உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆளுமை

விக்கிமூலம் இலிருந்து

ஆளுமை (Personality) ஆளுமை என்பது என்ன என்பதை யாவரும் அறிந்ததுபோல் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அதை வரையறுப்பது மிகவும் கடினமெனத் தெரியும். உளவியலறிஞர்கள்ளிடமே மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதே இதற்குப் போதிய சான்றாகும். ஆளுமையென்பது ஒருவனது உடலமைப்பே என்றும், ஒருவனது உடலமைப்பும் அவன் வாழும் சமூகச் சூழ்நிலையும் ஆகியவற்றின் தன்மைக்குத்தக அமையும் இயல்புகளெல்லாம் ஒன்று சேர்ந்ததே என்றும், ஒருவனது இயல்பூக்கங்களும், உள்ளக் கிளர்ச்சிகளும் ஒருங்கே சேர்ந்தமைவதே என்றும், பாரம்பரிய இயல்புகளும் (Hereditary traits) அனுபவத்தால் ஈட்டிய இயல்புகளும் (Acquired traits) ஒருங்கே சேர்ந்தமைவதே என்றும், மனிதனது நனவிலி மனச்சக்தியும் (Unconscious psychic energy) சூழ்நிலைச் சக்தியும் (Environmental forces) ஒன்றோடொன்று மோதுவதினாலும் இழைவதினாலும் அமைவதே என்றும் பலவாறு கருதுகின்றனர்.

சாதாரணமாக ஒருவனுக்கு அளுமை இருக்கிறது என்றால், ஏதோ ஒரு வகையில் விரும்பத்தக்க உடல்மைப்போ அல்லது இயல்புகளோ அவனிடம் உள்ளது என்று நினைப்பது வழக்கம். ஆனால் உளவியல் முறையோ ஒவ்வொரு மனிதனுக்கும் அளுமை உண்டு என்று கருதுவதாகும். மேலும் ஒருவனுடைய ஆளுமைக்கும் மற்றொருவனது ஆளுமைக்கும் வேறுபாடுண்டு என்பது உளவியலில் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முக்கியமான இயல்புகள் உண்டு. அவைகளைக் கொண்டே அவனுடைய ஆளுமையை நிருணயிக்கலாம். சான்றாக, ஒருவன் எப்போதும் கிளர்ச்சியோடிருக்கும் இயல்புடையவன் என்று வைத்துக்கொள்வோம். அவனைக் கிளர்ச்சி ஆளுமை உடையவன் என்று கூறுவது முறை. அங்ஙனமே மற்றொருவன் வெட்கமுடையவனாயும், எப்போதும் பின்னணியில் இருப்பவனாயுமிருந்தால், அவனை வெட்கமும் பின்னணியில் இருக்கும் தன்மையும் வாய்ந்த ஆளுமையுடையோன் என்று கூறுதல் முறை. எனவே ஆளுமை என்பது உளவியலில் ஒரு மனிதனது இயல்புகளுக்குத் தக அமைவது என்பது பொதுவான கருத்தாகும். இந்தக் கருத்துக்கள் எங்ஙனம் தோன்றி அமைகின்றன என்பதிலே உளவியலறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

உடலமைப்புக் கொள்கையினர் கருத்துக்கள்: ஒருவன் உயரமாயும் விரும்பத்தக்கதும் அழகானதுமான முகத்தை உடையவனாயுமிருந்தால் அவன் தன்னம்பிக்கை, தைரியம் போன்ற இயல்புகளை உடையவனாயிருப்பான். அவனது ஆளுமை இதற்கேப்ப அமைகிறது. உடலில் தோன்றும் ரசாயனப் பொருள்கள் உறுப்புக்களின் இயக்கத்தைப் பொறுத்திருக்கும். இதற்கேற்றவாறு ஒருவனுடைய இயல்புகளும், இயல்புகளுக்கேற்றவாறு அவனது ஆளுமையும் அமைகின்றன. 2ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த கேலன் (Galen) என்ற விஞ்ஞானி உடலில் தோன்றும் ரசாயனப் பொருள்களுக்கேற்றவாறு மக்களின் ஆளுமைகளை வகைப்படுத்தினார். உடலில் இரத்தம் அதிகம் உள்ளவர் என்றும், பித்தநீர் உள்ளவர் என்றும், கபம் உள்ளவர் என்றும் அவர் பலவகையாக மக்களை வகைப்படுத்தி, முதல்வகையினர் உற்சாகம் மிகுந்தவர்களாகவும், இரண்டாம் வகையினர் முன்கோபமுடையவர்களாகவும், மூன்றாம் வகையினர் சோம்பேறிகளாகவும் இருப்பர் எனக் கருதினர்.

