உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆர்மீனிய மொழி

விக்கிமூலம் இலிருந்து

ஆர்மீனிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள் ஒன்று. அதனுள் பல செமிட்டிக் சொற்களும் பண்டைய பாரசீகச் சொற்களும் கலந்துள்ளன. கிறிஸ்தவ மதம் பரவுமுன்னர் ஆர்மீனியா பாரசீகப் பண்பாட்டுக்கு அடிமையாக இருந்தது. திரிடேட்டிஸ் (Tiridates 286-342) காலத்தில் கிறிஸ்தவ மதம் புகுந்த பின்னர் அங்கு ஐரோப்பிய நாகரிகம் பரவலாயிற்று. 404-ல் மெஸ்ராப் மஸ்டோட்ஜ் (Mesrob Mashdotz) என்பவர் 36 எழுத்துக்கள் கொண்ட ஆர்மீனிய அரிச்சுவடியை உண்டாக்கினார். மேனாட்டு மொழிகளின் எழுத்துக்களில் பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்று இருவகை உருவங்கள் உண்டு. மெஸ்ராப் உண்டாக்கிய எழுத்துக்களையே இப்போதும் ஆர்மீனியப் பெரிய எழுத்துக்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரிச்சுவடி உண்டாக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவ நூல்கள் எழுந்தன.

5ஆம் நூற்றாண்டின் மத்தியில் கொரின் தலைமைக் குருவாயிருந்த மோசே என்பவர் ஆர்மீனியாவின் வரலாற்று நூல் ஒன்று இயற்றினார். அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் பழங்கதை எழுதுவது நின்றுபோய் மொழிபெயர்ப்பு நூல்கள் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின.

இந்தக் காலத்தில் சொந்தமாக எழுதிய நூல்களுள் சிறப்பானவை பாஸ்டஸ் (Faustus, 344-392) என்பவர் தம் காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதிய வரலாறும், எரிசியாஸ் என்பவர் எழுதிய வார்தான் மணிகோமியன் வரலாறுமாம். இப்போதும் ஆர்மீனியர் தமது நாட்டுச் சிறந்த வீரனாக வார்தானைப் போற்றி வருகின்றனர்.

13ஆம் நூற்றாண்டுவரை எழுந்த சிறப்பான இலக்கியம் கிறிஸ்தவக் கோயிற் பாடல்கள் ஆகும். அத்தகைய பாடல்களை யாத்தவருள் சிறந்தவர் எட்டாம் நூற்றாண்டிலிருந்த சகாக்காதூத் என்னும் பெண் புலவர் ஆவர்.

10ஆம் நூற்றாண்டிலிருந்த கிரிகார் நாரெகாட்ஜீ (Gregor Narekatzi) என்பவர் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய நாரெகி என்னும் வசனநூல் காவியம் போலவே காணப்படுகிறது.

அக்காலத்துக் கவிஞர்களுள் அதிகமாக எழுதியவர் நெர்செஸ் என்பவரே.

13ஆம் நூற்றாண்டில் கட்டுக்கதைகள் (Fables) மிகுதியாக எழுந்தன. அரசியல் சமூகப்பொருள்கள் அக்கதையின் உருவத்தில் வந்து பல சீர்திருத்தங்களுக்கு அடிகோலின. அக்காலத்துக் கவிஞர்களுள் கான்ஸ் டான்டென் எர்ஜின் காட்ஜீ என்பவர் இயற்கை, காதல், அழகு ஆகியவை குறித்துப் பாடினார்.

அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் ஆர்மீனிய நாடு அன்னியருக்கு அடிமையாகி அல்லலுற்றது. இக்காலத்தில் அச்சகங்கள் உண்டாயின. மத நூல்கள் எழுந்தன. ஹவானஸ் துல்குராண்ட்ஜி என்பவர் காதலைப் பற்றிப் பாடியவை புகழ்வாய்ந்தவை.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில், ரஷ்யர்கள் ஆர்மீனியாவைக் கைப்பற்றினர். அதனால் இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரமே ஆர்மீனிய இலக்கியத் தலமாயிற்று. அங்கிருந்து நாட்டுப்பற்றுப் பாடல்களும் தோத்திரப் பாடல்களும் பல நூல்களின் மொழிபெயர்ப்புக்களும் ஆர்மீனியாவுக்கு வந்துகொண்டிருந்தன.

19ஆம் நூற்றாண்டின் மத்தியகால முதல் புதியதோர் மாறுதல் தோன்றலாயிற்று. ஷெராஜ் என்பவர் பண்டைய இலக்கியநடை உபயோகத்தைக் கடுமையாகக் கண்டித்தார். மொழியிலும் இலக்கணத்திலும் பல மாறுதல் செய்து, மொழியைப் புதிய ஆற்றலுடையதாகச் செய்தார். அவரே இக்காலத்து ஆர்மீனிய மொழி நடையின் தந்தை என்று கூறுவர்.

எகிஸ் என்னும் கவிஞர் மொழி வளத்திலும் சொல்லின்பத்திலும் சிறந்து விளங்குபவர். சிபில் என்னும் பெண் கவிஞரின் பாடல்கள் எல்லோராலும் விரும்பப் பெறுவன. வசன நடையில் முதன்முதலாகச் சிறந்த நூல் எழுதியவர் ராபி என்பவர்.

சிராவன்ஜேட் என்பவர் பல நாவல்கள் எழுதியவர். அவருடைய தலைசிறந்த நூல் குழப்பம் என்பது. அவர் நாடகம் எழுதுவதில் புதிய மாறுதல்கள் செய்தார்.

அவட்டிஸ் ஆரோனியஸ் என்பவர் நாட்டுக்கு உண்டான பல துன்பங்களையும் நேரில்கண்டு வருந்தியவரானபடியால் அவருடைய நூல்கள் அனைத்தும் சுதந்திரத்துக்காகப் போராடுவதைப் பற்றியனவாகவே உள.

சோவியத் ஆர்மீனியாவிலும் ஆர்மீனிய மொழியின் இலக்கியங்கள் இயற்றப்படுவது நிற்கவில்லை. ஆனால் அங்கு எழுதப்படும் ஆர்மீனிய நூல்கள் சோவியத் கருத்துக்கள் நிறைந்தனவாக உள.

19ஆம் நூற்றாண்டில்தான் நாடகங்கள் எழுதப்பட்டன. அந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில்தான் மதச் சம்பந்தமில்லாத நாடகங்கள் நடிக்கத் தொடங்கினர். ஹெக் கினியன் என்பவர் தாய்மொழியைத் துறந்து அன்னிய மொழியை உபயோகிக்கும் ஆர்மீனிய மக்களைக் கேலிசெய்து பல நாடகங்கள் எழுதினர். ஹாகோப் பரோனியன் என்பவரை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் மக்களிடம் காணப்படும் பித்தலாட்டங்களைக் கேலிசெய்து பல நாடகங்கள் எழுதினார்.