் வற்புறுத்தினார். ஆங்கிலப் பண்பாடு என்பது ஐரோப்பியப் பண்பாட்டில் ஓர் அமிசமே என்று கருதினார். அவருடைய உரைநடை நூல்களுள் சிறந்தவற்றில் சில திறனாய்வுக் கட்டுரைகள் (Essays in Criticism), பண்பாடும் அராஜகமும் (Culture and Anarchy), இலக்கியமும் கொள்கையும் (Literature and Dogma). கவிதைகளுள் சிறந்தவற்றில் சில ஷோரப்-ரூஸ்தும், டிரிஸ்டிரம்த் இசால்ட் என்பனவாம்.