உடலமைப்பையும் உடலுறுப்புக்களையும் கொண்டு சாதாரணமாக ஆளுமையை முடிவு செய்கிறோம். தடித்துக் கொழுத்து இருப்பவர்களை உற்சாகமுடையவர் என்றும், உலர்ந்து மெலிந்து இருப்பவர்களை எப்போதும் கவலையிலும் யோசனையிலும் ஆழ்ந்திருப்பவர்கள் என்றும் கருதுவது இயற்கை. இக்கருத்துக்களை கிரெட்ஸ்மர் (Kretsmer), ஷெல்டன் (Shelden) ஆகியோர் விஞ்ஞான முறையில் ஆராய்ந்தனர்.

அமெரிக்க உளவியலறிஞர்களின் கருத்து: அமெரிக்க உளவியலறிஞர்களில் பெரும்பாலோர் ஆளுமை என்பது மனிதனுடைய பலவேறு இயல்புகள் ஒன்று சேர்ந்தது என்று கருதுகிறார்கள். இந்த இயல்புகள் எல்லோரிடமும் அமைந்திருந்தபோதிலும், மக்களிடையே இவைகளின் செறிவிலும், தரத்திலும், அளவிலும் வேறுபாடு இருக்கிறது. எனவே தக்க சோதனைகளைக் கொண்டு இந்த இயல்புகளை அளந்து ஒருவனது ஆளுமையை நிச்சயிக்கலாம்; ஆளுமையில் மனிதருக்கிடையேயுள்ள வேற்றுமையையும் அறியலாம். ஆனால் தற்போதைய அமெரிக்க உளவியலறிஞர்களில் சிலர் மேற்கூறிய கருத்துக்களினின்றும் வேறுபடுகிறார்கள். இந்த இயல்புகளிற் சில பிறப்பாலும், மற்றவை சூழ்நிலையினாலும் ஏற்படுகின்றன என்பது அமெரிக்க அறிஞர்களின் பொதுவான கருத்து.

ஜொமானிய உளவியலறிஞர்களின் கருத்து: ஜெர்மானிய உளவியலறிஞர் இதனின்றும் மாறுபட்ட கருத்துடையவர். அவர்கள் கருத்துப்படி ஆளுமை என்பது ஒரு நிலையானது (Gestalt). அதைப் பல்வேறு இயல்புகளாலாயது என்று கருதுவது தவறு. ஏனெனில் முழுநிலையுடைய ஆளுமையைத் தனிப்பட்ட இயல்புகளாகப் பிரித்தறிய இயலாது. இம்முறை குழலின் இசையை அதன் ஒவ்வொரு துவாரத்தினின்றும் எழும் நாதத்தை ஆராய்ந்து, பிறகு அவைகளையெல்லாம் ஒன்றுசேர்த்து அறிய முயல்வது போலாகும். கடந்த காலத்து அனுபவத்தையும், தற்போதைய சூழ்நிலையையும் கொண்டே ஆளுமையை அறிய முயலவேண்டும். மனிதனும் சூழ்நிலையும் இழைந்தமைந்த முழுநிலையே ஆளுமை என்பதாகும்.

