கலைக்களஞ்சியம்/ஆற்றலரி
ஆற்றலரி குளக்கரையிலும் வாய்க்காலோரத்திலும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதாரணமாகக் காணும் செடி. நீர் மிகுந்த இடத்தில் வளர்வது பெரிதாகவும், நீர் குறைந்த இடத்தில் வளர்வது சிறுத்தும் இருக்கும். தண்டு 2-5 அடி உயரம், முதலில் சிறிது கிடை மட்டமாக வளர்ந்து பிறகு நேரே நிமிர்ந்து வளரும். கீழ்ப்பகுதிகள் சற்றுச் செந்நிறமாக இருக்கும். மேற் பாகம் சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். கணுவில் செம்பழுப்பான வளையம்போன்ற கோடு தெரியும். இலை 3-9 அங்குல நீளமும், சுமார் 1 அங்குல அகலமும் இருக்கும். ஈட்டி வடிவானது; நீள்கூர் முனையுள்ளது.இலையடிச் செதில் உறைபோலக் கணு விடையின் அடியைச் சுற்றி இருக்கும். பூ வெண்சிவப்பு நிறமுள்ளது. சிறு பூக்கள் வளர் நுனியுள்ள பல பிரிவுக் கொத்தாக இருக்கும். இதழ்கள் 4-5. புறவிதழ் அகவிதழ் என்ற இரண்டு வட்டங்கள் இல்லை. கேசம்6-8. சூலகம் ஓரறையுள்ளது. கனி கொட்டையென்னும் உலர்கனி. முக்கோண வடிவினது. ஒரே விதையுள்ளது. இதழ்கள் உதிராமல் நிலைத்து, உலர்ந்து, கனி பரவுதற்கு உதவும். இதன் விஞ்ஞானப் பெயர் பாலிகோனம் கிளாப்ரம். பாலிகொனேசி குடும்பம்.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டிகோனான் லெப்டோபஸ் என்னும் கொடியைத் தோட்டங்களில்வைக்கிறார்கள். பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ரோஜாப்பூ நிறமான வெண்சிவப்பாகவும், அல்லது மிகுந்த சிவப்பாகவும் அல்லது வெண்மையாவும் பூக்கும் வகைகளுண்டு. இலைக்காம்பு கணுவில் தண்டைத் தழுவியிருக்கும். இலைகள் இதயவடிவின ; நீண்ட முக்கோணமாக இருக்கும். கொடி ஏறுவதற்குப் பூக்கொத்தில் சில பூக்காம்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கின்றன. ஆகஸ்டு முதல் நவம்பர் வரையும் பூக்கள் மிகுதியாக இருக்கும். இது தென் அமெரிக்காவுக்கு உரியது.
மூலன்பெக்கியா பிளாட்டிக்கிளாடோஸ் என்பது நியூகினிக்குக் கிழக்கேயுள்ள சாலமோன் தீவுகளுக்குரியது. இதையும் தோட்டங்களில் தொட்டிகளில் வைக்கிறார்கள். இதன் கிளைகள் மிகத் தட்டையாகி, மெல்லிய பச்சைத் தகடுபோல இருக்கும். அவற்றில் நுண்மையான வரிகள் காணும். அங்கங்கே கணுக்கள் இருக்கும். கணுக்களின் பக்கங்களில் சிறு பூக்கள் கொத்தாக இருக்கும். இந்தச் செடியும் ஆற்றலரியின் குடும்பத்தைச் சேர்ந்ததே.