நடத்தைக் கொள்கையினர் கருத்து: ஆளுமை என்பது அச்சம், சினம், பால் ஆகிய இயல்பூக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது நடத்தைக் கொள்கையினர் (Behavinurists) கருத்து. குழந்தை பிறந்தவுடன் அகனிடம் இம்மூன்று இயல்பூக்கங்களே இருக்கின்றன என்றும், அது வளர வளர, அது வாழும் குழ்நிலைக்குத்தக இந்த மூன்று இயல்பூக்கங்களும் பல வேறு வழிகளில் மாறுபட்டுச் சிக்கலாக அமைகின்றன என்றும் இவர்கள் கருதுகின்றனர். சான்றாக, அக்குழந்தையை விழாமல் தாங்கியிருக்கும் ஆதாரம் திடீரென இல்லாமற்போகும் நிலையும், பலத்த ஓசையும் பிறந்த அக்குழந்தையிடம் அச்சத்தை உண்டாக்குகின்றன. முதிர்ச்சிப் பருவத்தில் பாம்பு, புவி, இருட்டு முதலியவைகளினால் ஏற்படும் அச்சம் என்ற இயல்பூக்கம் சூழ்நிலைத் தூண்டுதல்களினால் மாறி ஆக்க நிலையால் உறுதியாகிறது. இங்ஙனமே மற்ற இயல்பூக்கங்களும் அவற்றைச் சார்ந்த மெய்ப்பாடுகளும் பல்வேறு இயல்புகளாக மாறுபடுகின்றன. அந்த மாறுபட்ட இயல்புகளே ஒருவனது ஆளுமையை முடிவுசெய்கின்றன.

உளப்பகுப்பியலார் கருத்து: உளப்பாகுபாடு மனிதனின் அளுமை நனவிலி மனத்தினின்று எழும் வலிமை வாய்ந்த இத்(Id)என்கிற உள்ளச் சக்தி சமூகச் சூழ்நிலையின் சட்டதிட்டங்களோடும் கட்டுப்பாட்டுக்களோடும் இழைவதினால் ஏற்படுவது என்று உளப்பகுப்பியலார் கருதுகிறார்கள். நனவிலி மனத்தின் சக்தி எத்தன்மை வாய்ந்தது என்பதில் அவர்களுக்குள்ளேயே வேறுபாடு இருக்கிறது. இச் சக்தி காம இயல்பு வாய்ந்தது. சமூகம் காம இயல்பூக்கத்தையே அதிகம் மதிக்கிறது. எனவே ஒருவன் தனது காமசக்தியைச் சமூகத்தில் எந்த வழியில் நிறைவேற்றுகிறான் என்பதில் அவன் ஆளுமை அமைகிறது என்பது பிராய்டின் (Freud) கருத்து. மனிதன் பிறந்தவுடன் ஆதரவற்ற நிலையில் தானாக எதுவும் செய்ய இயலாது. சூழ்நிலையிலிருப்போரைச் சார்ந்தே இருக்கிறான். இதன் காரணமாக மற்றவர்களைவிடத் தான் தாழ்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட, இத்தாழ்நிலையைப் போக்க, வாழ்க்கையில் ஓர் உயர்ந்த குறிக்கோள் கொண்டு. அதை அடைவதற்கான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுகிறான். அந்த வாழ்க்கை முறையை அடிப்படையாகக்கொண்டு எழுவதே அவனது ஆளுமை என்பது ஆட்லர் (Adler) என்பார் கருத்து. மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்களில் வேறுபாடுகள் உள்ளன. அதனால் ஆளுமைகளிலும் வேற்றுமைகள் தோன்றுகின்றன. நனவிலி மனத்தின் ஒரு பகுதியாக மூதாதையரது உள்ளம் ஆளுமையை முடிவு செய்வதில் பங்குகொள்கிறது என்பது யுங் (Jung) என்பார் கருத்து. நனவிலி மனத்தின் அடிப்படைச் சக்தி ஆத்மார்த்தமானது. இது சமூகத்தில் நிறைவேறுவதற்கேற்றவாறு ஒருவனது ஆளுமை அமைகிறது என அவர் கருதினார்.

மக்டுகல் கருத்து: ஆளுமை மிகவும் சிக்கலானது என்றாலும், அது இயல்பூக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுகிறது என்று மக்டூகல் (Mc Dougall) கருதுகிறார். ஒருவனிடத்து முக்கியமாகப் பதினான்கு இயல்பூக்கங்கள் இருக்கின்றன ; இந்த இயல்பூக்கங்கள் வெவ்வேறு வழிகளில் தொகைப்பட்டுப் பல பற்றுக்களை (Sentiments) ஏற்படுத்துகின்றன. இந்தப் பற்றுக்களில் தன்மதிப்புப் பற்று (Self regarding sentiment) வெகு முக்கியமாகும். இதை அடிப்படையாகக் கொண்டு எழுவதே ஆளுமை என்பது அவரது கருத்தாகும்.

ஆளுமைக்கு அடிப்படையாக இருப்பவை ஒருவனுடைய இயல்புகள் என்பதை மேற்கூறிய பல்வேறு கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. இந்த இயல்புகள் உடலைச் சார்ந்திருக்கலாம் அல்லது உள்ளத்தைச் சார்ந்திருக்கலாம்; பிறப்பால் தோன்றலாம் அல்லது பண்பாட்டினால் தோன்றலாம்.

ஆளுமைச் சோதனைகள்: ஆளுமை பற்றி உள்ள பலவேறு கருத்துக்களுக்கு ஏற்றவாறு சோதனைகளும் (Tests) வேறுபடும். எனினும் பொதுவாக உளவியலார் கையாளும் ஆளுமைச் சோதனைகள் இங்கு விவரிக்கப்படுகின்றன.

நாம் மனிதனைப்பற்றி அறிய முயலும்போதும், அவனுடைய ஆளுமையைப் பற்றி ஆராயும்போதும் அவனைப் பல்வேறு வழிகளிலும் முறைகளிலும் குறிக்கோள்களோடும் நோக்குகிறோம். சான்றாக, ஆராய்ச்சி செய்ய விழைவோரிடம் பொறுமை, விடாமுயற்சி, அமைதி, ஆராய்ச்சியில் இன்பம் போன்ற இயல்புகளையும், ராணுவத்தில் சேர விரும்புவோர்களிடம் தைரியம், பிறரோடு இயல்பாகப் பழகும் தன்மை, தலைமை தாங்கி நடத்தும் தன்மை முதலியவைகளையும் எதிர்பார்க்கிறோம். இங்ஙனமே ஒவ்வொருவரும் பிறரைச் சந்திக்கும்போது இவர் எத்தன்மையினர், எந்தப் போக்கு உடையவர், என்ன இயல்புகள் உள்ளவர் என்று நோக்குவது இயற்கை. பெரும்பாலான ஆளுமைச் சோதனைகள் மேற்கூறியவைகளை அடிப்படையாகக் கொண்டனவேயாகும். ஆளுமைச் சோதனைகளில் முக்கியமானவை பேட்டி (Interview) முறை, தனியாள் வரலாற்று (Case- History) முறை, மதிப்பீட்டு (Raring) முறை, வினா அறிக்கை (Questionnaire) முறை, சொல்-தொடர்பு (Word-association) முறை, விட்சேப (Projective) முறை எனப் பலவகைப்படும். மனிதனது ஆளுமை மிகவும் சிக்கலானது. எனவே பொதுவாக இவைகளில் ஒன்றுக்குமேற்பட்ட முறைகளையோ அல்லது யாவற்றையுமோ பயன்படுத்துவது வழக்கம்.

பேட்டி முறை : ஆளுமைச் சோதனை முறைகளுள் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சோதனையைச் சிறந்த முறையில் கையாள்வதற்குக் கையாள்பவர் இத்துறையில் மிகுந்த அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். பேட்டி முறை என்பது ஒருவரை நேராகக் கண்டு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு அளவளாவியோ அல்லது குறித்த கேள்விகளைக் கேட்டோ அவருடைய ஆளுமையை அறிவதாகும். பேட்டி முறையைக்கொண்டு அனுபவம் வாய்ந்த உளவியலார் ஒருவரது ஆளுமையைப் பற்றிச் சிறந்த உண்மைகளை அறியலாம். இந்த முறையைப் பெரும்பாலும் பிற ஆளுமைச் சோதனைகளைக் கையாண்ட பின்னரோ, கையாள்வதற்கு முன்போ பயன்படுத்துவது பொதுவான வழக்கம். பேட்டி முறையின் முக்கியமான அமிசம் அதில் 'அளவிடுதல்' (Measurement ) இன்மையாகும். அதாவது பேட்டி முறையைக் கொண்டு ஒருவரது உண்மை பேசும் இயல்பு 40 சதவிகிதம், கோப இயல்பு 25 சதவிகிதம் எனக்கூற இயலாது.

தனியாள் வரலாற்று முறை என்பது ஒருவன் பிறழ்வான (Abnormal) நடத்தையோ அல்லது தன்மைகளோ (Traits) உடையவனாயிருந்தால், அதன் காரணத்தையோ அல்லது காரணங்களையோ அறிய அவனைப் பற்றிய விஷயங்களைச் சேகரிப்பதாகும். இவை பொதுவாக அவனது மூதாதையர், பிறப்பு, வளர்ப்பு. வீட்டின் சூழ்நிலை, பொருளாதாரநிலை, பெற்றோர்கள், நண்பர்கள், உடல்நோய்,பாலைப் (Sex) பற்றி அனுபவம், படிப்பு, தொழில், நுண்ணறிவு முதலியவைகளைப் பற்றியனவாகும். இந்த முறை பெரும்பாலும் மனக்கோளாற்று மருத்துவர்களாலும்(Psychiatrisr), உளப்பகுப்பியலாராலும் (Psychoanalysts) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலத்தில் குற்றவாளிகளை ஆராய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதிப்பீட்டு முறை : ஒருவனது குணத்தையோ இயல்புகளையோ பற்றி விவரிக்கும்போது அவன் சுறுசுறுப்பு வாய்ந்தவன், அச்ச இயல்பு உடையவன் என்று கூறுவதைவிட, சுறுசுறுப்பு இயல்பு 50 விகிதம், அச்ச இயல்பு 36 சதவிகிதம் என்று கூறுவது சிறந்தது அல்லவா? இங்ஙனம் அளவிட்டுக் கூறுவது ஒருவனது ஆளுமையில் எந்த இயல்பு முக்கியமானது என்று அறிவதற்கும், அவனை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வேற்றுமை அளவை அறிவதற்கும் பயன்படும். இவ்வாறு அளவிடுவதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சதவிகிதத்தில் ஏறக்குறைய ஒற்றுமைப்பட்டால் அளவின் மதிப்பு இன்னும் அதிகமான பயன் தருவதாகிறது. மதிப்பீட்டு முறை ஒருவனது இபல்புகளையோ நடத்தையையோ, போக்கையோ ஒரு குறித்த திட்டத்தின்படி குறிப்பதாகும். சாதாரணமாக உளவியலார் பயன்படுத்துவது அளவை (Scale) முறை. அந்த அளவை பூச்சியத்திலிருந்து மூன்றுவரையோ அல்லது ஐந்துவரையோ இருக்கும். ஒருவனது கோபத் தன்மையை அளவிடும்போது 0 என்று குறித்தால் கோபமின்மையையும், 3 என்று குறித்தால் சாதாரண கோபத்தையும், 5 என்று குறித்தால் அதிக கோபத்தையும் குறிக்கும்.

மதிப்பீட்டு முறை தானாக மதிப்பிடும் முறை (Self- Rating) என்றும், பிறர் மதிப்பிடும் முறை என்றும் இருவகைப்படும். 1. மதிப்பிடப்படுவோரின் உருவத்தின் காரணமாகவோ, 2. அல்லது மதிப்பிடும் இயல்புகளைத்தவிர அவருடைய வேறு இயல்புகளையும் அறிந்திருப்பதன் காரணமாகவோ, 3. அல்லது ஒரு இயல்பின் நல்ல மதிப்பை மற்றொரு இயல்பினிடமும் எதிர்பார்ப்பதன் காரணமாகவோ தவறுகள் ஏற்படுவதுண்டு. சான்றாக, ஒருவன் அறிவாளியாக இருப்பதைக் கொண்டு, அவனிடம் உண்மையையும் விடாமுயற்சியையும் எதிர்பார்ப்பதோ அல்லது உண்மையும் விடாமுயற்சியும் உடையவர்களிடம் உயர்ந்த நுண்ணறிவை எதிர்பார்ப்பதோ தவறாகும். இதன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மதிப்பிடும் எண்ணின் மொத்தத்தைக் கொண்டோ அல்லது சராசரியைக் கொண்டோ தீர்மானிப்பதே சரியான முறையாகும்.

வினா அறிக்கை முறை உளவியலார் சாதாரணமாகப்பயன்படுத்தும் அளுமைச் சோதனையாகும். வினா அறிக்கை முறையில் வினாக்கள் அமைக்கும் வகை மிகவும் முக்கியமாகும். ஒருவரிடம் வினாக்களைத் தந்து, உண்டு அல்லது இல்லை என்று விடை மட்டும் கூறும்படி சொல்லுவார்கள்; அல்லது அவ்வினாக்களுக்குப் பல விடைகளை அளித்துத் தமக்குத் தகுந்ததாகத் தோன்றும் விடையை எழுதும்படியோ அல்லது விடைக்குக் கீழே கோடிடவோ அல்லது விடையைச் சுற்றி வட்டமிடவோ சொல்லுவார்கள்.

ஆளுமையின் பல்வேறு இயல்புகளையும் சோதிக்கப் பல்வேறு வினா அறிக்கை முறைகள் உண்டு. நரம்பு நோய்த் தன்மை அறிய ஒருவித வினாக்கள்; அகமுகத்தர் புறமுகத்தர் (Introvert. Extrovert) தன்மைகளை அறிய ஒருவித வினாக்கள் இருக்கின்றன.

நரம்புநோய் உடையவரைக் கேட்கும் வினாக்கள்: குழந்தையாயிருக்கும்போது மற்றப் பிள்ளைகளோடு விளையாடாமல் தனியாக விளையாட விரும்புவது உண்டா? தெற்றுவாய் எப்போதாவது இருந்தது உண்டா?அபாயமான சந்தர்ப்பங்களில் பிரமித்து நின்றுவிடுவது உண்டா? காரணம் இன்றி மகிழ்வதும் வருந்துவதும் உண்டா?

இவை போன்ற வினாக்களுக்குக் கூறும் விடைகளைக் கொண்டு அவருடைய நரம்புநோய்த் தன்மையைக் கண்டுகொள்ளலாம்.

அகமுகத்தர் புறமுகத்தரைக் கேட்கும் வினாக்கள்: கூட்டத்தில் எழுந்து பேசவிரும்புவது உண்டா? உம் கருத்தைப் பிறர் சம்மதிக்கும்படி செய்வதுண்டா? பிறரிடம் எளிதாக நட்புக் கொள்வதுண்டா? பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவது உண்டா? தாழ்வு மனக்கோட்டத்தால் அவதியுறுவதுண்டா? எளிதாக உணர்ச்சி வசப்படுவதுண்டா?

இந்த வினாக்களுள் முதல் மூன்று வினாக்களுக்கு உண்டு என்ற விடை புறமுகத் தன்மையையும், பின் மூன்று வினாக்களுக்கு உண்டு என்ற விடை அகமுகத் தன்மையையும் காட்டும்.

உயர்வு-தாழ்வு (Ascendance-Submission) தன்மையைச் சோதிப்பதற்கு ஆல்போர்ட் (Allport) என்பவர் வகுத்த வினாமுறையும் பிரசித்தி வாய்ந்தது. நரம்புநோய்த் தன்மையை அறியும் வினாமுறை முதன் முதல் வுட்வொர்த் (R.S. Woodworth) என்பவரால் தயாரிக்கப்பட்டுப் பிறகு தர்ஸ்ட்டன், ஹைடுபிரடர் (Heidbreder) போன்றவர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அகமுகத்தர் புறமுகத்தர் வினாமுறையைப் பெரிதும் பயன்படுத்தியவர்களுள் நியூமன்-கோஹலஸ்ட் (Newman - Kohlstd) முக்கிமயமானவர்கள்.

சொல் - தொடர்பு சோதனை (Word-Associar tion) : இதை முதன் முதலில் வகுத்தவர் பிராய்டு என்பவரேயாயினும் அவர் அதை ஆளுமைச் சோதனையாகப் பயன்படுத்தவில்லை. முதன் முதலில் பயன்படுத்தியவர் யுங் என்பவரே. இந்தச் சோதனை பெரும்பாலும் நனவிலி நிலை (Unconscious) யிலுள்ள மனக்கோட்டங்களை (Complexes) அறியவே பயன் படுத்தப்படுகிறது.

சொல் - தொடர்புச் சோதனையில் 75 முதல் 100 வரை சொற்கள் பயன்படுத்தப்படும். இச்சொற்களுக்கு தூண்டற் சொற்கள் (Stimulus words) என்பது பெயர். இவை பொருள்களையும் (Objects), உணர்ச்சிகளையும் (Feelings), உள்ளக்கிளர்ச்சிகளையும் (Emotions) குறிப்பன. சோதனை செய்யவேண்டியவரை உட்காரவைத்தோ அல்லது படுக்கவைத்தோ, ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி, அதைக் கேட்டவுடன், எச்சொல் முதலில் மனத்தில் உதிக்கிறதோ அதைச் சொல்லச் செய்யவேண்டும். தூண்டற் சொல்லைத் தொடர்ந்து எழும் சொல்லிற்குத் துலங்கற் (Response) சொல் என்று பெயர். துலங்கற்சொற்களை எல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவை சாதாரண உளநிலையைக் குறிக்கும் சொற்களா அல்லது பிறழ்வான உளநிலையைக் குறிக்கும் சொற்களா என்று பாகுபடுத்த வேண்டும். சான்றாக, நாற்காலி என்ற தூண்டற் சொல்லுக்கு மேசை என்ற துலங்கற்சொல் சாதாரணமானது. ஆனால் கடல், பூதம், எருமை போன்ற துலங்கற் சொற்கள் எழுமானால் அது மனக்கோட்டத்தைக் குறிக்கும். இந்தச் சோதனையில் துலங்கற் சொற்களைப்போலவே துலங்கற் சொற்களைக் கூறுவதற்கு ஏற்படும் காலமும் முக்கியமானதாகும். மேலும் துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத்தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முதலியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

கனவுப் பசப்புமுறை (Dream Analysis) : ஒருவருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளுமைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப்பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அகமுகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகைகளாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும்.

உடலளவு ஆளுமைச்சோதனை என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்புகளும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர்கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக்கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள்.

விட்சேப சோதனைகள்: ஒருவர் ஒரு சித்திரத்தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக் கொண்டு விவரிக்கும்போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத்திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டினர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும்

காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம்

கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும்.

ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டியிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித்தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவைகளை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்கவாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களையும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங்களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங்களையும் காண்பார்கள். ஆளுமைத் தன்மைகள் இவைகளுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும்.

மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச்

அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப்
படங்களுள் ஒன்று
உதவி : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா.

சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக்குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பதுபோன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப்பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர்களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச்செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து ஆளுமைத் தன்மைகளைத் தீர்மானிப்பார்கள். டி. ஈ. ஷ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆளுமை&oldid=1459048" இலிருந்து மீள்விக்கப்பட்டது